ஆசான் பல ஆண்டுகளாக திரும்பத் திரும்ப சொல்லி வரும் ஒரு கருத்து இந்து மதமே நமது பண்பாட்டை கட்டிக் காக்கிறது, நமது கோயில் வழிபாட்டு பண்பாட்டுக்குள்ளே ஆழ்படிமங்கள் உள்ளன, பகுத்தறிவுவாதிகள் இந்த மரபை தாக்குவதன் வழியாக ஆழ்படிமங்களை இல்லாமல் பண்ணி, இந்தியாவின் ஆன்மாவை அழித்து விடுவார்கள் என்பது. இப்போது “படிமங்களின் உரையாடல்” என இதையே திரும்பவும் எழுதியுள்ளார். எந்த தர்க்க நியாயமும் இல்லாத கற்பிதம் இது. ஏனென சொல்கிறேன்.
ஆழ்படிமம் / தொல்படிமம் (archetype) என்பதை உளவியலில் முக்கியமான ஒரு கருத்தாடலாக உருவாக்கியவர் கார்ல் யுங். அவர் எங்குமே ஆழ்படிமத்தை மதத்துக்குள் செயல்படும் படிமங்களாக பார்க்கவில்லை. மாறாக அவர் ஒரு தனிநபரின் நனவிலியின் வெளிப்பாடாக கனவுகள் செயல்படும் என பிராயிட் சொன்னதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று சமூகத்துக்குள் மக்களின் நனவிலியின் ஆழ்படிமங்கள் மூலம் வெளிப்படலாம் - ஆழ்படிமத்தைக் கொண்டு தர்க்கத்துக்கு புறம்பான சில உணர்வுபூர்வமான எண்ணங்களை, நம்பிக்கைகளை நாம் பரிமாறலாம் என அவர் நம்பினார். இவற்றுக்கு எந்த தர்க்கச் செறிவும், குறிப்பிட்ட பண்பாட்டுக்கு மட்டும் உரித்த வடிவமும் இருப்பதில்லை என்றார். உ.தா., கங்கை என்றால் உருவகம், நீர், நீர்மை என்றால் ஆழ்படிமம். சிவன் என்று சொன்னால் நமது இந்து மதத்துக்குள் அதற்கு என ஒரு தனி பொருள் உள்ளது. ஆனால் அது அந்த பொருளில் சிவன் ஒரு உருவகம் மட்டுமே ஆழ்படிமம் அல்ல. ஆனால் மத அடையாளங்கள், உடனடி பண்பாட்டு அலங்காரங்கள், தற்கால மனநம்பிக்கைகளை கடந்து ரொம்ப பின்னுக்குப் போய் ஒரு நாகரிகமான, பண்பட்ட, நேர்மறை விழுமியங்களால் கட்டுப்படுத்த்தப்படும் சமூகத்தின் அத்தனை போக்குகளுக்கும் எதிராக செயல்படும் (அழுக்கை, அழுகலை, நாற்றத்தை, பிணத்தை, மரணத்தை, எதிர்-விழுமியங்களை, காலச்சிதைவை, இதைக் கொண்டே வன்மம், தன்னலம், ஆசை, திட்டம் எல்லாவற்றையும் கடந்தவனாக) ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் நமக்குள் கிளர்த்தும் உணர்வுகள் தனியானவை. அவை அவன் ஒரு ஆழ்படிமம். அவன் சிவன் அல்ல. ஒருவித ஆதிசிவன். நீங்கள் சாருவின் “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்” நாவலில் இருந்து அண்மையில் அவர் எழுதிய “மாயமான் வேட்டை” கதை வரை இந்த ஆதிசிவனை தேசலாய் நவீன வடிவில் காணலாம்.
இதுவே அன்னை என்பதற்கும் பொருந்தும். அன்னை ஒரு ஆழ்படிமம். ஆனால் அம்மன் போன்ற தாய் தெய்வங்கள் உருவகங்கள்.
கார்ல் யுங் ஒரு ஆழ்படிமத்தை வைக்கும் வரையறை அது எல்லா பண்பாட்டு கூறுகளுக்கும் அப்பாலான ஒரு தூய வடிவம் என்பதே. அதனாலே Jung on Mythology நூலில் அவர் கர்த்தர், கிருஷ்ணர் போன்ற இருவேறு பண்பாடுகளை சேர்ந்த தெய்வங்களை ஒரே ஆழ்படிமமாக இருதுகிறார் (ஜெ.மோ இதை நிச்சயமாக ஏற்க மாட்டார்.) இன்னொரு விசயம், கார்ல் யுங் ஒரு அமைப்பியலாளர். அவரைப் போன்றவர்கள் அர்த்தங்கள், அறிவுருவாக்கங்கள் மொழிக்குள் செயல்படும் அமைப்புகளால் தோற்றுவிக்கப்படுகின்றன என கோரினார்கள். ஆகையால் ஒரு தூய வடிவத்தை மொத்த மனித குலத்துக்குமான உணர்வுக் கடத்தலுக்கு, புரிதலுக்கான வாகனமாக கண்டறிய முயன்றார். அப்படியே அவர் ஆழ்படிமங்கள் எனும் கோட்பாட்டை வந்தடைந்தார். அவரைப் போன்றே நாட்டுப்புறவியலில், தொன்மவியலில் ஆய்வு செய்த அமைப்பியலாளர்களான விளாடிமிர் போப், லெவி ஸ்டிராஸ் போன்றவர்கள் இத்துறைகளில் பொதுவான கதைக்களன்களை, ஆழ்படிம பாத்திரங்களை கண்டறிய முயன்றனர். யாருமே இவை ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமானவை எனக் கூறவில்லை. சொல்லப் போனால், தொன்மம், நாட்டுப்புறக் கதைகள், பழம்பாடல்கள் மக்களிடையே தம்மளவில் புழங்குபவை, காலந்தோறும் தன் அடிப்படை பண்படை இழக்காமல் மாற்றம் கண்டு வருபவை என நம்பினர். மதம் இவற்றை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்ளுமே ஒழிய மதம் இல்லாவிட்டால் இவை அழிந்து போகும் என எந்த அறிஞனும் எனக்குத் தெரிந்து இதுவரை சொன்னதில்லை. இது ஆசானின் தனித்துவமான கண்டுப்பிடிப்பாகும். ஆகம முறைப்படி சடங்குகளை, வழிபாடுகளை செய்தால் மட்டுமே இந்த பண்பாட்டு வடிவங்கள் உயிர்த்திருக்கும் என்று வேறு அவர் புதிய கண்டுபிடிப்புகளை செய்கிறார். இவை முழுமையான பொய்கள்.
“திருப்பாவையை” எடுத்துக் கொண்டால் அது தான் எழுதப்பட்ட காலத்தில் பக்தி மரபின் உள்ளே நின்றபடி தன்னை வெளிப்படுத்திய ஒரு இலக்கியப் பிரதி. அதை படித்து அனுபவிக்க நீங்கள் பக்தனாக இருக்க வேண்டும் என்பது - இருந்தாக வேண்டும் என ஆசான் ஒரு வினோதமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது பொய். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பக்தி இலக்கியங்களில் தோய்ந்து ரசிப்பதை, நுணுகி வாசிப்பை நான் கண்டிருக்கிறேன். தீவிர பக்தர்களுக்கு இந்த இலக்கியங்கள் எந்த புரிதலையும், ரசனையையும் அளிக்காததையும் கண்டிருக்கிறேன். அடுத்து, “திருப்பாவை” எனும் பிரதி பக்தி மரபுக்கு வெளியே கூட மற்றொரு விதத்தில் இதே ஆழ்படிமத்தை கொண்டு வெளிப்பட்டிருக்க முடியும். ஏனென்றால் திருமால் என்பவர் ஒரு ஆழ்படிமம் எனில் அவர் மதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவராக இருக்க வேண்டும். சிவனும் சக்தியும் அப்படியே. அவர்களுக்கு முன்பு வேறு பெயர்கள் இருந்தன. ஆரியர்கள் இங்கு வரும் முன்பே அவர்கள் இருந்தார்கள் என வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்து மதம் பெயரையும் கூடுதலாக சில தொன்மங்கள், சடங்குகள், நம்பிக்கைகளை அளித்ததே ஒழிய அது இந்த ஆழ்படிமங்களை கண்டுபிடிக்கவோ தக்க வைக்கவோ இல்லை. மாறாக அது இந்த ஆழ்படிமங்களை பயன்படுத்தி உயிர் வாழ்கிறது என்பதே உண்மை.
இந்து மதம் உடைந்து மற்றொன்றாக ஆனால் அல்லது பல சிறு மதங்களாக சிதறினால் அல்லது முழுக்க மதிப்பிழந்தாலும் திருமாலும் சிவனும் வேறு வடிவங்களில் இருந்தே ஆவார்கள். உ.தா., கண்ணகியை எடுத்துக் கொள்வோம். கண்ணகிக்கான கோயில்கள் இங்கு மிகமிக சொற்பம். ஆனாலும் கண்ணகி இன்று தமிழனின் ஆழ்மனத்தில் குடிகொண்டுள்ள தெய்வமே. காளியை விட கண்ணகியே அவனுக்கு முக்கியம். கண்ணகியை ஒரு காலத்தில் திராவிட இயக்கங்கள் பயன்படுத்தி வளர்த்தெடுத்து பிரபலமாக்கினாலும் அவர்களாலே கண்ணகி உயிர்த்திருக்கிறாள் என சொல்ல முடியாது. திராவிட இயக்கங்களுக்கு முன்பே அவள் தோன்றி விட்டாள். ஜெ.மோ இப்படி ஆழ்படிம கதையைக் காட்டி தொடர்ந்து பக்தி மரபை, வைதீக மரபுக்கு முட்டுக் கொடுப்பது பிஸ்லெரி நிறுவனம் தாம் மினரல் வாட்டர் உற்பத்தியை பண்ணாவிட்டால் குடிநீர் என்பதே அழிந்து விடும் எனக் கூறுவது போன்றாகும்.
இன்னொரு உதாரணம் - ஜெ.மோ பூச்சாண்டி காட்டுகிற விதமான மதத்தின் மீதான அவநம்பிக்கையும் அக்கறையின்மையும் இருபதாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் நிகழ்ந்து விட்டது. அதனால் எந்த பேரழிவும் அங்கு ஏற்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் தேவாயலத்தை மையமிட்ட சமூக அமைப்பு அறிவியல், முதலீட்டியம், குடியாட்சி என உருமாறியது. இப்போது நான் சந்திக்கும் பல வெள்ளைக்காரர்கள் கிறித்துவத்தில் ஈடுபாடு குறைந்தவர்களாக உள்ளனர். நமது இந்திய கிறித்துவர்களைப் போல அவர்கள் தவறாது ஞாயிறு தோறும் தேவாலயம் சென்று அட்டெண்டென்ஸ் போடுவதில்லை. ஆனால் இது மேரி மாதா, கர்த்தர் போன்ற ஆழ்படிமங்களை உயிர்ப்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுடைய “டைட்டானிக்”, “பேட்மேன்” என பல மசாலா படங்களிலும் திரும்பத் திரும்ப கர்த்தரே மீளுருவாக்கம் செய்யப்படுகிறார், பக்தியின் சாரம் இல்லாமல், முழுக்க கலாச்சார தளத்தில். இது எப்படி என்றால் கர்த்தர் என்பவர் கிறித்துவ மதத்தின் கண்டுபிடிப்பு அல்ல. கிறித்துவம் தோன்றும் முன்பே கர்த்தரின் ஆழ்படிமம் ஐரோப்பிய மரபுகளில், விவசாய சமூகங்கள் இடையே பலிசடங்குகளின் பகுதியாக இருந்தது குறித்து நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. இது பனிக்காலத்துக்குப் பின்பு கோடைக் காலம் வந்து, பயிர்கள் தழைத்து, பூக்கள் பூத்து நிலம் செழிக்கும் ஒரு காலச்சக்கரத்தைக் குறிக்கும் விதமாக தோன்றிய பலி சடங்கு - உயிரின்மையில் இருந்து இயற்கை உயிர்த்தல் தோன்றும் எனும் நம்பிக்கை விவசாய சமூகங்களில் ஒரு முக்கிய சடங்காக வெளிப்பட்டது. இதற்கு முன் இது பழங்குடி சமூகத்தில் மனிதபலி வடிவில் வேறொரு அர்த்தத்துடன் உலவி இருக்கலாம். வெகுவாக பின்னால் கர்த்தரின் சிலுவையேற்றம் நிகழ்ந்த பின்னர் பலிகொடுக்கப்படும் உயிருடன் கர்த்தரின் பாத்திரம் இணைக்கப்பட்டு ஒரு முழு கருணை வடிவமான, மனித குலத்துக்காக தன்னை பலிகொடுத்த கர்த்தர் எனும் கிறித்துவ மீட்பர் தோன்றினார். அதாவது பலிகொடுக்கப்படும் உயிர் என்பது தன்னையே பலிகொடுக்கும் மனித உருவாக மாறியது. (இதன் நீட்சியாகவே kingdom of God is within எனும் சிந்தனைகளை அங்கு வளர்ந்தன) கர்த்தர் சிலுவையில் அறையப்படுவது அவ்வளவு உணர்வுரீதியான ஒரு காட்சியாக ஐரோப்பியர்களுக்கு இருந்து வருவது ஆதிசமூகத்தில் விவசாய குடிகள் இயற்கை சுழற்சியின் குறியீடாக திருப்பலி கொடுத்து வந்த நினைவுகளை அது கிளர்த்துவதாலே, விவிலியத்தினால் அல்ல. விவிலியம் ஒரு மேற்போர்வை மட்டுமே. அந்த பலி தரப்படும் விலங்கே ஆதி-கர்த்தர். அதுவே ஆழ்படிமம். கர்த்தர் எனும் தெய்வ உரு காலாவதி ஆனாலும் அந்த ஆதி-கர்த்தர் இருப்பார்.
இன்னொரு விசயம் - ஒரு சமூகத்தின் ஆழ்படிமம் அதன் மதச்சடங்குகளால் அதனுள் தக்க வைக்கப்படுகிறது என ஆசான் கோருகிறார். இது சரியென்றால் கிருஷ்ணர் எனும் ஆழ்படிமம் எப்படி பல ஐரோப்பியர்களை கவர்கிறது. ஹரே கிருஷ்ணா இயக்கம் எப்படி ஐரோப்பாவில் வென்றிருக்க முடியும்? இஸ்கானின் சைதன்ய வைஷ்ணவ மரபு எப்படி கிறித்துவர்களின் ஆழ்மனத்தை அசைத்திருக்க முடியும்? ஆசான் சொல்வது சரி என்றால் இந்தியாவில் வாழும் ஒரு இந்துவுக்கு எப்படி கர்த்தரை குறியீடாக வைத்து தஸ்தாவஸ்கி எழுதிய நாவல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? இஸ்லாமியரின் சூபிக் கவிதைகள், கவாலி பாடல்கள் எப்படி ஒரு இந்துவை கண்ணீர் விட்டு கலங்க செய்ய முடியும்? கிறித்துவனின் படைப்புகள் கிறுத்துவனுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தும், இஸ்லாமிய படைப்புகள் இஸ்லாமியனுக்கு மட்டுமே தாக்கம் செலுத்தும் எனும் அபத்தமான வாதத்துக்கு ஜெயமோகனின் இந்த கூற்று நம்மை இட்டுச் செல்லும். இது எவ்வளவு உண்மைக்கு புறம்பானது என்பதை இந்த ஒன்றை மட்டுமே வைத்து கூட நாம் புரிந்து கொள்ளலாம்.
மதத்தில் ஈடுபாடு குறைந்தால் சமூகம் சீரழிந்து, கலாச்சார வறுமை கொண்டு வறியதாகும் என்பது காந்தியிடம் இருந்து பெற்ற ஒரு மூடநம்பிக்கை (காந்தி இதே அபத்த தர்க்கத்தை வைத்தே வைதீகத்தை, சாதி அமைப்பை ஆதரித்து, நவீனத்தை எதிர்த்துக் கொண்டிருந்தார்.) தான் இன்னும் ஆசானை ஆட்டிப் படைக்கிறது என நினைக்கிறேன்.
ஒரே கேள்வி தான்: மதம் தோன்றும் முன்பே இருந்த ஆழ்படிமங்கள் எப்படி மதம் இல்லாத நிலையில் அழியும்? குழந்தை பெறும் முன்பு தாய் இறந்தால் அந்த குழந்தை பிறக்காமல் போகலாம். ஆனால் குழந்தை இறந்தால் அதனால் தாய் இல்லாமல் ஆவாளா? மேலும் பல பிள்ளைகளைப் பெற்று அவள் தொடர்ந்து அன்னையாகவே இருப்பாள் (அன்னை - ஆழ்படிமம்; குழந்தை - மதம்). ஆழ்படிமம் என்பது கடவுள் தோன்றும் முன்பே ஏற்பட்ட ஒன்று.
ஆசானுக்கு வைதீக மதம் மீதுள்ள ஒருவித மிகையான பாசத்தினாலே தொடர்ந்து இப்படி பேசிக் கொண்டு போகிறார். அவர் அகவிடுதலை பெற விரும்பினால் இந்த மதப்பற்றை விட வேண்டும். இந்த வெற்றுப் பிரச்சாரத்துக்காக சொற்களை இறைப்பதை நிறுத்த வேண்டும். ஆயிரமாயிரம் சொற்களால் கூட ஒரு பொய்யை காப்பாற்ற முடியாது! மக்களுக்காகத் தான் மதம், மதத்துக்காக மக்கள் அல்ல.
மனிதனின் இருப்பு இன்மையிலேயே உள்ளது, கடவுளில் அல்ல. இந்த உண்மை புரிந்து மதத்தின் பொய்கள் புலப்படும் போது மக்கள் அதை விட்டு வெளியேறுவார்கள். அதைத் தடுக்க முடியாது. அதுவரை இந்த இருட்டு இருக்கும்! நீங்கள் இந்த ‘இருட்டு’ காணாமல் போய் விடக் கூடாதென இப்படி எழுதி எழுதி மாய வேண்டியதில்லை.
துணைக்குறிப்புகள்
ஜெ.மோவின் மேற்கோள்கள்:
“இந்து பண்பாடு என நான் சொல்வது ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் தொடர்ந்து நடந்து வரக்கூடிய ஒரு மாபெரும் அறிவுச்செயல்பாடு. ஒரு மூடன், இந்து மதம் என்பது அழிய வேண்டியது என்றோ அது ஒடுக்குமுறை மட்டுமே சொல்லக்கூடியது என்றோ அதில் ஞானமும் அறிவும் இல்லையென்று சொல்வானென்றால் ஒரு வார்த்தையில் அந்த மூடன் பல்லாயிரம் அறிஞர்களை ஞானிகளை கவிஞர்களை படைப்பாளர்களை சிந்தனையாளர்களை நிராகரிக்கிறான்.”
“மிகத்தொன்மையான நாகரிகங்களில் மூத்த ஞானமரபுகளில் ஒன்று. எப்படி ஷிண்டோயிசம், தாவோயிசம், எகிப்திய மதம், ஆப்பிரிக்காவின் தொல்குடி மதங்கள் மனித இனத்துக்கு முக்கியமானதோ அதைவிடப் பல மடங்கு முக்கியமானது இந்து மெய்யியல் மரபு. இந்த மரபு இங்கு என்றும் நீடிக்க வேண்டும். தன்னைத் தொடர்ந்து குறைகள் களைந்து மேம்படுத்தி ஒரு நதி போல முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ”
“இந்துப்புராணங்கள், இந்துமதக்குறியீடுகள் போன்றவற்றை இரண்டு தளம் கொண்டவையாகவே காணவேண்டும். ஒன்று, அவை வழிபாட்டுக்குரிய உருவகங்கள், வடிவங்கள். இரண்டு, அவை இந்நிலத்தில் வாழும் தொன்மையான பண்பாட்டுமரபின் ஆழ் படிமங்களும் குறியீடுகளும்.”
“இந்து மரபு பேணப்படவேண்டும் என்று, பயிலப்படவேண்டும் என்று, அது அழிந்தால் இந்தியா அகவயமாக அழிந்துவிடும் என்று, நான் சொல்வது அதனாலேயே. இந்தியாவுக்கு எதிரான சக்திகள் இந்துப்பண்பாட்டை சிறுமைசெய்வதும் பழிசுமத்தி அழிக்கமுயல்வதும் இதனாலேயே. அதற்கு எதிரான செயல்பாடாகவே என்னுடைய சென்ற முப்பதாண்டுக்கால அறிவியக்கச் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எஞ்சும் நாளிலும் அவ்வாறே.”
