முதலாவது டி-20 போட்டியில் ஆடுதளத்தின் மெத்தனமான மிகை துள்ளல் இந்திய மட்டையாளர்களை குப்புற விழ வைத்தது என்றால் இரண்டாவது போட்டியில் குறைவான துள்ளல் கொண்ட, மேம்பட்ட ஆடுதளம் இந்திய அணிக்கு சிறப்பாக மட்டையாட உதவியது. முதல் போட்டியில் சிறந்த திட்டத்துடன் வந்த இங்கிலாந்து அணி செயல்திட்டத்தை பொறுத்தமட்டில் இப்போட்டியில் சொதப்பியது. குறிப்பாக 2-3 ஓவர்களில் அடில் ரஷீத்தை கோலிக்கு எதிராக பந்து வீச வைக்காதது முக்கியமான தவறாகியது. இங்கிலாந்தின் பந்து வீச்சாளர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்கள் - எந்த நீளத்தில் வீசுவது? குறைநீளமா அல்லது முழுநீளமா? வேகமாகவே மெதுவாகவா? சரியான பந்து விரட்டுகிற நீளத்தில் கட்டர்கள் போடுவதே. அவர்கள் இது குறித்து ஒரு முடிவுக்கு வருமுன்பு இஷான் கிஷனும், ரிஷப் பண்டும் அடித்து காலி பண்ணி விட்டார்கள்.
துவக்க வீரர்களைப் பொறுத்தமட்டில் ரோஹித்தும், இஷானும் சிறந்த ஜோடியாக இருப்பார்கள். ராகுல் ஒரு சிறந்த மட்டையாளர் என்றாலும் டி-20யில் அவர் அநியாயத்துக்கு பொறுமையாக ஆடுவதாக எனக்கு ஒரு வருத்தமுண்டு. ஐ.பி.எல்லில் அவருடைய அணி தொடர்ந்து சொதப்புவதற்கு இந்த எதிர்மறை மட்டையாட்டம் - 18வது ஓவர் வரை தான் நின்றாக வேண்டும் எனும் முடிவுடன் ஆடுவது - ஒரு காரணம். டெஸ்ட் போட்டியில் தன் இடத்தை இழந்த பின் ராகுல் உள்ளூர் 50 ஓவர் + டி-20 போட்டிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்திய அணியிலேயே ஆடாமல் அலங்காரப் பொருளாக இருந்தது அவரது ஆட்ட சரளத்தை, தன்னம்பிக்கையை பாதித்துள்ளது.
ஷிக்கர் தவனைப் பொறுத்தமட்டில் அவர் உலகக்கோப்பைகளில் அட்டகாசமாக ஆடக் கூடியவர் என்பதால் மூன்றாவது துவக்க வீரராக அவரை எடுப்பது நல்ல முடிவாக இருக்கும். சஹல் சரியான உடற்தகுதியுடன் இல்லை என நினைக்கிறேன். இந்த கொரோனா லாக் டவுனும் அவருடைய ஆட்டநிலையை மிக மோசமாக பாதித்துள்ளது. ஜடேஜா திரும்ப வந்தால் அவர் சாஹலின் இடத்தை பறித்துக் கொள்ளக் கூடும். அதனால் இப்போதே சாஹலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ராகுல் சஹருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம். புவனேஷ்வரின் இன்றைய பந்து வீச்சும் வெகுவாக கவர்ந்தது. வரப் போகும் டி-20 உலகக்கோப்பையில் அவரும் நடராஜனும் இணைந்து இறுதி 4 ஓவர்களில் யார்க்கர் வீசுவதைப் பார்க்க கண்கொள்ளா கடையாக இருக்கும்.
இந்திய அணியின் களத்தடுப்பு மிக மோசமாக் இருந்தது - என்னுடைய கணக்குப்படி 29 ஓட்டங்களையாவது இதனால் உபரியாக அளித்தார்கள். ஆனால் இங்கிலாந்தின் மோசமான ஆட்டம், இஷான், கோலி, பண்டின் சிறப்பான மட்டையாட்டம் காரணமாக இது இந்திய அணியை பெரிதும் பாதிக்கவில்லை.
