ரஜினி உடல்நலமின்மையால் அரசியலுக்கு வரவில்லை என்பது சுத்தப் புளுகு என நினைக்கிறேன். அது தெரியும் என்பதாலே பாஜகவினர் புலம்புகிறார்கள். பிரவீன் காந்த் கூட ரஜினியின் அறிவிப்புக்கு ரத்தக்கொதிப்பு காரணமல்ல என்கிறார். ஏன் புளுகு என்பதற்கான சில நடைமுறை நியாயங்களைப் பார்ப்போம்:
1) ஆம், ரஜினி ஒன்றும் புரூஸ் லீ இல்லை. ஆனால் அதே நேரம் இன்றைய நிலையில் அவர் ஊர் ஊராகப் பயணித்து மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. காணொலி மூலமாக அவ்வப்போது அறிவிப்புகளை விட்டால் போதும். அவர் நீண்ட நேரம் பேசினால் அது அவருக்கே பாதகமாகும் என்பதால் சுருக்கமாக ஒன்றிரண்டு வசனங்களைப் பேசி விட்டு மிச்ச வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சியை நடத்தும் மாஜி பாஜக தலைவர்கள், தமிழருவிகளிடம் விட்டு விடலாம். ஆக, உடல்நிலை காரணமாக விலகுகிறேன் என்பது இந்த இணைய அரசியல் காலத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
2) சன் நியூசில் குணசேகரன் கேட்டதைப் போல இந்த உடற்பிரச்சனைகள், கொரோனா ஆபத்து எல்லாம் முன்பே இருந்தது. ஒருநாள் பி.பி எகிறினதும் ஏன் ரஜினி வேலியை எகிறிக் குதித்து ஓட வேண்டும். ஆக இந்த முடிவுக்குப் பின்னால் ஏதோ அரசியல் / பொருளாதாரக் காரணம் இருக்கிறது. அதை நியாயப்படுத்தவே அவர் இரண்டு நாள் அட்மிட் ஆகி மருத்துவ சான்றிதழ் எல்லாம் வாங்கி இருக்கிறார். என்னதான் வளர்ந்து கழுதை வயசானாலும் ரஜினி ஒரு குழந்தை தான்.
3) ரஜினியின் முடிவுக்குப் பின்னால் பாஜக கொடுத்த அழுத்தம் தான் என்கிறார்கள். இது சரியாக இருக்க முடியாது - ரஜினி எப்போதுமே பாஜகவுக்கு இணக்கமானவர். அவர்களது மனதை நோகடிக்கக் கூடாது என தாங்குவாரே தவிர அவர்களை நினைத்து அஞ்சவோ எரிச்சலாகவோ மாட்டார். மாறாக, இதன் பின்னால் அதிமுக தலைமை இருக்கலாம். ரஜினி களத்தில் இருந்து நீங்கியது அதிமுகவுக்கே பெரிதும் பயனளித்துள்ளது. இனி சசிகலாவை களமிறக்கி மட்டுமே பாஜகவால் அதிமுகவை கழுத்தை நெரிக்க முடியும். சசி எனும் அஸ்திரமும் எந்தளவுக்கு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்குமென சொல்ல முடியாது. ஏவின ஆளையே வந்து தாக்கினாலும் தங்கலாம். இப்போதைக்கு சீட் பேரத்தில் அதிமுகவின் கையே ஓங்கியிருக்கிறது. 20 இடங்களை பொத்திக் கொண்டு வாங்க வேண்டியது தான். பாஜகவை இதுவே கடுப்பேற்றியிருக்கும் - தப்பான நேரத்தில் ரஜினி கைவிட்டதில் தாமரை சகதியில் விழுந்து விட்டது. ஆனால் எடப்பாடியார் எதைக் காட்டி “அண்ணாத்தையை” மிரட்டியிருப்பார் என்பது தான் தெரியவில்லை.
4) வீட்டில் உட்கார்ந்து காணொலியில் பிரச்சாரம் பண்ணுவதற்கு இல்லாத உடற்தகுதி ரஜினிக்கு படம் நடிக்க மட்டும் இருக்கிறதா? அவர் “அண்ணாத்த” படபிடிப்பில் இருந்து பின்வாங்கவில்லை, கவனியுங்கள்.
5) கமல் எத்தனையோ தப்பான படங்களில் ரிஸ்க் எடுத்து பணத்தைக் கொட்டி சொதப்பி இருக்கிறார். எந்தளவுக்கு என்றால் வலது காலை வைத்தால் கையால் தங்கிக் கொள்வார்கள், இடது கால் என்றால் கண்ணிவெடி எனச் சொன்னால் அவர் இடதுகாலை தான் வைப்பார். அப்படித்தான் அவர் அரசியலிலும் களம் இறங்கினார். கமலின் இந்த ரஸ்கைப் போல ரிஸ்கைக் கடிக்கும் தெகிரியம் தலைவருக்குக் கிடையாது. அவர் மிக மிக யோசித்து தான் படத்தேர்வுகளையே செய்வார்.
ரஜினி அவ்வளவாக ரிஸ்க் எடுக்க விரும்பாத மத்திய வர்க்க மனநிலை கொண்டவர் என்பார்கள். அதனால் தான் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம் என சந்துபொந்தில் எல்லாம் புகுந்து வரி ஏய்ப்பு பண்ணுகிறார். அந்தளவுக்கு “கஞ்சம்”. அவர் தன் “எதிர்கால” திரைவாழ்வு அரசியலினால் பாதிக்கப்படக் கூடாது என நினைக்கலாம். எப்படியும் ஏதாவது ஒரு கழகக் கட்சியே ஆட்சிக்கு வரும். எதற்கு மூன்று மாத பிரச்சாரத்தினால் இரண்டு தரப்பையும் பகைத்து தன் படவெளியீட்டை முடக்க வேண்டும் என கொஞ்சம் அற்பமாகவே கவலைப்பட்டிருக்கலாம்.
எது எப்படியோ ரஜினியின் பின்வாங்கல் தான் 2020இன் மிகச்சிறந்த சேதி.
(அ) இனி அவரது அரசியல் உளறல்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் (உளறத் தான் போகிறார்) நடிப்பை ரசிக்கலாம்.
(ஆ) பேரங்களில் பாஜகவின் கரம் தாழ்வது எப்போதுமே தமிழகத்துக்கு நலன் பயக்கும்.
