இந்த தேவ்தத் படிக்கல் ஒரு தனித்துவமான கலவை - அதிரடியாக ஆடினாலும் கண்டமேனிக்கு சுற்றுவதாகத் தோன்றாது. இதனாலே அவர் சரளமாக / வேகமாக ஆடும் போது ‘இதோ இப்போ அவுட் ஆகிடுவான் பாரேன்’ எனத் தோன்றாது. ஐ.பி.எல்லில் வேறு பலர் அடித்தாடும் போது ஏதோ கடையில் இருந்து முட்டையை காகிதத்தில் பொதிந்து வீட்டுக்கு எடுத்து வரும் திகில் உணர்வு இருக்கும். ஆனால் படிக்கல் அதிரடியாக ஆடும் போது ‘இவன் அவுட் ஆவான்னு தோணலியே’ என்றே எனக்குத் தோன்றும். அவருக்கு கச்சிதமான தடுப்பாட்டமோ பழுதற்ற காலாட்டமோ இல்லை. அவர் கால்களை போதுமானபடி அசைப்பதே இல்லை. ஆனால் ஒரு தெளிவான திட்டமிடல், தெளிவு, temperament என சொல்வார்களே அந்த நிதானம் உள்ளது.
கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும்: அவர் இரண்டு, மூன்று ஷாட்களைத் தான் பவுண்டரி, சிக்ஸர்களுக்காக அடிக்கிறார். வேறு ஷாட்கள் இல்லாமல் அல்ல, தன் அதிரடி ஆட்டத்தை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக. இது கோலியின் ஸ்டைல். அவர் எப்போது எப்படி ஆடுவார் என நாம் சுலபமாக கணிக்க முடியும். இந்த கணிக்கத்தக்க ஆட்டமே கோலி தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கக் காரணம். படிக்கல்லும் அப்படித்தான்.
எனக்கு படிக்கல்லிடம் பிடித்த இன்னொரு விசயம் அந்த உயரமும் அதனால் அவருக்கு உள்ள அசாத்தியமான மட்டை வீச்சும் (reach). மற்றவர்களுக்கு நல்ல நீளமாக உள்ள பந்து இவருக்கு முழுநீளம். முன்னங்காலுக்கு வந்து அப்படியே நேராக தூக்கி அடித்தால் பந்து மைதானத்தை சுலபத்தில் கடந்து விடுகிறது. இதனாலே எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் முன்னாள் ஆஸ்திரேலிய துவக்க மட்டையாளர் மேத்யு ஹெய்டன் நினைவுக்கு வருகிறார்.
அடுத்து அவர் தனது பெரும்பாலான பெரிய ஷாட்டுகளை முன்னங்காலுக்கு சென்று நேராக அடிக்கிறார். இப்படி நடக்கும் போது வேக வீச்சாளர்கள் உயரப்பந்துகளைப் போடுவார்கள். பெங்களூரில் வளர்ந்த பெரும்பாலான மட்டையாளர்களைப் போல படிக்கல்லும் பின்னங்கால் ஷாட்டுகளை - pull and hook - நன்றாக ஆடுகிறார்.
அவர் எக்ஸ்டிரா கவரிலும் மிட்விக்கெட்டிலும் முழுநீளப்பந்துகளை அடிக்க முயல்வதில்லை. இதனாலே மெது பந்துகளுக்கு ஷார்ட் மிட்விக்கெட்டிலோ கவரிலோ கேட்ச் கொடுப்பதில்லை. சமநிலையை இழந்து எல்.பி.டபிள்யொ ஆவதில்லை. பந்தை இறுதி வரை கவனிப்பதன் சுலபத்தில் பவுல்ட் ஆவதில்லை. இதனாலே மூன்றாவது-நான்காவது ஸ்டம்பில் போகும் பந்தை விரட்ட முயன்று எட்ஜ் கொடுப்பதும் இல்லை.
ஹெய்டனைப் போல இவர் அதிகமாக ஸ்வீப் செய்வதில்லை, ஆனாலும் சுழல் பந்தை நன்றாகவே ஆடுகிறார்; ஆடுதளத்தைப் பொறுத்து என்ன ஷாட் என தீர்மானிக்கிறார் என நினைக்கிறேன். ஒன்று ரொம்ப முன்னுக்கு வந்து அடித்தாடுகிறார், அடுத்து உடனே பின்னுக்கு சென்று வெட்டியோ புல் செய்தோ ரன் எடுக்கிறார் - பழைய இங்கிலாந்து மட்டையாளர் அலிஸ்டெர் குக்கைப் போன்று. குக்கைப் போல படிக்கல்லின் முன்னங்கால் நேராகவே இருக்கும், பந்தின் திசைக்கு ஏற்ப அசையாது.
படிக்கல்லின் பலவீனம் பந்து ஸ்விங் ஆகும் போது நான்காவது-ஐந்தாவது ஸ்டம்பில் விரட்டுகிற நீளத்தில் போட்டால் அவரால் கையாள முடியாது என்பது. அடுத்து, நின்று வரும் ஆடுதளத்தில் இவருக்கு சரியாக டைமிங் செய்ய முடியாமல் போகும் என்பது. ஆனாலும் போராடி 100 ஸ்டிரைக் ரேட்டில் முப்பது, நாற்பது ரன்கள் எடுத்து விடுவார்.
இந்திய ஒருநாள் அணியில் ஷிக்கர் தவனின் ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்தை படிக்கல் எடுத்துக் கொள்வார் எனத் தோன்றுகிறது. ப்ரித்வி ஷா இவரை விட திறமையாளர்; ஆனால் ஒப்பிடுகையில் நிதானமோ வடிவொழுங்கோ அவருடைய ஆட்டத்தில் இல்லை. ஷா மிக மட்டமான களத்தடுப்பாளர் வேறு. அதோடு இந்த வயதிலேயே அவ்வப்போது முட்டிப்பிரச்சனை வருகிறது. மேலும், இப்போதைக்கு படிக்கல்லுக்கு இணையான ஒரு நல்ல இடது கை துவக்க வீரர் வேறு யாரும் உள்ளதாகத் தோன்றவில்லை. இறுதியாக, அவர் பெங்களூர் ராயல்ஸ் அணியில் கோலியின் கீழ் ஆடுகிறார். பெங்களூர் அணியில் ஆடுவது இந்திய அணியில் நுழைய முதல் வாயில் என நமக்குத் தான் தெரியுமே!
