ஜெயமோகனுக்கு ஒரு தனித்த சிந்தனைப் பள்ளி உள்ளதாக சிலர் கருதுகிறார்கள். எனக்குத் தெரிந்து ஜெ.மோ உள்ளிட்ட எந்த படைப்பாளிகளுக்கும் அப்படி ஒரு சிந்தனைப் பள்ளி இல்லை. உ.தா., சு.ரா இலக்கியம் குறித்த நிறைய அபிப்ராயங்களைத் தெரிவித்தார். ஆனால் சு.ராவின் பள்ளியை சேர்ந்தவர்கள் என தமிழில் யாருமில்லை. அவருடைய ஸ்டைலை காப்பியடிக்க முயன்றவர்கள், சிலாகிக்க முயன்றவர்கள் மட்டுமே உண்டு.
ஜெமோ பல விமர்சன மரபுகளை ஒட்டி எழுதுகிறார். லிபரல் ஹியூமனிசம் என்று கூட வகுக்க முடியாது. அவருக்கென்று ஒரு தனித்த இலக்கிய சிந்தனைப் பள்ளி இல்லை. அவருக்கே உரித்த உதிரிக் கருத்துக்கள், பிடிவாதங்கள் உண்டு.
ஜெயமோகனின் கருத்துக்கள் ஒரு பெரிய சந்தையில் உலவும் மனிதர்கள், அவர்களுக்கு என்று ஒற்றை முகமில்லை. அவர்கள் அந்த சந்தைக்கு சொந்தமும் இல்லை.
போகிற போக்கில் அவற்றை school of thought என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவற்றை தத்துவ சரடில் சீராக கோர்க்க முடியாது.
உ.தா., ஜெ.மோவின் இலக்கியப் பார்வையை நவீனத்துவம் என்றும் வகுக்க முடியாது, பின்நவீனம் என்றும் பாத்தி கட்ட முடியாது. அது சில நேரம் நியோ கிளாசிசிசம் அல்லது கற்பனாவாதம் போன்றும் இருக்கும். அவரை இந்து தேசியவாதி என நம்பி பாஜகவில் கூட சேர்க்க மாட்டார்கள். அவர்களிடத்தும் முரண்படுவார்.
பெரியாரியத்தை, அயோத்திதாசர் சிந்தனைகளை, மேற்கில் தெரிதா, நீட்சே போன்றோர் உருவாக்கியதை ஒரு பள்ளி எனலாம்.
ஜெ.மோவின் பள்ளியில் (அப்படி ஒன்று உள்ளதாய் கற்பனை பண்ணினாலும்) ஒரு ஆழமான தனித்துவமான சிந்தனைத் தரப்பை நூலாக எழுதியவர்கள் என யாரும் இல்லை. அவரிடம் உள்ளவர்கள் கருத்தளவில் அவருடன் முரண்படும் அதேவேளை பாணியிலும் ஸ்டைலிலும் அவரை போல செய்யும் ரசிகர்கள். Personality cult என வேண்டுமெனில் இதை சொல்லலாம்.
ஜெயமோகனின் கருத்துக்களின் தாக்கம் என்னிடமும் உண்டு. ஆனால் அதை ஒரு போதும் ஒரு சிந்தனைப் பள்ளி எனச் சொல்ல மாட்டேன்.