“திறமை இருப்பவர்கள் படித்து மேலே வந்துவிடலாம். பல உயர்சாதி மக்களால் திறமை இருந்தும் வேலைக்கு வர முடியவில்லை. பலர் திறமையே இல்லாமல் இட ஒதுக்கீட்டால் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். மக்களிடம் சென்று சாதிவாரி இட ஒதுக்கீடு வேண்டுமா எனக் கேட்டால் பலரும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். இடஒதுக்கீடு ரொம்ப காலத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது. அது ஏன் இன்னும் மாற்றப்படவில்லை?
90 மார்க் எடுக்கும் ஒரு மாணவன் உயர்சாதி என்பதாலேயே நீங்கள் இடம் கொடுக்கவில்லை எனில், அது ஏற்றத்தாழ்வு இல்லையா?”
- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா
பத்மப்ரியாவின் இந்த கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தேன். ஏனென்றால், ஒரு ஆசிரியனாக பல உயர்சாதி, மேற்தட்டு இளைஞர்களிடம் இக்கருத்து உள்ளதை பலமுறை கண்டிருக்கிறேன். “பல உயர்சாதி மக்கள்” திறமை இருந்தும் இட ஒதுக்கீட்டால் வேலையின்றி தவிக்கிறார்கள் என்பது ஒரு ஆதாரமில்லாத, பொதுப்புத்தி கருத்து மட்டுமே. எதார்த்தம் வேறு.
கடந்த வருடம் என்னுடைய வகுப்பொன்றில் அம்பேத்கரின் நூலின் அத்தியாயம் ஒன்றை சொல்லித் தரும் போது அதில் உரையாற்ற தலித்தியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் நண்பர் ஒருவரை அழைத்து சென்றேன். அவர் பேசினார். அதன் பிறகு மாணவர்களில் ஒருவர் கேள்வி கேட்டார். அச்சு அசலாக பத்மப்ரியா கேட்டுள்ள அதே கேள்வி தான் - “ஏன் இட ஒதுக்கீடு திறமையில்லாத தலித்துகளுக்கு வழங்கப்படுகிறது, உயர்சாதி மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்?” வகுப்பில் பிற மாணவர்களும் இதை ஏற்றுக் கொண்டதை போல மௌனம் சாதித்தனர். சிலர் மெல்ல தலையசைத்தனர். நண்பர் ஒரு எதிர்-கேள்வி கேட்டார்: “இட ஒதுக்கீடு அதிகமாக எந்த பிரிவினருக்கு வழங்கப்படுகிறது தெரியுமா?” மாணவர் உடனே “எஸ்.ஸி, எஸ்.டி பிரிவினருக்கு” என்றார். அப்போது நண்பர் அது தவறு என விளக்கினார். அரசு வேலைகளிலும், கல்வி நிலையங்களிலும் மொத்தமாய் 59.50% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது (இப்போதைய கணக்கு). இதில் 22.5% தான் தலித்துகளுக்கு. 27% பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எனப்படும் மத்திய, கீழ்மத்திய சாதிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய நடுவண் அரசு கூடுதலாய் 10% பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவில் உள்ள (உயர்) சாதியினருக்கு அளிக்கிறது. கணக்குப் போட்டுப் பார்த்தால் 59.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 37% தலித்துகள் அல்லாதோருக்கு போய் விடுகிறது. ஆனால் இட ஒதுக்கீட்டின் மொத்த பழியும் அவர்கள் மீது போய் விழுகிறது. யாரும் 27% மத்திய, கீழ் மத்திய சாதியினர் பெறும் இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பற்றி பேசுவதில்லை.
மொத்தமாய் தலித்துகளே அனுபவிப்பதாய் ஒரு பொதுப்புத்தி எண்ணம் இங்கே சுற்றி வருகிறது. இதைத் தான் முதலில் உடைக்க வேண்டும். ஆனால் பத்மப்ரியா போன்ற மக்கள் நீதி மய்யத்தினர், பாஜகவை பின்பற்றி, இந்த பொய்ப்பிரச்சாரத்துக்கு நீரூற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள OBC பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் 180 சாதிகள் வருகின்றன. இந்த சாதிகளுக்குள் நான்குக்கு மேல் பகுப்புகள் பெரும்பாலானவற்றுக்குள் வருவதை வைத்துப் பார்த்தால் எப்படியும் 252 சாதிகள் வரும் என பிரண்ட் லைன் கட்டுரை ஒன்று சொல்கிறது. அதாவது மொத்த தமிழக மக்கள் தொகையில் 68% OBC மக்கள் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுகிறார்கள். தலித்துகளோ வெறும் 21% தான். சாதிவாரி இட ஒதுக்கீட்டால் பயனடையாத உயர்சாதியினர் வெறும் 8% தான். பத்மப்ரியா போன்றோர் தம்மை மட்டும் கணக்கில் கொண்டு தான் பல உயர்சாதி திறமையாளர்கள் இட ஒதுக்கீட்டால் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் எனக் கூறுகிறார். மக்களிடம் சென்று கேட்டால் இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்லுவார்கள் என அவர் கருதுகிறாரே அந்த மக்களும் இந்த 8% தான்.
இந்த முன்னேறிய 8% மக்களுக்காகத் தான் பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கிறது. இதையே தான் பத்மப்ரியாவும் செய்கிறார். கேட்டால் “எனக்கு மோடிஜியை பிடிக்கும்” என்கிறார். இதே மோடிஜி கொண்டு வந்த சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை எதிர்த்து இவர் முன்பு பேசித் தான் பிரபலமானார். அப்போது இவரை பாஜகவினர் கீழ்த்தரமாக மிரட்டி அவமதித்தனர். இந்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவைக் கொண்டு வந்து நாட்டை சுடுகாடு ஆக்க அரசு முயல்கிறது எனச் சொன்னாரே அந்த அரசின் தலைவர் தானே மோடிஜி. ஒருவருடைய அரசியல், கொள்கைகளை எதிர்ப்பவருக்கு எப்படி அவரை மட்டும் பிடிக்க முடியும்? அவர் ராமர் கோயிலை கட்டுவதாலா? அல்லது அவர் தான் உங்களுடைய சாதி மக்களுக்காக 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார் என்பதாலா?
இது ஒன்றைக் காட்டுகிறது - இவர் தன் சமூகத்தைத் தாண்டி யாரையும் மக்களாகவே மதிக்கவில்லை. அவர்கள் - 92% மக்கள் - அவருடைய மனப்பரப்பிலே இல்லை. தன் சாதியைக் கடந்து யோசிக்கத் தெரியாத இவரை கமல் எந்த விடயத்தை கண்டு மெச்சி வேட்பாளராக நிறுத்தி உள்ளார்?
10% இட ஒதுக்கீடு அவசியமில்லை என இதே கமல் முன்பு கூறினார். ஆனால் அவரது வேட்பாளர் இதற்கு நேரெதிராக பேசுகிறார். எனில் ஒரு சின்ன விசயத்தில் கூட கட்சிக்குள்ளாகவே ‘கொள்கைத் உடன்பாடு’ இல்லை (கொள்கையே இல்லை என்பது வேறு விசயம்).
குஷ்பு பாஜகவுக்குள் வந்தது போலத்தான் பத்மப்ரியாவும் வந்திருக்கிறார் போல. குஷ்பு நுழைந்தது பாஜகவின் முன்வாயில் என்றால் பத்மப்ரியா நுழைந்துள்ளது அதன் ‘பின்வாயில்’ வழியாக.
