இவ்வளவு கொடுமைகள் செய்தும் ஏன் மக்களில் ஒரு சாரார் ஏன் பிடிவாதமாக பாஜகவை ஆதரிக்கிறார்கள் என முற்போக்காளர்கள் அடிக்கடி வியப்பதுண்டு. அதற்கு பலவிதமான காரணங்கள் உண்டெனிலும் மிக முக்கியமானது மதம் தான். காங்கிரஸால் பண்ண முடியாத ஒன்றை பாஜக வெளிப்படையாக பண்ணுகிறது, அது தன்னை பெரும்பான்மை இந்துக்களின் மதப்பிரதிநிதியாக வெளிப்படையாக காட்டுகிறது, நம்ப வைக்கிறது. இதை சரியாக செய்து விட்டால் உங்களை சுலபத்தில் யாரும் கேள்வி கேட்கவோ அசைக்கவோ முடியாது.
இதுவரை நமது கார்ப்பரேட் சாமியார்கள் பற்றி என்னவெல்லாமோ கொடுமையான சர்ச்சைகள் வந்துள்ளன. ஆனால் அதனால் அவர்களுடைய பக்தர்களின் எண்ணிக்கை சிறிதும் குறைந்ததில்லை. ஓஷோ வாங்க என அழைத்ததும் எல்லாவற்றையும் உதறி விட்டு மக்கள் இந்தியாவில் இருந்து அவர் பின்னால் அமெரிக்கா வரை சென்று உயிரைக் கொடுத்து வேலை செய்து அங்கு ஒரு புது நகரையே கட்டியமைக்கவில்லையா? அவருக்காக சிலர் ஒரு கவர்னரையே கொல்ல முன்வந்தார்கள். இறுதியில் ஓஷோவாகவே சரணடையும் வரை அவர்கள் அவர் மீதான நம்பிக்கையை கைவிடவில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் இருக்கும் போதே ஓஷோ மீது அவ்வளவு கெட்ட பெயர் இருந்தது. அதே போன்ற பெயர் நம்மைப் போன்றோர் மீதிருந்தால் மக்கள் கல்லால் அடித்து துரத்தி இருப்பார்கள். ஆனால் ஓஷாவை பூவைத் தூவி வழிபட்டார்கள். அப்படியே ஒரு யுடர்ன் எடுத்துப் பார்த்தால் நித்தியானந்தாவின் கதையும் அதே தானே. மோடி இந்த பிம்பத்தை அப்படியே அரசியலுக்கு வெற்றிகரமாக எடுத்து சென்றவர். வரலாற்றைப் பார்த்தால் அவரைப் போன்றோரை வீழ்த்தவே முடியாது. அவராகவே முன்வந்து நான் ரொம்ப கெட்டவன் என சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். அது அவருடைய தனிச்சிறப்பல்ல. மதத்தின் சிறப்பு. மதம் தரும் ஒளிவட்டம். அதை ஒருவர் சூடிக் கொண்டால் அவர் மீது எந்த களங்கமும் ஒட்டாது.
இந்து மதம் என்றில்லை இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். கிறித்துவ போதகர்களைப் பாருங்கள். அவர்கள் பண்ணாத ஊழலா? (இஸ்லாத்தில் குருமார்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்பதால் நான் எதையும் சொல்லவில்லை.) கிறித்துவத் துறவிகளைக் கண்டால் நன்கு படித்தவர்களே, சமூகப் பெரியவர்களே வேலைக்காரர்களைப் போல தெண்டனிட்டு பணிவதைக் கண்டிருக்கிறேன்.
சாமியார்கள் நினைத்தால் இந்தியாவையே விலைக்கு வாங்க முடியும். அவர்கள் ஏன் இவ்வளவு தாமதமாக அதை செய்திருக்கிறார்கள், ஏன் மோடியை போல ஒருவர் தோன்ற இவ்வளவு காலம் இங்கு பிடித்தது என்பது மட்டுமே என் ஆச்சரியம். ஒருவேளை இந்த பார்முலாவை மிக சரியாக அரசியல் களத்தில் பயன்படுத்திக் காட்டியவர் அவராக இருக்கலாம். அவருக்கு முன் வாஜ்பய், அத்வானிக்குக் கூட இப்படி ஒரு பிம்பம் இல்லை. வாஜ்பய் பிரம்மச்சாரி தான், ஆனால் அவர் இந்துமதத்தின் பிரதிநிதி என மக்கள் நினைக்கவில்லை. அதனாலே அவரை மற்றொரு அரசியல் தலைவரால் இடம்மாற்ற முடிந்தது. ஒரு மதத்தலைவருக்கு மட்டுமே ‘நிரந்தர’ அதிகாரத்தை மக்கள் அளிப்பார்கள். அதை மிகச்சரியாக புரிந்து கொண்டவர் மோடி மட்டுமே.
மோடியின் ஆட்சியில் நடக்கும் அநீதிகள், அவருடைய ஆட்சியினால் விளையும் பிரச்சனைகளுக்கு மக்கள் ஒரு போதும் அவரை பழி சொல்லுவதில்லை கவனியுங்கள். இப்போது அவருக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு கூட உள்ளூர அவர் மீது கோபம் இருக்காது.
இங்கு நாம் ஒரு அடிப்படையான வினாவை எழுப்ப வேண்டும் - ஏன் எந்த குற்றங்குறையும், விமர்சனமும் ஒரு சாமியார் மீது ஒட்டுவதில்லை? நம் முன் உள்ள சாமியார் ஒரு சாதாரண மனிதரே எனத் தெரிந்தாலும் அவர் பண்ணுகிற அட்டகாசங்கள், அவரது அகந்தை, ஊழல் எதன் மீதும் நமக்கு கோபம் வராது. உங்கள் சொந்த பிள்ளை மீது, காதலி மீது, பெற்றோர் மீது கூட உங்களுக்கு வெறுப்பும் கோபமும் வரும். ஆனால் ஒரு சாமியார் மீது ஒரு போதும் வராது. ஏன்? (இதைப் புரிந்து கொண்டால் மோடியின் ஆட்சி மீது ஒரு பாசம், நம்பிக்கை ஏன் பெருவாரியான இந்துக்களுக்கு இன்றும் உள்ளது என்பதும் புரியும்.)
பெரும்பாலான மதங்கள் நமக்கு கற்பிப்பது கடந்தநிலை வாதம் (transcendentalsim). இது நம் முன் தோன்றும் மதக்குறியீடுகளைத் தாங்கிய மனிதர்கள், சடங்குகள், சிலைகள், கருத்துக்கள் போன்றவற்றுக்கு / போன்றவர்களுக்கு காலம் மற்றும் வெளி சார்ந்து தம்மைக் கடந்து செல்லும் திறன் உண்டு என நமக்கு கற்பிக்கிறது. ஒரு சிலையை நாம் கடவுள் என நினைப்பதில்லை, அந்த சிலைக்கு நம்மை இந்த உலகத்தில் இருந்து ஒரு மீ-உலக நிலைக்கு கொண்டு போகும் சக்தி உண்டு என நம்புகிறோம். எவரெல்லாம் இதை தனக்கு உண்டு என காட்டுகிறாரோ அவரை அமானுஷ்யமானவர் என நம்புகிறோம். மதத்துக்கு இதை சித்தரிக்கும் பல வித்தைகள் அத்துப்படி. அதற்கான நம்பிக்கைகள், கருதுகோள்கள், தொன்மங்கள், சடங்குகள் மதத்தினுள் உண்டு. ஒரு சாமியாருக்கோ துறவிக்கோ இதை எடுத்தாள்வது சுலபம். சினிமாவில் பிரமாண்ட திரையில் இதை நிகழ்த்தவே பல தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்களுடன் இணைந்து படாதபாடு படுகிறார்கள். அப்படித்தான் சூப்பர் ஸ்டார்கள் தோன்றுகிறார்கள். ரஜினியும் ஜக்கி வாசுதேவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே. சினிமா என்பது மதசார்பில்லாத ஒரு நவீன மதம். எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கூட ஒரு சாமியாரின் தகுதியை சில நேரம் பெற்றுவிடுவதுண்டு.
இந்த கடந்தநிலை வாதத்தில் தான் எல்லாவற்றின் சூட்சுமமும் இருக்கிறது. இது இந்துமதத்துக்கு மட்டுமல்ல கிறித்துவத்துக்கும் பொருந்தும். இந்திய அரசியல் களமும் மதக் களமாக மாற்றப்பட்ட நிலையில் இனி மக்கள் தம் முன் இருக்கும் ஒன்றுக்காக வாழ மாட்டார்கள், இல்லாத ஆனால் இருக்கப் போவதாய் நம்புகிற ஒன்றுக்காக உயிரையும் கொடுப்பார்கள். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் எனும் வித்தியாசமெல்லாம் இல்லை. ஒரு மெத்தப்படித்த மேதை கூட ஒரு மதத்தலைவரின் காலடியில் பணிவார், ஏனென்றால் அவரது அறிவுப்புலத்தில், அவர் சாதித்த களத்தில், காலத்தையும் வெளியையும் கடந்து அவரை எடுத்து செல்லும் அந்த ஒன்று இல்லை, அதை அவர் மதத்தலைவரிடம், அவர் மூலமாக கடவுளிடம் மட்டுமே காண முடியும். கடவுளை நம்ப முடியாத அரை-பகுத்தறிவாளர்களுக்கு கூட ஒரு சாமியாரால் ஆறுதல் அளிக்க முடியும். இவர்கள் முட்டாள்கள் அல்ல, இவர்கள் நாடுவது முழுக்க வேறொரு விசயம். மோடி எப்படியோ இந்த காலம், வெளியைக் கடந்த ஒரு அனுபூதியை அரசியல் கதையாடலுக்குள் கொண்டு வந்து விடுகிறார். ஊழலற்ற, வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்ட ஆட்சியை நடத்துகிறேன் என அவர் சொல்லும் போது அது எங்கே என நமக்குக் கேட்கத் தோன்றாது. “இதோ கடவுள்” என ஒரு சாமியார் சொல்லும் போது “எங்கே?” எனக் கேட்கிறோமா என்ன? சொல்லப் போனால் ஒரு சாமியாரால் கடவுளை நம் முன் காட்ட முடிந்தால் நாம் அவரை அதற்கு மேல் மதிக்கவே மாட்டோம். இருக்கும் இடத்தில் இருந்தபடி மற்றொன்றாக நம்மை உணர்த்துவதே ஒரு சாமியாரின் பணி. அதை அரசியலிலும் மோடி நிகழ்த்தி காட்டி விட்டார். அவரிடம் போய் யாரும் ஆட்சியின் மகத்துவத்துக்கு ஆதாரத்தை கேட்க மாட்டார்கள்.
இங்கு மற்றொரு சுவாரஸ்யமான சேதியையும் நான் குறிப்பிட வேண்டும் - மோடியை கேள்வியின்றி ஆதரிப்பது இந்துக்கள் மட்டுமல்ல கிறித்துவர்களும் தான். எனக்குத் தெரிந்த கிறித்துவ மோடி ஆதரவாளர்கள் அவரை - விசித்திரமாக - இந்து மதத்தலைவராகக் காண்பதில்லை. அவரை ஒருவித இறைதூதராகப் பார்க்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் அவரை கடவுள் என்று சொல்ல மாட்டார்கள் என்றாலும் அவரது மதபிம்பம் அவர்களுக்கு பிடித்திருக்கிறது, அது அவர்களை எந்த விதத்திலும் உறுத்தவில்லை. பேஸ்புக்கிலும் நான் இஸ்லாமிய பழமைவாதிகள் மோடி ஆதரவாளர்களாக இருப்பதை கவனிக்கிறேன். இந்த மனநிலை எப்படி வேலை செய்கிறது எனக் கேட்டால் கடந்தநிலை வாதம் என்பது பெரும்பாலான மதங்களுக்கு பொதுவானது, கிறித்துவர்களும் பழமைவாத இஸ்லாமியரும் இந்துக்களைப் போலத்தான் இம்மையைக் கடந்து ஒரு உலகை கற்பனை செய்து நேசிக்க சிறுவயதில் இருந்தே கற்பிக்கப்படுகிறார்கள் எனச் சொல்வேன். ஆக, மோடி இந்து மதத்தலைவர் அல்ல, அவர் ஒரு சாமியார். அவர் அரசியலில் செயல்படும் ஒரு பால் தினகரன், ஒரு காவி நிறத்தை முன்வைக்கிற ஒரு இமாம். இதைக் கேட்க வேடிக்கையாக இருக்கும், ஆனால் சிறுபான்மையினரின் ஆழ்மனத்தில் மோடி இப்படித்தான் நிழலாடுகிறார். முற்போக்காளர்கள் அளவுக்கு சிறுபான்மையினர் அவரை எதிர்க்காததன் காரணம் பயமல்ல, ஒருவித மறைமுக பக்தி தான். இதை பல சிறுபான்மை நண்பர்களிடம் உரையாடிய என் அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன்.
கடந்தநிலை வாதம் என்பது ஒரு பிழையான நோக்கு என பேசுகிற ஒரே மதம் பௌத்தம் தான். பௌத்தம் முதலில் இவ்வுலகம் - அவ்வுலகம், பூமி - சொர்க்கம், இன்மை - மறுமை எனும் இருமையை உடைக்கிறது. இம்மையும் மறுமையும் சார்புநிலைகளில் தோற்றுவிக்கப்படும் கட்டமைப்புகளே, அவற்றைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்கிறார் புத்தர். ஒன்றைக் கடந்து செல்ல முயலும் போதே அதன் மீது பிடிப்பு ஏற்பட்டு நாம் துக்கத்தில் ஆழ்கிறோம். ஒரு பெண்ணிடம் ஒரு பரிபூரணமான நிரந்தரமான அன்பை நாடும் போது, இந்த உடம்பில் பேராற்றலை தேடும் போது, உலகில் பரிபூரண மகிழ்ச்சியை தேடும் போது நாம் அது அங்கே இல்லை, ஆனால் அதைத் தாண்டின ஓரிடத்தில் இருக்கிறது என உள்ளுக்குள் நம்புகிறோம். ஒரு பெண்ணைக் காதலித்தால் அக்காதல் ஒரு பரிபூரண, நிரந்தர அன்பை இல்லாத இடத்தில் இருந்து மாயமாய் வருவிக்கும் என நினைக்கிறோம். சாதாரண ஒருத்தி அசாதாரணமாக மாறுகிறாள் என நினைப்பதே அவளை பேரழகி என நினைக்க வைக்கிறது. அதுவே காதலாகிறது. (அதனாலே பக்தி மரபில் கடவுளை காதலனாக வழிபடுகிறார்கள், ஆண்டாள் போல.) ஆனால் சாதாரணமாக இருப்பதும் அசாதாரணமாக இருப்பதும் பல்வேறு நிலைகளை சார்ந்து மட்டுமே என புரிந்து கொண்டால் துக்கம் இருக்காது. அற்பங்களும் மகத்துவங்களும் ஒன்றே, இரண்டுமே தம்மளவில் அவையல்ல எனப் புரிந்தால் விடுதலையாக இருக்கலாம் என்கிறார் புத்தர்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் மதவாத அரசியலுக்கு தீர்வு மதசார்பின்மை அரசியல் அல்ல, விடுதலையான அரசியல் மட்டுமே, இந்த உலக வாழ்வை அப்படியே ஏற்கிற, எதையுமே அதைக் கடந்து நாடாத, நேரடி வாழ்வு மட்டுமே உண்மையான தீர்வு என வலியுறுத்தத்தான். மதம் அரசியல் ஆன பின், அரசியல் மதம் ஆன பின், நம் முன் இருக்கிற ஒரே வழி இரண்டில் இருந்தும் விடுதலை பெற்று நடைமுறை உலகை ஏற்கும் மனநிலைக்கு வருவது தான். மதவாத அரசியலில் இருந்து, மோடி-மைய உலகில் இருந்து விடுதலை பெற நாம் புத்தருக்கு திரும்ப வேண்டும் என நினைக்கிறேன்.
