விராத் கோலியின் கால் பாடத்தில் உள்ள ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றி இன்று சுனில் கவாஸ்கர் விளக்கினார். பந்து நான்காவது பந்தில் விழுகிறது. மட்டையாளன் இப்போது தன் பின்னங்காலை நடுக்குச்சியிலும் முன்னங்காலை off குச்சியிலும் வைத்து ஒன்று அப்பந்தை அது வைடாக செல்லும் பட்சத்தில் விட்டு விட வேண்டும் அல்லது நேராக வந்தால் விரட்ட வேண்டும். விராத் கோலியின் பின்னங்கால் off குச்சிக்கு போகிறது. முன்னங்கால் நான்காவது, சில நேரம், ஐந்தாவது குச்சிக்குக் கூடப் போகிறது. விளைவாக 7வது, 6வது குச்சியில் விழுந்து நேராக வரும் பந்தை கோலி தன் கைகளால் ஆட முயன்று ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுக்கிறார். இது ஏன் நடக்கிறது?
பந்து வெளிப்படும் போதே லைனை கணித்து பின்னங்கால் நடுக்குச்சிக்கு செல்லும் போது முன்னங்கால் off குச்சி எங்கிருக்கிறது என்பதை மட்டையாளனுக்கு உள்ளுணர்வால் உணர்த்தி விடுகிறது. அப்போது வெளியே செல்லும் பந்தை தடுப்பதோ விடுவதோ எளிதாகிறது. 7வது, 6வது குச்சியில் விழும் பந்து அப்போது ரொம்ப வைடாகத் தெரிகிறது. அப்பந்தை அடிக்காமல், அடித்து எட்ஜ் கொடுக்காமல் தப்பிக்கலாம். இந்த தப்பை திரும்பத் திரும்ப செய்யும் கோலி தொறந்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதுவே கோலிக்கு நடந்தது.
கோலி மட்டுமல்ல, இதே தவறை ரஹானேவும் தொடர்ந்து செய்து அவுட்டாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் மயங்க் அகர்வாலும் இந்த அபாயகரமான உத்தியை பயன்படுத்தி தோல்வி உற்றார். இதை வெற்றிகரமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் ஆஸி அணியின் ஸ்டீவின் ஸ்மித், அவருக்கு முன் தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், அவருக்கும் முன் மே.இ தீவுகளின் சந்தர்பால் ஆகியோர். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இவர்களுக்கு அபாரமான சுயக்கட்டுப்பாடு இருந்தது. நான்காவது குச்சியில் விழும் பந்தையும் கால்பக்கமாகவே அடிக்க முயன்றார்கள். அப்பகுதியில் தான் அவர்களின் வலிமையும் இருந்தது. மேலும் இது அவர்களுக்கு இளமையில் இருந்தே இயல்பாக கைவந்த தொழில்நுட்பம். ஆனால் கோலி, ரஹானே போன்றோர் இதை தாமதமாக ஒரு நெருக்கடி நிலைமையில் கடன் வாங்க முயன்றவர்கள். என்ன நெருக்கடி?
கோலியின் கால்பாடமானது 2019இல் இருந்தே சற்று மாறி விட்டது. அவர் ஒருநாள், டி-20 போட்டிகளில் அடித்தாட முயன்ற போதோ எப்படியோ இது நிகழ்ந்து விட்டது. ஆக வெளியே செல்லும் பந்துக்கு அவர் பின்னங்கால் சரிவர அசையாமல் போனது. வெறும் கைகளால் off பக்கமாக பந்தை விரட்ட முயன்றார். சில நேரங்களில் இது வெற்றி தந்தது, சில நேரங்களில் தோல்வியும். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் ஆக வாய்ப்புள்ள ஆடுதளங்களில் கோலி இந்த குறையை ஈடு செய்ய back and across எனும் இந்த off குச்சியில் பின்னங்காலை நகர்த்தும் உத்தியை பயன்படுத்த முயன்றார். அவருடைய நோக்கம் இல்லாத கால்பாடத்தை ஈடுகட்டுவது. ஆனால் இது எதிர்மறையான விளைவையே கோலிக்கு தந்துள்ளது. கோலியின் தாக்கத்தினால் என்னவோ இதை தம் ஆட்டத்திலும் முன்னெடுக்க முயன்ற மத்திய வரிசை மட்டையாளர்களும் தோல்வியை சந்தித்தனர்.
இந்த கால்பாடத்தை கோலி இங்கிலாந்துக்கு எதிராக இப்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திருத்திக் கொள்ள முயன்றார். அதனாலே அவரால் off பக்கமாக சரளமாக ஆட முடிந்தது. ஆனால் சாம் கரன் பந்து வீச வந்ததும் முன்னங்காலை குறுக்க கொண்டு போய் எல்.பி.டபிள்யோ ஆகப் போய் தப்பித்தார். அது அவரது பழைய சந்தேகங்களை, பயங்களைக் கிளற, மீண்டும் back and across போனார். ரொம்ப வைடாகப் போன பந்தை ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுத்தார்.
ஆனால் கோலி நிறைய சிந்திக்க கூடிய மட்டையாளர். இந்த இன்னிங்ஸில் காணும் மாற்றத்தைக் கண்டால் அடுத்த டெஸ்டில் கட்டாயமாக கால்பாடத்தை சரி பண்ணி அரைசதம் அடிப்பார் என நம்பிக்கை ஏற்படுகிறது. அதிர்ஷடம் இருந்தால் சதம் கூட அடிக்கலாம்.
