ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.
ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.
கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.
தேர்தல் முடியும் போது,
அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0
கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.
ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.
கிட்னி பத்திரம்!
