இன்று “நாயகன்” படத்தின் ஒரு பகுதியை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன் - அப்போது தான் இதற்கும் “காலாவுக்குமான” ஒற்றுமை மீண்டும் நினைவுக்கு வந்தது. இப்போது இது வெறும் ஒற்றுமை அல்ல, ஒரு அரசியல், மீள்-சொல்லலின் அரசியல் எனப் பட்டது.
பின்நவீனக் கதையாடல்களில் இப்படி மீள்சொல்வதற்கு ஒரு தனி இடம் உண்டு - இரண்டிலுமே தாராவியை நவீனப்படுத்தி சேரிகளை அப்புறப்படுத்தி அடித்தட்டு மக்களை வெளியேற்ற முயலும் பண முதலைகளை நாயகன் எதிர்க்கிற காட்சி உண்டு; இரண்டு படங்களின் திரைக்கதையிலும் இதுவே மையக்காட்சி (key incident). ஒரு மத்திய சாதி ஆள் தாதாவாகி அங்கு அதிகமாய் வசிக்கும் தலித்துகளைக் காப்பாற்றுகிறார் என்பதில் ஒரு போலியான அரசியல் வருகிறது. அப்படி ஒரு மானுடநேயத்தை முன்னிறுத்தும் போது பாதிக்கப்பட்ட மக்களின் agencyஐ மணிரத்னம் “நாயகனில்” பறித்து விடுகிறார். அதை மீட்டெடுப்பதே “காலா”. அங்கு தலித்துகளுக்கு ஒரு தலித் தலைமை அமைகிறது. அவர்களின் விடுதலையும் சாதி ஒருங்கிணைப்பில், ஒற்றுமையில், சுயமரியாதையில் பிறக்கிறது.
வேலு வேலுபாய், வேலு நாயக்கர் ஆகும் முன்பு அங்கு ஒரு லோக்கல் தலைவர் இருப்பார் (விஜயன்). அவர் பணம் வாங்கிக்கொண்டு சோரம் போவார். அவரைப் போன்றே அரசியல் தலைவர் ஒருவர் காலாவிலும் வருகிறார். மனைவியும், மகனும் கொல்லப்படுவது, அதன் துயரமும் “காலாவில்” மீள வருகிறது. ஆனால் மனைவி மீதான காதல் “காலாவில்” இன்னும் எதார்த்தமாக, கருணையை, மானுட நேயத்தை மீறின ஒரு புரிந்துணர்வாக, நேசமாக, சஞ்சலங்களும் தடுமாற்றங்களும் கொண்ட தாம்பத்ய பந்தமாக காட்டப்படுகிறது. கணவனின் அரசியலைப் புரிந்த, நடைமுறையில் களத்தில் இயங்குகிறவராக மனைவி காட்டப்படுகிறார். அதே போல நாயக்கரின் பிள்ளைகளைப் போல விடலைத்தனமாக, தந்தையிடம் இருந்து விலகி நிற்பவர்களாக “காலாவின்” மகன்கள் இல்லை - அவர்கள் தொடர்ந்து அரசியல் களத்திலேயே நிற்கிறார்கள், போராடுகிறார்கள்.
ஒரு மிக முக்கியமான காட்சியாக எனக்குப் பட்டது “அந்திமழை மேகம்” பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு ஷாட் - நாயக்கரின் முன்னே வந்து நிற்கும் ஒரு சிறுவன் சிவப்பு வண்ணப்பொடியை அவர் மீது தேய்க்கிறான். அங்கிருந்து பாட்டு - விநாயக சதுர்த்திக் கொண்டாட்டம் - தொடங்குகிறது. இந்த சதுர்த்திக் கொண்டாட்டத்தின் அடிப்படையிலே இந்துத்துவ அணிதிரட்டல்கள் அங்கு நடந்தே என நமக்குத் தெரியும். மணிரத்னம் இந்த மத அரசியலை கவனிப்பதில்லை அல்லது போகிற போக்கில் திணித்தபடி செல்கிறார்.
21 வருடங்களுக்குப் பிறகு இந்த அரசியலுக்கு ரஞ்சித் ஒரு பதில் அளிக்கிறார் -
இதே போன்ற ஒரு ஷாட் “காலாவின்” கிளைமேக்ஸ் காட்சியில் வருகிறது. வில்லன் ஹரிதேவ் அபயங்கர் பூமிபூஜை நடத்த வர, ஒரு சின்னஞ்சிறு சிறுவன் அவரிடம் வந்து கறுப்பு வண்ணப்பொடியை அவர் மீது வீசி அவரது வெள்ளையாடையை கறுப்பாக்குகிறான். தொடர்ந்து அங்கு குழுமியிருக்கும் மக்கள் அதே போல கறுப்புப் பொடியை அவர் வீசுகிறார்கள். அந்த பகுதியே கறுப்பு வண்ணத்தால் சூழப்படுகிறது. வில்லனும் அவரது அடியாட்களும் குழம்புகிறார்கள், அஞ்சுகிறார்கள், அழிகிறார்கள்.
இந்த கறுப்பு வண்ணம் என்பது காலாவின் நிறம், காலத்தின் நிறம், கறுப்பு என்பது அனைத்தையும் உள்ளடக்கிய நிறம், அதற்குள் வெளிச்சம்-இருட்டு, நன்மை-தீமை, சுத்தம்-அசுத்தம் எனும் இருமைகள் இல்லை. கறுப்பு எதிர்-அரசியலின் நிறம்; ஹரி தாதாவினுடயது வெண்மையின் அரசியல், தூய்மையின், பிராமணத்துவத்தின் அரசியல், அது ஒரு முடிவுக்கு வரப் போகிறது என்பதை இந்த கருமையின் பிரவாகம் காட்டுகிறது; அடுத்து நீலப்பொடிகள் தூவப்படுவதை ரஞ்சித் காட்டுகிறார். கருமை நீலமாக மாறுகிறது. இது விடுதலை அரசியலின் எதிர்காலத்துக்கான உருவகம். சிவப்புப் பொடியின், மதச்சடங்கின் நிறத்தை, ஒரு சிறிய காட்சித்துளியை எடுத்து அதை எப்படி ஒரு மகத்தான கிளைமேக்ஸின் விஷுவலாக ரஞ்சித் மாற்றியமைத்து மீள்கதையாக்கம் செய்கிறார் பாருங்கள்!
ஒரு மக்கள் சமூகத்தின் போராட்ட வாழ்வை மணிரத்னம் மத்தியவர்க்க சிக்கல்களுக்கு ஆட்பட்ட நாடகமாக்கி, சாதி, அரசியல் நீக்கம் செய்யும் போது, ரஞ்சித் அதையே தனதான அரசியலுக்குள் வைத்து மீளச் சொல்லுகிறார். அதற்கான விஷுவல் குறிப்புகளாக மேற்சொன்ன சில காட்சிகளை படமெங்கும். விட்டுச் செல்கிறார்.
ஒரு மகத்தான கலைஞன்!



