இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 ஆட்டத்தில் கோலி சிறப்பாக ஆடினார் (73 ஓட்டங்கள்). ஆனால் ஆட்டத்தை வென்ற பிறகு பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் தன் ஆட்டத்தின் சிறப்புக்கு யாருடைய உதவு, பங்களிப்பெல்லாம் இருந்தது எனும் போது அணியின் பயிற்சியாளர்களை குறிப்பிட்டு கூடவே “அனுஷ்காவும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் உதவியது.” எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை. தொழில்முறை வெற்றிகளை தொழில்முறையில் மட்டும் பார்ப்பதே நல்லது, அதை அந்தரங்க வாழ்க்கையுடன் கலந்து தன் குடும்பமும் தன் பயிற்சியாளர்கள், அணியும் ஒன்றே என சமப்படுத்துவது ஒரு மோசமான போக்கு. பொதுவாக ஒரு வீரர் ஓய்வு பெறும் போது தனது பெற்றோர், நண்பர்கள், சிறுவயது பயிற்சியாளர்கள் ஆகியோரை பட்டியலிட்டு நன்றி சொல்வார்கள். சச்சின் ஓய்வு பெறும் போது அவ்வாறு உணர்ச்சிகரமான ஒரு நீண்ட நன்றி நவிலல் செய்தது நினைவிருக்கும். ஏனென்றால் அது ஒரு தனிமனிதனாகவும் அவர் தன் முடிந்து போன ஆட்டவாழ்வை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம். ஆனால் கோலி செய்வதோ முழுக்க unprofessionalஆன காரியம்.
இதை இப்போதல்ல நீண்ட காலமாகவே அவர் இதை செய்து வருகிறார் - இந்திய அணி அயல்நாட்டுக்கு பயணம் செல்லும் போது அதிகாரபூர்வ சந்திப்புகளில் தன் மனைவி கலந்து கொள்ள அனுமதிப்பது, வீரர்களுடன் வெளியே செல்லும் போது அனுஷ்காவை அழைத்து செல்வது என. இதனாலே அணி மோசமாக தோற்கும் போது ரசிகர்கள் அனுஷ்காவையும் சாடுகிறார்கள். “நான் சிறப்பாக ஆடுவதற்கு என் மனைவியின் அருகாமையே காரணம்” என ஒருவர் பேசும் போது அவர் மோசமாக ஆடும் போது ரசிகர்கள் அதற்கும் அதே மனைவியை தானே பழிகூறியாக வேண்டும்? தேர்வாளர்கள் அனுஷ்காவுக்கு தேநீர் விளம்புகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் இதனாலே எழுகின்றன. எனக்குத் தெரிந்த உலகக் கிரிக்கெட்டில் எந்த வீரரும் இதை செய்வதில்லை, இந்திய கிரிக்கெட்டில் இதற்கு முன்பு செய்ததில்லை.
ஒரு அணித்தலைவர் தான் சிறப்பாக ஆடியதற்கு தன் பயிற்சியாளர்களை பாராட்டி விட்டு அதே மூச்சில் மனைவியையும் குறிப்பிடும் போது இருவரும் தனக்கு ஒன்றே எனும் பொருள் வருகிறது. அதைக் கேட்டிருக்கும் பயிற்சியாளர்களுக்கு சுரணை உண்டென்றால் மூஞ்சியில் காறித் துப்புகிற உணர்வே ஏற்படும். காதல், குடும்ப ஆதரவு போன்ற தனிப்பட்ட காரணங்கள் ஒருவர் சிறப்பாக செயல்பட காரணமாகலாம். ஆனால் அதை வெளியே சொல்லி அதற்கு ஒரு அதிகாரபூர்வ மதிப்பை அளிக்காமல் இருப்பதே பொறுப்பான கௌரவமான ஒரு வீரர் செய்வது. கோலிக்கு நிச்சயமாக அப்பண்புகள் இல்லை.
