கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை நோய்க்குறியைக் கண்டறிந்து, அடையாளங் கண்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிப்பது (test, tract, isolate). ஆனால் இந்தியா போன்ற ஒரு பிரம்மாண்டமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இது சாத்தியமில்லை என்கிறார்கள். இது ஒரு பச்சைப் பொய். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வீடுவீடாகப் போய் வாக்காளர் அட்டைக்காக தகவல் சேகரிக்க நம்மால் முடியும்; அடுத்து தேசிய மக்கள் பதிவேட்டுக்காக அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கொண்ட ஒரு பெரும் படையை மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனும் வீட்டுக்கும் அனுப்பப் போகிறது; அப்போதெல்லாம் சாத்தியமாகும் மனிதவளம் இப்போது மட்டும் இந்த அரசுக்கு இல்லை என்பது ஒப்பந்தத்தை மீறக்கூடாது எனும் அஹிம்சைக் கொள்கைக்காக சீனவீரர்களிடம் உருட்டுக்கட்டையால் அடிவாங்கி நம் ராணுவ வீரர்கள் செத்தார்கள் என்பதைப் போல இருக்கிறது.
135 கோடி பேர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் பொருள் வசதி நமக்கு இல்லை என்பதை ஏற்கிறேன். ஆனால் குறைந்தபட்சம் ஜுரம் உள்ளோரை மட்டுமாவது கண்டடையலாமே. உடல் வெப்பத்தைக் கொண்டு சோதிக்கும் கருவிகளை காவலர்கள் பல இடங்களில் பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது ஒரு மலிவான முறை. இதைப் பயன்படுத்தி ஏன் அரசு தன் படையை வீடுவீடாக அனுப்பி கொரோனாத் தொற்று இருப்பதாய் தெரிகிறவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது?
நோய்த்தொற்று உள்ளோரில் ஒரு பாதி பேருக்கு நோய்க்குறி தெரிவதே இல்லை, தெரியாமல் நோய் வந்து மறைந்து விடும் என்கிறார்கள், சிலருக்கு நோய்க்குறி தெரிய நாளாகும். ஆனால் ஜுரம், சளி, இருமல் என முற்றிப் போன நிலையில் உள்ளோர் உடனே மருத்துவமனைக்கு செல்வதில்லை. என் ஊரில் (தக்கலையில்) ஒரு மருத்துவர் கொரோனாத் தொற்றால் கடுமையாக ஜுரம் கண்டு ஐந்து நாள் தாமதித்து பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி இப்போது சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்; அவரால் ஆஸ்பத்திரி பணியாளர்கள், செவிலிகள் என பலருக்கு நோய்த்தொற்று வந்துள்ளது. வீடுவீடாக சென்று உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் ஒரு அடிப்படையான சோதனையை செய்தால் அரசு இப்போதுள்ள பயங்கர சூழலை ஓரளவு தவிர்க்கலாம். நோய்ப்பரவலின் கடுமையைக் குறைக்கலாம்.
இந்த அரசுக்கு இது தெரியவில்லை என்பதை விட அக்கறையில்லை என்பதே உண்மை. இதுவே தேர்தல் சமயம் என்றால் எவ்வளவு மும்முரமாக எவ்வளவு ஆட்களை இறங்கி எவ்வளவு ஆயிரம் கோடிகளை செலவழித்து வேலை செய்வீர்கள். ஆனால் மக்கள் பேரழிவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது எல்லா அரசுகளும் திண்ணையில் படுத்து குறட்டை விடுகிறீர்கள். சென்னை வெள்ளத்தின் போது பார்த்தோம், ஒக்கிப் புயலின் போது பார்த்தோம், இப்போது இதோ ஒரு பெருந்தொற்று காலத்திலும் பார்க்கிறோம். உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.
பெருந்தொற்றுச் சூழலுக்கு அரசு தயாராக இல்லை, அதற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை, வலுவில்லை, தடுமாறுகிறது போன்ற வாதங்களை நம்பாதீர்கள். தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஊழல்-தேர்தல்-அதிகாரம் போன்றத் தேவைகள் மட்டுமே கும்பர்கர்ணனை எழுப்புகிறது. மற்ற சமயங்களில் குறட்டை.