லஷ்மி மணிவண்ணன் “விஜி வரையும் கோலங்கள்” நூல் வெளியீட்டின் போது பேசிய அந்த அதிபயங்கர பேச்சைக் கேட்டேன். அவர் அண்மைக்காலமாக ஒரு கடும் வைதீகராக மாறி வருகிறார் தான். ஆனால் அவர் அகமலர்ச்சி, பணிவு, ஆன்மீகம், குரு, சரணடைதல் பற்றியெல்லாம் பேசுவதை ஒரு கோர்வையாக ஒரே உரையாடகக் கேட்டது, திக்கென்றாகி நெஞ்சைப் பிடித்துக் கொண்டது இப்போது தான்.
நாட்டார் தெய்வங்கள் சார்ந்து ஒரு நாட்டம் லஷ்மி மணிவண்னனுக்கு இருந்ததை ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை அறிவேன். அது ஒரு வைதீக நாட்டமாகவும் அப்போது முளைவிட்டது. ஆனால் அவர் அந்த சாயல்கள் இல்லாமல் எழுதிய பல அட்டகாசமான கட்டுரைகள், கதைகளைப் படித்தேன். அவரிடம் சில சமயங்களில் பேசவும் செய்திருந்தேன். அவரது இயல்பே எதையும் முரணாக, தற்குறித்தனமாக, விளையாட்டுத்தனமாக, தலைகீழாக பார்ப்பது. அதனால் கலகம், புரட்சி, எதிர்-கலாச்சாரம் மீது கூட அவரால் பிடிப்பு கொள்ள முடியாது. அதன் சாதக பாதகங்களை அறிந்து, அதுவும் ஒரு விளையாட்டே என நினைத்துக் கொள்வார். பதின்வயதில் வைரமுத்துவின் தீவிர வாசகராக ஆரம்பித்து, எதேச்சையாக ஒரு கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தீவிர இலக்கியம் பக்கம் வந்து முன்வரிசையில் அமர்ந்து ஐக்கியமாகி, ஒருநாள் எதேச்சையாக க-இ-பெ மன்றத்தினர் எதிர்த்தரப்பாக கருதியாக சு.ராவை சந்தித்து உரையாடி, உடனடியாக அவருடைய சீடனாகி, பின்னர் அவரிடம் இருந்து முரண்பட்டு வெளியேறி முழு கலகவாதியாக, எல்லாவற்றில் இருந்து வெளியே நிற்பவராக காட்டிக் கொள்வது என ஒவ்வொரு சில வருட இடைவெளியிலும் தன் குருபீடங்களை மாற்றிக் கொள்பவர் அவர். இதை பலவீனமாக சிலர் கருதினாலும் எனக்கு அதுவே அவரது இயல்பும், வலிமையும் எனத் தோன்றியதுண்டு. அவர் இடதுசாரிகள் வசம் இருக்கையில் அவர்களுடைய தர்க்கம், கருத்தியல், சமூக அக்கறை ஒவ்வொன்றையும் தனதாக மாற்றி வரித்துக் கொண்டு எழுத்தாக்குவார். அப்படியே சு.ராவிடம் வந்த பிறகு சு.ராவின் மொழியையும் நுண்ணுணர்வையும் பெற்று அதை சில சிறந்த படைப்புகளை எழுத பயன்படுத்துவார். இப்படியே அவர் நகர்ந்தபடி இருப்பார் - அவர் கிளைதோறும் இளைப்பாறும் ஒரு வேடந்தாங்கல் பறவை. அப்படி அவர் தாவிப் பறந்தமர்ந்த மற்றொரு கிளை தான் ஆசான். இயல்பாகவே இப்போது ஆசானின் மொழி, நம்பிக்கைகள், அத்வைதம் ஆகியவற்றை வரித்துக் கொண்டு அவருடைய ஆதரவாளராக, சீடனாக தன்னை காட்டிக் கொள்கிறார். ஏன் காட்டிக் கொள்கிறார் என்பதிலேயே சுவாரஸ்யம் இருக்கிறது:
1) லஷ்மி மணிவண்ணன் எந்த ஆசானிடம் போய் சேரும் போதும் அதற்கு நேரெதிரான பார்வை அவருக்குள் விழித்துக் கொள்ளும். அதுவே அவரது கூர்மை, அவரது தனித்துவம். விளைவாக, அவர் இயல்பாகவே ஒரு பின்நவீனத்துவவாதியாக ஆனார்.
2) இந்த இயல்பே அவரை முழுமையாக எதிலும் பற்று கொள்ள வைக்காமல் செய்யும். ஒரு தனிப்பட்ட முரண் வந்தால் யோசிக்காமல் தன்னைப் பற்றிக் கொண்ட கையை உதறி விட்டு அடுத்த கையை பற்றிக் கொள்ளவும் இதுவே செய்கிறது. அரசியல் சித்தாந்த உறுதிப்பாடு இல்லாமலே இந்த நிலைகளுக்குள் போவதன் சிக்கல் இது.
23 ஆண்டுகள் இருக்கும். அப்போது ஒருநாள் லஷ்மி மணிவண்ணன், விக்கிரமாதித்யன் அண்ணாச்சி, இன்னும் சில நண்பர்கள் என்னை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினார்கள். நாகர்கோயிலில் நாங்கள் சந்திக்கும் போதே என்னிடம் சரக்கடிக்க கால் காசு இல்லை என சொல்லி விட்டேன். அவர்கள் ஜெயமோகனை தக்கலையில் அவரது அலுவலகத்தில் போய் சந்திக்கலாம் என முடிவெடுத்தார்கள். அங்கு போனதும் அவருடைய அறையில் அனைவரும் தரையில் அமர்ந்து கொண்டோம். ஆரம்பகட்ட கௌரவ விசாரிப்புகளுக்குப் பிறகு, மணிவண்ணன் ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து பேச ஆரம்பித்தார். அண்ணாச்சி அமைதியானார். நானும் பிறரும் வேடிக்கை பார்த்தோம். சுமார் இரண்டு மணிநேரம் இருவருக்கும் சமர் நடந்தது. அது முடிந்ததும் கிளம்ப எத்தனித்தோம். அப்போது மணிவண்ணன் நேரே போய் காசு கேட்டார். குடிப்பதற்கு பணம் தர முடியாது என ஜெ.மோ மறுத்து விட்டார். எனக்கு இது வியப்பாக இருந்தது. பணம் வேண்டுமென்றால் ஜெ.மோவிடம் இணக்கமாகத் தானே நடந்து கொண்டிருக்க வேண்டும்? ஆனால் மணிவண்ணன் அப்படித் தான். அவருக்கு இப்படி தலைகீழாக நடந்து கொள்ளவே பிடிக்கும். ஜெ.மோவிடம் பாக்கெட்டில் உள்ள கொஞ்ச பணத்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் பிடிவாதமாக இருந்தார். ஆனால் ஜெ.மோ பேருந்தில் ஏறி கிளம்பி விட்டார். போகும் போது “நீங்க வேணும்னா ரசூலை போய் மிரட்டுங்க. அவர் கொடுப்பார்.” என்றார். மணிவண்ணன் இதை ஒரு அவமானமாக, கேலியாகப் பார்க்கவில்லை. அப்படியே எங்களை அழைத்துக் கொண்டு ரசூல் அண்ணன் வீட்டுக்கு சென்று, அவரையும் வசை பாடி பணம் வாங்கிக் கொண்டு கிளம்பினார்.
இதை நான் மணிவண்ணனை மட்டம் தட்ட சொல்லவில்லை. அவருக்கு சுய கௌரவம், அந்தஸ்து, தனிமனித மரியாதை என்பவையெல்லாம் (அரசியல் சரிநிலைகள், சித்தாந்த நிலைப்பாடுகளைப் போன்றே) போலித்தனமானவை எனும் எண்ணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு முகமூடி. பணம் பெறுவதும் ஒரு விளையாட்டு. அப்படி பெறக் கூடாது என சொல்வதாலே அவர் வேலை செய்யாமல் பெற்றுத் திரிந்தார். அது அவருடைய ஒரு எதிர்-கலாச்சார, எதிர்-சுயகௌரவ வாழ்க்கை.
இதை ரெண்டாயிரத்துக்குப் பிறகு அவரை உன்னிப்பாக படித்த போது புரிந்து கொண்டேன். ஆனால் அவருடைய அரசியல் பார்வை அது என தப்பாக விளங்கிக் கொண்டேன். அதனாலே அப்போது மணிவண்ணன் மீது மிகுந்த மரியாதையும் பற்றும் ஏற்பட்டது. அதனாலே தான் கடந்த சில ஆண்டுகளில் அவர் ஒரு தீவிர மதவாதியாக, பக்தராக மாறி, ஆசானின் சிறுதெய்வமாக மாறிப் போன போது ஏமாற்றமடைந்தேன். அவருடைய எழுத்து மிக மலிவாகிப் போனதைக் கண்டு கசப்புற்றேன். அவருடைய கவிதைகளில் இப்போதும் அந்த பழைய கூர்மை இருந்தது, ஆனால் அவருடைய கட்டுரைகள் ஜக்கிவாசுதேவனின் அடிபொடிகள் எழுதுவதை போல இருந்தன. அவரது பக்தி எழுத்துக்களில் ஆழமோ தர்க்கமோ இல்லை.
ஆனால் இந்த புதிய சாமியார் அவதாரம் கூட ஒரு நடிப்பு தான் என எனக்கு இன்று அவருடைய உரையைக் கேட்ட போது தோன்றியது. ஒன்று, அவரது சொற்கள் மீது அவருக்கே முழுநம்பிக்கை இல்லை என்பது அவரது தொனி, அவருடைய உடல்மொழியின் பொருத்தமின்மையை பார்க்கும் போது தோன்றுகிறது. தான் பேசுகிற பேருண்மைகள் ஒரு மேலோட்டமான கதையாடல் என அவர் அறிவார். ஆனால் ஒரு வலதுசாரி தரப்பின் ஆதரவு அவருக்கு இப்போது தேவையாக இருக்கிறது. பயன்படுத்திக் கொள்கிறார். இது அவர் இப்போது இளைப்பாறும் மரக்கிளை.
மணிவண்ணன் இப்போது தன் வணிகத்தில் லாபம் அடைந்து, பொருளாதார ரீதியாக மேம்பட்டு, கார், பெரிய வீடு என நிறைவாக இருப்பதாக அறிந்தேன். அவருக்கு இப்போது யாரையும் பொருளாதார ரீதியாக சார்ந்திருக்க தேவையில்லை, ஆனால் தானல்லாத ஏதோவொன்றில் இருந்து தன்னை அதுவாக காட்டிக் கொண்டாலே அவர் மணிவண்ணன். இந்த புதிய முகமூடிக்குள் மறைந்திருக்கும் போது அவருக்கு வேறு சில அனுகூலங்கள் இருக்கலாம். ஆனால் பிரதான நோக்கம் முகமொன்று இல்லாமல் இருப்பதே என நினைக்கிறேன். என்ன பின்நவீன முகமூடியில் அவர் இன்னும் சுதந்திரமாக முரண்களுடன் இருக்க முடிந்தது. இப்போது ஆன்மீக முகமூடியில் தன்னை முதிர்ந்து கனிந்த ஒரு ஞானியாக காட்டிக் கொள்வதில் அவர் நிறைய பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. ஆன்மீக விசாரம், அக மலர்ச்சி, அத்வைதம், நித்திய சைதன்ய யதி, நாராயண குரு, இலக்கிய கோட்பாடு, ஜெயமோகனின் மகத்துவம் என பல பொருந்த புள்ளிகளை இணைக்க பாடுபட வேண்டி இருக்கிறது. பேசப் பேச “இது நான் இல்லை” என அவரது கண்களே காட்டிக் கொடுத்து விடுகின்றன.
“சிந்தா விஷ்டையாய ஷ்யாமளா” என ஶ்ரீனிவாசனின் ஒரு படம் இருக்கிறது. அதில் இப்படித்தான் ஶ்ரீனிவாசன் குடி, சீட்டாட்டம் என இருந்து ஒருநாள் தன் மனைவி, தந்தை, மாமனார் ஆகியோரால் வற்புறுத்தப்பட்டு மலைக்கு மாலை போட்டு விரதம் இருந்து மலையேறுவார். அப்போது தான் இதுவும் ஒரு சுகமான வாழ்க்கை எனப் புரிந்து கொள்வார். வீடு திரும்பியதும் மாலையை கழற்ற மறுத்து விரதத்தை தொடர்ந்து, தினமும் பூஜை புனஷ்காரம் என தெறிக்க விடுவார். வீடும் சுற்றமும் பதறிப் போகும். கடைசியில் தன்னால் குடும்பம் படும் பாட்டை விளங்கிக் கொண்டு, ஆசிர வாழ்க்கையும் கடுமையானதே என அறிந்து மாலையை கழற்றி பழைய வாத்தியார் உத்தியோகத்துக்குப் போவார். உற்றமும் சுற்றமும் மனைவி குழந்தையரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். ஆனால் அப்போது ஒரு இடதுசாரி ஊர்வலம் கோஷமிட்டபடி சாலையை நிறைத்துக் கொண்டு போகும். அதைப் பார்த்து ஆர்வம் கொண்டு ஶ்ரீனிவாசன் அப்பக்கம் பார்ப்பார். அவருடைய மனைவி சுதாரித்து அவரை இழுத்துக் கொண்டு வந்து விடுவார். ஏனென்றால் தீவிர பக்தரான அவர் தீவிர இடதுசாரி ஆகவும் ஒரு நொடி தான் தேவைப்படும்.
“சிந்தா விஷ்டயாய ....” படத்தில் வரும் ஶ்ரீனிவாசனும் மணிவண்ணனும் ஒன்று தான். ஒரே சின்ன வித்தியாசம்: ஶ்ரீனிவாசனுக்கு பக்தி ஒரு லௌகீக வசதி என்றால், மணிவண்ணனுக்கு அது பொருளாதார ஆறுதல் அல்ல, உளவியல் ஆறுதல்.
