என் வாசிப்பு நாய் வாயை வைத்ததைப் போன்றது. தினமும் ஏதாவது ஒரு புதுப்புத்தகத்தில் சில பக்கங்கள் மேய்ந்து விட்டு அதை மறந்து வேறொரு விசயத்துக்குள் போய் விடுவேன். இவ்வருடமும் அப்படித்தான்.
Storytel ஆப் ஒரு பெரிய கொடுப்பினை - இரவு சில மணிநேரங்களில் அதில் ஒலிப்புத்தகங்களைக் கேட்டு விட்டு தூங்கி விடுவேன். அந்த புத்தகங்களிலும் நான்கைந்து மட்டுமே முழுதாய் முடித்திருப்பேன். நேற்று மைக் பிரெயர்லியின் Art of Captaincy நூலில் சில அத்தியாயங்களைக் கேட்டேன். அதற்கு முந்தின நாள் சக் பலானுயிக்கின் Snuff. அதற்கு முந்தின தினம் வி.எஸ் நைப்பாலில் Enigma of Arrival. அதற்கு முந்தின நாட்கள் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை 80% கேட்டு முடித்தேன். (அரவிந்தனின் வாசிப்பில் ஏதோ அவரே காதுக்குள் வந்து கதை சொல்வதைப் போல வித்தியாசமான அனுபவம்.) அதற்கு முந்தின நாட்கள் “பசித்த மானிடம்”, “ஆகாயத் தாமரை” ஆகிய நாவல்களை பாதி கேட்டேன். நேற்று ஒரு கட்டுரைக்காக டெலூஸைப் புரட்டியதில் இன்று திடீரென இமானுவல் கேன்ட் பற்றி படிக்க ஆசை வந்து ஒரு ஒலிப்புத்தகத்தை திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படியே தாவிக்கொண்டிருப்பேன்.
புத்தகங்களை கேட்பதில் ஒரே சிக்கல் வாசிப்பு வேகம் சற்று மட்டுப்படும் என்பதே. ஆனால் சுகானுபவம். Storytel ஆப்பை நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். மாதத்துக்கு 299 சந்தா.
1) இது போக, ஐபேடிலேயே பி.டி.எப் வடிவில் நூல்களைத் தரவிறக்கி வாசிக்கிறேன். அவசர வாசிப்புக்கு இது உகந்தது.
2) இவ்வருடம் நான் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை விட அரசியல், சமூகக்கட்டுரைகளே அதிகமாய் படித்திருக்கிறேன். அதே போல இவ்வருடம் அச்சுநூல் வாசிப்பு பெருமளவு குறைந்து போனது.
3) டிவி அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது வாசிப்புக்கு இழப்பு தான். முன்பு மிக அதிக நேரம் பல்கலைக்கழகத்தில் இருப்பதால் டிவியோ யுடியூபோ பார்ப்பது 1-2 மணிநேரங்களே. இப்போது அது தலைகீழாகி விட்டது.
நான் வாசிப்பை (1) பொழுதுபோக்கு, (2) அறிவுப்பயிற்சி, (3) உடனடித் தேவைக்கானது என பகுத்துக் கொள்வேன்.
1) அரசியல் சமூக அபுனைவு இதற்குள் வந்து விடும். இலக்கிய புனைவு, இலக்கியமற்ற புனைவு, வம்பு எழுத்து எல்லாமும் தான். அதாவது மூளைக்கு சவால் அளிக்காத எழுத்து.
2) சுலபத்தில் வாசிக்க முடியாத எழுத்து - பெரும்பாலும் தத்துவ புத்தகங்கள். இதை ஒன்று துணை நூல்கள் மூலமாக வாசிப்பேன். அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கூகிள் மீட் முலமாக வாசிப்பேன். விவாதித்து யோசித்து வாசிப்பது எனக்குப் பிடித்தமானது. சிந்தனைக்கு, எழுத்துக்கு ஆழம் சேர்ப்பது இவ்வகையான வாசிப்பு. அதிகமாக நாளிதழ் கட்டுரைகள் படிக்கிறேன் எனத் தோன்றினால் சில நாட்கள் அதை நிறுத்தி விட்டு தத்துவம் பக்கமாய் கரை ஒதுங்கி விடுவேன்.
3) ஒரு புத்தகமோ கட்டுரையோ எழுதுவதானால் அதை ஒட்டி வாசிப்பை அமைத்துக் கொள்வேன். உ.தா., முராகாமியை சில மணிநேரம் வாசித்து விட்டு எழுத ஆரம்பித்தால் மூட் செட்டாகி விடும்.
இந்த வருடமும் இப்படித்தான் என் வாசிப்பு போனது. வாசிப்பை நான் சாப்பிடுவது, உச்சா, கக்கா போவது, குளிப்பது போலத்தான் பார்க்கிறேன். அதை மகத்துவப்படுவது எனக்குப் பிடிக்காது. அதே போல நிறைய வாசிப்பதால் ஒருவர் மேலானவரோ, கூடுதல் புத்திசாலியோ ஆக மாட்டார், வாசிப்பினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும் (ஆசான் சொல்வதைப் போல) ஏற்க மாட்டேன். சாப்பிட்டு, கக்கா போய், குளித்ததால் நீங்கள் மேம்பட்டு விட்டீர்களா? வாசிப்பும் அப்படியே. அது இருப்பின் ஒரு பகுதி. வாசிப்பதால் கூடுதலாய் நீங்கள் உருப்படவும் மாட்டீர்கள், உருப்படாமலும் போக மாட்டீர்கள். ஒன்றுமே படிக்காமல் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்களைத் தெரியும், நாளிதழ் கூடப் படிக்காமல் பெரும் லௌகீக வெற்றி பெற்றவர்களையும் நேரடியாகக் கண்டிருக்கிறேன். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் எனச் சொன்னவர் நம் முதல்வர் ஆகவில்லையா?
வாசிப்பு நம் மூளைக்கு நாம் அளிக்கும் மசாஜ் அல்லது “உடற்பயிற்சி” அல்லது ரெண்டுமே. அதைத் தாண்டி தெய்வீகமாய் ஏதோ இருக்கிறது எனச் சொல்கிறவர்களை நம்பாதீர்கள்.