இன்று ஒரு வகுப்பில் ஒரு மாணவனை சுய அறிமுகம் பண்ணக் கேட்ட போது தனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்றான். சரி உனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்றேன். “யாருமே இல்லை” என்றான். ஒரு கணம் சிரிப்பு வந்தாலும் அதுவே சிறந்த பதில் என உடனே தோன்றியது. நான் என் 13வது வயதில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். இப்போது ஆடுகிற வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நானும் அதே பதிலைத் தான் சொல்வேன்.
இந்தியாவில் சச்சினின் ஓய்வுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படவில்லை. கூடவே கும்பிளே, கங்குலி, லஷ்மண், சேவாக் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம். பாகிஸ்தானில் இன்ஸமாம், அன்வர், யூனிஸ் கான், ஷோயப், அக்ரம், சக்லைனுக்குப் பின் அப்படியான வீரர்கள் தோன்றவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஏ.பி.டிவில்லியர்ஸ், ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தில் பீட்டர்ஸன், மே.இ தீவுகளில் லாரா, ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் வாஹ், பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்ன், இலங்கையில் அரவிந்த டி சில்டா, ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, முரளி ஆகியோருக்குப் பிறகு கிரிக்கெட்டில் கடவுளர்களே தோன்றவில்லை. சாமான்யர்கள் அவர்களின் இடத்தை எடுத்துக் கொண்டார்கள். நீங்கள் சச்சினின் காலத்தில் ஒரு விராத் கோலியை மகத்தான மட்டையாளராக ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா? கோலி என்றைக்குமே ஒரு பானிபூரி விற்பனையாளர் தான். அதையே தான் ஜோ ரூட்டுக்கும் சொல்ல வேண்டும். ஸ்டீவ் ஸ்மித்திடம் ஒரு ஹீரோயிசம் டெஸ்ட் போட்டிகளில் சிறிது காலம் வெளிப்பட்டிருந்தாலும், அது ஆட்டத்தை போக்கை தலைகீழாக மாற்றுவதாகவோ பந்து வீச்சாளர்களை கதறடிப்பதாகவோ இருக்கவில்லை - துளித்துளியாக ரத்தத்தை வடித்து கொல்லுகிற பாணி அவருடையது. இருந்தாலும் அணியை முன்னின்று நடத்துகிற ஒரு அரிய திறன் அவரிடம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் தடை செய்யப்பட்டு, இப்போது மீண்டு வந்த நிலையில் அதையும் இழந்து விட்டார்.
இன்றைய அணியின் வீரர்களிடம் இல்லாதது தானே முன்னின்று நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் எனும் பேராசை. நான் தான் ஹீரோ என அறைகூவும் ஆற்றல். இன்றைய நட்சத்திரங்கள் சொற்ப நேரமே ஜொலிக்கக் கூடியவர்கள். ஒரு சில அற்புதமான சிக்ஸர்கள், பவுண்டரிகளுடன் முடிந்து விடக் கூடியவர்கள்.
முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் ஆடிய போது 300க்கு மேல் இலக்கை இறுதி இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு வைத்தார்கள் என நினைக்கிறேன். கடைசி நாள் ஆட்டம். ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் மேல் இழந்து விட்டது. நிச்சயமாக ஆஸ்திரேலியா தோற்கப் போகிறது எனும் எதிர்பார்ப்பு. கடும் அழுத்தம். அப்போது கில்கிறிஸ்ட் களமிறங்கி அற்புதமாக ஸ்வீப்பும் புல் ஷாட்டுமாக அடித்து ஆட்டத்தின் போக்கை கதிகலங்க வைத்தார். அந்த புள்ளியில் இருந்து அநாயமாக வென்றளிக்கவும் செய்தார். ஆஸ்திரேலியா ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடர் ஆடிய போது மும்பையில் ஒரு போட்டியில் இதே போன்ற ஒரு நிலையில் ஆஸ்திரேலியாவை அவர் வெல்ல வைத்தார். 96இல் என நினைக்கிறேன். சேப்பாக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இறுதி நாளில் சச்சினும் மோங்கியாவுமாக ஒரு அற்புதமான ஜோடி ஆட்டம். நிச்சயாக இந்தியா இலக்கை அடைந்து விடும் என அரங்கே எதிர்பார்த்தது. சச்சின் சதமடித்து விட்டார் (136). அப்போது அக்ரமும் சக்லைனுமாக அற்புதமாக பந்து வீசி தம் அணியை திரும்பக் கொண்டு வந்தார்கள். பாகிஸ்தான் வென்றது. சச்சின் ஓய்வறையில் இருந்து அழுதார். சேப்பாக் பார்வையாளர்கள் எழுந்து நின்று பாகிஸ்தான் அணிக்கு மரியாதை செலுத்தினார்கள். இதே போல, லாரா தன்னந்தனியாக சதமடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் இறுதி நாளை முழுக்க தனதாக்கி வென்ற சாதனைகளைப் பார்த்திருக்கிறேன் (153). இப்போதெல்லாம் தோல்வியின் விளிம்பில் இருந்து மட்டையாளர்களோ பந்து வீச்சாளர்களோ தனியாக போராடி மீண்டு வந்து அணியை வெற்றி பெற வைப்பதை நாம் காண்பதில்லை. தோல்வி நிச்சயம் என்றால் அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என கரகாட்டக்காரன் காரை தள்ளிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். தோற்று விட்டோமே எனும் காவியத் துயரம், அவமானம் எல்லாம் இல்லை. பார்வையாளர்களும் ஐந்து நிமிடங்களில் தோல்வியை மறந்து வேறு கேளிக்கைகளுக்குள் போய் விடுவார்கள். இன்று நாம் சராசரித்தனத்தை கொண்டாடும் ஒரு “யுகசந்தியை” அடைந்து விட்டிருக்கிறோம்.
இன்னொன்று, ஒரு போட்டியின் போது கிறிஸ் கெய்ல் அணியில் இருந்து நீக்கப்படும் நிலை. ஒரு சதம் அடித்து அவரால் தன் இடத்தை உறுதிப்படுத்தி இருக்க முடியும். ஆனால் கெய்லின் ஈகோ காயப்பட்டு விட்டது. அவர் அந்த வலியை, வெறியை அப்போது தான் ஆடிய இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காட்டினார். நின்று அடித்துக் கொண்டே இருந்தார். முன்னூறுக்கு மேல் ஒரே இன்னிங்ஸில் வெளுத்து வாங்கினார். ஆனால் இப்போதைய நியுசிலாந்து அணித்தலைவர் வில்லியம்ஸனை எடுத்துக் கொள்ளுங்கள். கெய்லை விட அவர் திறமையானவரே. ஆனால் ஒரு ஒருநாள் போட்டியில் கூட துவக்க வீரராக இறங்கி 200 அடித்திருப்பாரா? ஒரு டெஸ்ட் போட்டியிலாவது 300 அடித்திருப்பாரா? அவருக்கு அந்த தகுதியும் திறமையும் உண்டு. ஆனால் தனக்கென அமைத்துக்கொண்ட ஒரு மீன் தொட்டியில் சுற்று சுற்றி வருவதை விட்டு விட்டு கடலில் நீச்சலடிக்க மாட்டார். ரோஹித் எனக்கு மிகவும் பிடித்த மட்டையாளர். ஆனால் சேவாக்கின் சாதனையை கூட அவர் நெருங்க முயலவில்லை.
ஒரே விதிவிலக்கு தான் - ரிஷப் பண்ட். இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் காபாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கிறிஸ் கெய்ல் பாணி ஆட்டத்தை இரண்டாவது இன்னிங்ஸில் அளித்து இந்தியாவை அவர் வெற்றிப் பாதையில் நடையிட செய்ததை மறக்க முடியாது (89). இந்த காலகட்டத்தின் ஒரே ஹீரோ அவர் தான். அவருக்கு அந்த ஆசை, துணிச்சல், உந்துதல் உள்ளது. ஆனால் கன்னாபின்னாவென நிறைய போட்டிகளில் ஆடுவதால் அவரால் நீடிக்க முடிவதில்லை.
இன்றைய கிரிக்கெட்டில் ஹீரோக்கள் இல்லாததற்கு ஒரு காரணம் டி-20 போட்டிகளும், ஐ.பி.எல் போன்ற போட்டித்தொடர்களும். மற்றொரு காரணம் மிக அதிகமான போட்டிகளை நாம் இப்போது சலிக்க சலிக்க ஆடுவது. இறுதியாக அந்த ஹீரோ மனநிலையே இன்று காணாமல் போய் விட்டது என்பது. சின்னச்சின்ன விசயங்களுக்கு சுயமாக கொண்டாடி, நானே ராஜா, நானே உலகம் என கருதுகிற அற்பத்தனமான ஒரு கலாச்சாரம் ஏற்பட்டு விட்டது. ஒரு போட்டியில் 20 பந்துகளில் 50 அடித்தால் அவருக்கு 200 ரன்கள் எடுத்த திருப்தி வந்து விடுகிறது. தோற்கும் போட்டியில் சதம் அடித்தால் ஏதோ போட்டியை தான் வென்றளித்தது போன்ற பெருமை வந்து விடுகிறது. இப்போதைய கிரிக்கெட்டைப் பார்க்க எழுபதுகளின் ஶ்ரீகாந்த், முத்துராமன், ரவிச்சந்திரன் படங்களைப் பார்ப்பது போல இருக்கிறது.
ஒருவிதத்தில் கிரிக்கெட்டின் அவலமான காலம் இது!



