இன்று ஆயுஷுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவன் எழுதுவது, படிப்பது, சிந்திப்பது எல்லாம் ஒரு பழக்கத்தினால் தானா எனக் கேட்டான். பழக்கம் ஒரு போதையாகிறது. அது இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போகுமா என பயம் வருகிறது. காதல் கூட சுலபத்தில் ஒரு பழக்கமாவதில்லையா எனக் கேட்டான். எனக்கு வாழ்க்கையை இப்படி வடிவத்துக்குள் அடைப்பதில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. ஆனால் என்னை ஈர்த்தது மற்றொரு கேள்வி: அவன் என்னிடம் கேட்டான் - “உங்களால் எழுதாமல் இருக்க இயலுமா?” “அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தாராளமாக நான் எழுதாமல் வேறெதாவது செய்வேன். எழுதுவது ஒரு வேதனையான வேலை தானே” (பேஸ்புக்கில் எழுதுவது, தெரிந்த கருத்துக்களை வைத்து கட்டுரை எழுதுவதை சொல்லவில்லை.) என்று நான் அவனிடம் சொன்னேன். கடந்த 14 ஆண்டுகளாக தினமும் எழுதி வருகிறேன். மிக மோசமான இழப்புகள் நேர்ந்து உருக்குலைந்து போகும் போது சில நாட்களில் எழுத்துக்கு மீண்டு விடுவேன். அது பழக்கத்தினால் அல்ல - எழுத்தில் ஒருவித ஈடு இணையற்ற இன்பம் உள்ளது. அது பேசுவதில் நிச்சயம் இல்லை.
ஆனால் வாழ்க்கை இன்னொரு உலகத்துக்கு என்னை இழுத்து சென்றால் நான் எழுதுவதை மறந்து / விட்டுவிட்டு வேறொன்றை சந்தோஷமாக செய்து கொண்டிருப்பேன் என நினைக்கிறேன். உ.தா., நான் கைதாகி சிறையில் ஒரு வருடம் இருக்க நேர்ந்தால் அங்குள்ள வாழ்க்கைக்கு உகந்தவாறு இருப்பேன். அல்லது நமது ஜி எதிர்காலத்தில் வதைமுகாம்களை ஏற்படுத்தி நாட்டு மக்களை அதனுள் அடைத்தால் என்னுடைய அன்றாட தேவைகளுக்கே கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், எழுத்துக்கு அரை மணி நேரம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டால், மரணம் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தால் ஒவ்வொரு கணத்தையும் வேறெப்படி மகிழ்ச்சியாக, தீவிரமாக வாழ்வது என கண்டுபிடித்து செயல்படுவேன்.
நான் என்றில்லை, பெரும்பாலானோர் அப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். வாழ்வதற்கு தூண்டுதல், பழக்கம், வடிவம் எல்லாம் தேவையில்லை, அதற்கு நேரம் மட்டும் போதும். காலத்துள் வாழ்கிறவர்களுக்கு அக்காலத்தினுள் தம் இருப்பதை (இன்மையை) அறிவதே நோக்கம், உத்வேகம், திளைப்பு, அறிதல் எல்லாம். ஒரு பனித்திவலைக்குள் தன் முகத்தைத் தேடும் குழந்தையை, ஒரு மலரைப் போல, ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் நமது இருப்பை அறிய முனைகிறோம். அதற்கே வாழ்கிறோம். வாழ்தலுக்கு வேறெந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன்.
காலத்தின் பிள்ளைகள் நாம். நம்மையும் காலத்தையும் பிரிக்க முடியாது. அதனாலே எனக்கு சாவிலும் நம்பிக்கை இல்லை. அது காலத்துக்கு அப்பால் இருக்கிறது. வாழப் பிறந்தவனுக்கு சாவே இல்லை.
