Skip to main content

இலக்கியத்தில் அரசியல் உண்டா? - குறிப்புகள்

(“திரள்” அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் நான் நிகழ்த்திய உரையின் குறிப்புகள்)



இலக்கியம் மக்களுக்கானதா அல்லது நுட்பமும் ஆழமும் மட்டுமே இலக்கியத்தின் நோக்கமா? கலை மக்களுக்காகவா, அல்லது கலை கலைக்காகவா?


இந்த கேள்வி ரொம்ப பழையது - கடந்த ஒரு நூற்றாண்டில் இக்கேள்வி காலாவதியாகி குப்பைத்தொட்டிக்கு சென்று விட்டது. கலை என்பது ஒரு மறுக்க முடியாத, முழுமுதலான மானுட உண்மையைப் பேசுவது எனும் நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது. இப்படி நம்பியவர்களில் இந்த உண்மையானது ஆன்மீக விடுதலைக்கு, மகிழ்ச்சிக்கானதா அல்லது மக்கள் விடுதலைக்கானதா (அகவயமானதா புறவயமானதா?) எனும் இரு முகாம்களாக பிரிந்து போரிட்டனர். இது தத்துவத்தில் சாக்ரடீஸ் காலத்தில் இருந்தே இருந்து வரும் பஞ்சாயத்துதான்


இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்த பார்வை ஒரு முடிவுக்கு வந்தது; உலகம் முழுமுதல் உண்மைகளை நிராகரிக்க ஆரம்பித்தது. அப்போது மொழியியல், அமைப்பியல் அறிஞர்கள் அனைத்தும் மொழியாலானது என வாதிட்டனர். எப்படி அர்த்தம் தோன்றுகிறது, அதன் அமைப்பு என்ன எனக் கேட்டார்கள். இந்த கோணத்தில் இருந்து இலக்கியத்தை அணுகினார்கள். இலக்கியத்தில் மானுட நேயம், தர்மம், அறம், சரி, தவறு, அன்பு, வெறுப்பு போன்றவையெல்லாம் இல்லை, அவை வெறும் குறிப்பான்களால் ஏற்படுத்தப்பட்ட ஒருதோற்ற மயக்கம்என்றார்கள். ஏழை என்றால் அது அச்சொல்லின் சப்தத்தால் உணர்த்தப்படும்ஏழைத்தன்மைஎன விளக்கினார்கள். இந்த ஒலி இல்லையென்றால் ஏழையே இல்லை. மொழி என்பது ஒரு பெரிய எந்திரம் - சிறு திருகாணிகள், பற்சக்கரங்கள் கச்சிதமாய் பொருத்தப்பட ஒரு எந்திரம்

இந்த பார்வையை இயல்பாகவே இலக்கியம் என்பது அரசியலே, மக்கள் விடுதலைக்கானதே எனக் கோரும் விமர்சகர்கள் ஏற்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் மார்க்ஸிய முகாமில் இருந்தார்கள். மார்க்ஸியர்கள் தொடர்ந்து முன்வைத்த ஒரு வாதம் உற்பத்தியில் ஈடுபடும் மக்களை அடிமையாக வைத்திருக்க பணக்கார, அதிகார வர்க்கம் பயன்படுத்தும் கருவியே மொழி, கலை, கலாச்சார இயக்கங்கள் என்பது. மார்க்ஸ் இதை நம்பினார். ஒவ்வொரு அதிகாரக் கரமும் ஒன்று வன்வடிவமோ (போலீஸ், ராணுவம், அரசு அலுவலகம்), அல்லது மென்வடிவமோ (கல்வி அமைப்பு, மதம், கலை, ஊடகம், குடும்பம்) எனத் தோன்றும் என அல்தூசர் கூறியது இந்த கருத்தை விரித்தெடுத்து உருவான பிரசித்தமான ஒரு பார்வை.

ஆனால் மென், வன் அதிகார வடிவங்கள் எல்லாமே குறிப்பான்களால் அமைந்தவை எனும் போது கலை-சமூக இருமை இல்லாமல் ஆனது. அரசியல்-அரசியலற்றது எனும் எதிரெதிர் முகாம்களின் இருப்பு கவலைக்குரியதானது.



இதற்கு அடுத்து மார்க்ஸிய பாதையில் வரலாற்றை ஒரு அதிகாரக் கட்டமைப்பாக பார்க்கும் ஒரு போக்கை உருவாக்கினார் மிஷல் பூக்கோ. அவருக்குப் பிறகே எல்லாம் அரசியல் தான், அரசியலின்றி இங்கு ஒன்றுமே இல்லை எனும் இடத்துக்கு உலகம் வந்து நின்றது. அரசியல் என்றால் பூக்கோவின் மொழியில் அதிகாரப் பரிமாற்றம் எனப் பொருள். அவர் power play எனும் பதத்தை பயன்படுத்தினார் - இங்கு play என்றால் ஆட்டம், நாடகம் எனப் பொருள் இல்லை. அதிகார பயன்பாடு, அதிகாரத்துடனான உறவாடல், அதிகார விளையாட்டு என்றும் பொருளில்லை. Play என்றால் சற்று லூசாக, சரியாகப் பொருந்தாமல் லொடலொடவென ஒரு எந்திரப்பகுதி இருக்குமே அதுதான் play. ஏற்கனவே அமைப்பியல்வாதிகள் மொழியை ஒரு கச்சிதமான எந்திரமாகப் பார்த்தார்கள் என்றேன் அல்லவா, இதற்கு ஒரு மறுப்பாகத் தான் பூக்கோ சமூகத்தை உள்பாகங்களின் திருகாணிகள் லூசாகி விட்ட ஒரு லொடலொட எந்திரம் எனப் பார்க்க ஆரம்பித்தார். இந்த பாகங்கள் பிசிறின்றி ஒட்டியோடும் போது அதனால் எந்திரம் பயனடையும், வேலை செய்யும், ஆனால் அவை லூசாகும் போது பாகங்களுக்குள் ஆற்றல் ஒழுகி ஓடும், எந்திரத்தின் மையத்துக்குப் போகாது. சமூகத்திலும் அதிகாரம் இப்படியே இருக்கிறது என பூக்கோ கூறினார் - ஒரு கருத்து வழியாக ஒரு அதிகாரம் நிறுவப்படும் போது அதை பலவீனப்படுத்தும் ஒரு கருத்தாடலும் கூடவே தோன்றுகிறது. இரண்டுக்கும் இடையே ஒரு அதிகாரப் பரிமாற்றம் நிகழ்கிறது; இரண்டும் ஒன்றையொன்றை ரத்து செய்தபடியே தக்க வைக்கவும் முயல்கின்றன. அதிகாரம் ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் ஆறாக, சிற்றாறுகளாக, கிளை நதிகளாக, ஓடைகளாக பரவுகிறது. இதற்கு ஒரு உதாரணமாக பூக்கோ ஒரு நிறுவனத்தின் முதலாளியிடம் கீழ்நிலை ஊழியராக உள்ள ஒருவர் ஒரு பக்கம் முதலாளியைக் கண்டு அஞ்சி மதிப்பைக் காட்டியபடி தன் சகாக்களுடன் கதையடிக்கும் போது அதே முதலாளியை கலாய்ப்பதைக் குறிப்பிடுகிறார். இன்றைய சமூகவலைதளங்களின் மீம்களை பார்த்தால் பூக்கோ வெகுவாக மகிழ்ந்திருப்பார்


பூக்கோ அவர் காலத்தைய (தெரிதா, டெலூஸ், கொத்தாரி, லக்கான், ஹைடெக்கர், ஹெலன் சிக்ஸூ ஆகிய) பின்னமைப்பியல் சிந்தனையாளர்களைப் போன்றே சிந்தித்தார் (அவர்களுடன் அவர் மாறுபட்டாலும் கூட). அர்த்தங்களும், அர்த்தங்களால் அதிகாரமும் நிலையாக இருப்பதில்லை, அவற்றுக்கு சாரம் இல்லை என்பதே அவர்களின் வாதமாக இருந்தது

இப்போது ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் பல தரப்பிலான மக்கள் அதிகாரங்களின் மோதல் களமாக, மோதி மோதி இந்த அதிகாரங்கள் அழிந்து மீளத்தோன்றும் ஒரு பரப்பாக மாறியது. (பின்னை-மார்க்ஸிய இலக்கிய விமர்சனம் குறித்து நாம் பேச ஆரம்பித்தோம்.) இப்போது சமூகம் மட்டுமே அரசியல் களமல்ல, இலக்கியமும் தான், அதாவது நேரடியாக மக்கள் விடுதலையைப் பேசாத ஒரு படைப்பும் கூட அரசியல் களமாகி விடுகிறது. இலக்கியம் இலக்கியம் மட்டுமல்ல, அது ஒரு சாதாரண உரையாடல் மட்டுமே, மொழிக்குள் எந்த அதிகார பரிமாற்றமும் - அது படைப்பூக்கம் பெற்று அனைத்தையும் புலப்படுத்தும் போது - இலக்கியமாகலாம் எனும் இடத்துக்கு வந்தோம்.

 இதன் நீட்சியாகத் தான் தமிழில் செய்திக்கட்டுரைகள், நாட்குறிப்புகள், அரசியல் பிரச்சாரங்கள், விளம்பரங்களின் மொழியில் இலக்கியத்தை எழுதிப் பார்க்க ஆரம்பித்தார்கள். எதார்த்தத்தின் இடத்தை மாய-எதார்த்தவாதம் எடுத்துக்கொண்டது. இலக்கியத்துள் ஒரு தரப்பை வலுவாக வைத்து பிரச்சாரம் செய்யலாம், எழுத்தாளனின் குரல் வெளிப்படலாம், அனுபவத்தை நேரடியாகவே எழுதலாம், கலையாக அதை உருமாற்ற, அபிப்ராயங்களை மறைக்க அவசியமில்லை எனக் கூறத் தொடங்கினோம். விளிம்புநிலை இலக்கியம் என்பது விளிம்புநிலைக் குரலுக்காகவே முக்கியத்துவம் பெற்றது, அக்குரலும் இலக்கியமும் வேறுவேறல்ல என்றோம். இலக்கியம் மட்டுமல்ல அரசியலும் உருவாக்கப்படுகிற ஒன்றுதான், அது பல சுயமுரண்களால் உருவானது, அதற்கு என உறுதியான அடித்தளம் இல்லை என்றோம் (அடித்தளமே பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முரணான நிச்சயமற்ற காரணிகளால் கட்டப்பட்டிருப்பதால்).

அதாவது நடைமுறை, கட்சி அரசியல் என்பது அரசியல் அல்ல என இன்று ஒரு குழந்தை கூட சொல்லி விடும். அரசியலின் பொருளே இன்று மாறி விட்டது. மற்றொரு தரப்பை நோக்கி சிந்திப்பவை, சொல்பவை, செய்பவை அனைத்தும் அரசியல்தாம். கலை இந்த அரசியலின் மற்றொரு பகுதி - பல தூய இலக்கிய விமர்சகர்களால் ஜீரணிக்க முடியாத பார்வை இது.


முன்பு சிறுபத்திரிகை, தீவிர கலை-சார்பு இலக்கியவாதிகள், முற்போக்கு எழுத்தாளர் குழாமை சேர்ந்த மக்கள்-விடுதலைத் தரப்பு இலக்கியவாதிகள் என ஒரு எதிரிணை இருந்தது. அது இன்று நொறுங்கி விட்டது. உடலைப் பற்றி, உணவைப் பற்றி, நோய்மையைப் பற்றி, கட்டற்ற இச்சையைப் பற்றி, பித்துநிலையைப் பற்றி, சமூகத்தைப் பற்றி, தன்னைப் பற்றி நேரடியாக இன்று சித்தரிக்கப்படும் எதுவும் இலக்கியமாகவும் அரசியலாகவும் ஒரே சமயம் இருக்கிறது.


எல்லாமே அரசியல் என்றால் எது கலையாகிறது?

எந்த அரசியல் பிரதியில் உள்முரண்கள் வலுவாக இயங்குகின்றனவோ அதுவே நம்மை அதிகம் தொந்தரவு செய்கிறது, அதுவே கலையாகிறது.

இமையத்தின் பல சிறுகதைகள், குறிப்பாக அவர் தலித்-மத்திய சாதி மோதல்களை சித்தரிக்கும் கதைகள், இதற்கு நல்ல உதாரணம். “எங் கதெயில் அவர் ஒரு தலித் ஆணை வன்முறையான, முரட்டுத்தனமான நிலையை எடுக்கும் பாத்திரமாக்குகிறார், ஒரு மேற்சாதி பெண்ணை பாதிக்கப்பட்டவள் ஆக்குகிறார்; அதே நேரம் இந்த பெண்ணின் மேல்சாதி அதிகாரம் அவளது பாதிக்கப்பட்ட நிலைக்குள் வெளிப்பட்டு அவளை ஒடுக்குகிறவளாக மாற்றுவதையும் காட்டுகிறார். இந்நாவல் நம்மவர்களை தொந்தரவு செய்தது, அதிகமான சர்ச்சைகளை பெண்ணியவாதிகள் இடையே ஏற்படுத்தியது. இதுவே பூக்கோ சொல்லும் play. இதுவே ஒரு நல்ல அரசியல் பிரதி - மறுக்க முடியாத ஒரு அரசியல் உண்மையை முன்வைக்கிற ஒரு பிரதியல்ல நல்ல அரசியல் பிரதி.


குட்டிரேவதியின் கவிதைகளில் நாம் ஒரே சமயம் நெகிழ்வான, தர்க்கத்தை மீறிய பெண் இருப்பையும், இச்சைக்கும் தர்க்கத்தும் உடன்படுகிற ஒரு ஆண் பார்வையையும் பார்க்கிறோம். குட்டிரேவதியின் கவிதைகளில் உள்ள ஆண் நோட்டம் (male gaze) அதிலுள்ள பெண்மையின் பரவசத்தால் தொடர்ந்து ரத்து செய்யப்படுகிறது. மனுஷ்யபுத்தினின்காதலின் நூறு சம்பவங்கள்மற்றொரு உதாரணம்.


அதிகாரத்தை எதிர்கொள்ள சிறந்த வழி அதிகாரத்துடன் விளையாடுவது, அதிகாரத்தை பல முரண்களால் குழப்புவது, அதன் டயர்களை பஞ்சராக்குவது, அது முன்வைக்கிற எதிரிடைகள், இருமைகளை காலி செய்வது என இன்று நம்புகிறோம். கெட்ட அதிகாரத்தை அழித்து விட்டு அங்கு நிரந்தரமாய் ஒரு நல்ல அதிகாரத்தை அமர்த்தலாம் என நாம் இன்று நினைப்பதில்லை. எந்த இருமையுமற்ற ஒழுக்குநிலையே இன்றைய சமூக அரசியல் மற்றும் கலைத் தேட்டமாக இருக்கிறது.



இப்படி நாம் இன்று அரசியலை முழுக்க வேறொரு பொருளில், நோக்கத்தில் பயன்படுத்துகிறோம்.   

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...