அண்ணாமலையின் பேச்சைக் கேட்கும் போது அவருடைய சொல்லுக்கும் மனதில் ஓடும் எண்ணங்களுக்கும் ஒரு இசைவின்மையை கவனிக்கலாம் - சற்று முன் என்ன பேசினோம் எனத் தெரியாமல் அடுத்ததாக சம்மந்தமில்லாத மற்றொன்றை சொல்லுகிறார். மதனை தான் மாவட்ட செயலாளராக ஆக்குவதாக சொல்லுகிறார், உடனே 2026இல் நீங்க எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கப் போறீங்க, அதுக்கான வேலைகளை இப்பவே ஆரம்பிங்க, இது ஒரு 5 வருட புரோஜெக்ட் பிரதர் என்கிறார். சற்று நேரம் கழித்து தமிழக ஊடகங்களை “நிர்வாகம்” பண்ணும் பொறுப்பு மதனுக்கு வழங்கப்படும், அவர் தமிழகத்தில் இருந்து மோடிஜியின் பிம்பத்தை உயர்த்தும் நோக்கிலான செய்திகள் தொடர்ந்து பேஸ்புக், டிவிட்டரில் வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், அதற்காக அவர் கீழ் இயங்குவதற்கு நிறைய பேர் கொண்ட ஒரு சமூகவலைதள அணி உருவாக்கப்படும் என்கிறார். மதனுடைய வேலை தமிழக ஊடக முதலாளிகளிடம் பேசி மோடியின் பெருமையை மக்களிடம் கொண்டு செல்ல வைப்பதே. ஒவ்வொரு சேனலிலும் வேலையில் இருந்து துரத்தி விடப்பட்டு எங்குமே போக முடியாமல் வாசலில் நிற்கும் மதன் எல்லா ஊடக முதலாளிகளையும் அமர வைத்து டீல் பேசப் போகிறாரா? எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஒட்டுமொத்த சமூகவலைதள நிர்வாகி, தமிழக ஊடக முகவர் என எங்கு ஆரம்பித்து எங்கு போகிறார் பாருங்க. இதில் முத்தாய்ப்பு அடுத்து வருவது தான்: “உங்க மதன் டயரிஸ் சேனலுக்கான ஸ்டுடியோ செட் அப்பை புனரமைக்க எவ்வளவு செலவாகுங்க பிரதர்?” “ஒரு மூணு லட்சம் இருந்தா காமிரா, கம்பியூட்டர் எல்லாம் வாங்கி செட் பண்ணிரலாம்.” கே.டி ராகவனின் முப்பது வருட அரசியல் வாழ்க்கையை “இன்ஸ்டண்டாக” முடித்து வைக்க அண்ணாமலை பேரம் பேசும் அழகைப் பாருங்க.
இதில் எதாவது நம்பும்படியாக இருக்கிறதா? இதே ஆள் தான் தனக்கு கே.டி ராகவனை விசாரித்து தண்டிக்கும் உரிமை இல்லை, தில்லியிடம் பேசி பொறுமையாக ஆறு மாதங்களில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார். அதற்கும் முன்பு தனக்கு எல்லா முடிவுகளையும் எடுத்து, துணிச்சலுடன் அடித்தாடும் அதிகாரத்தை அமித் ஷா வழங்கி உள்ளதாக சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்கும் போது தலை கிறுகிறுவென சுற்றிக் கொண்டு வருகிறதா?
இவ்வளவு வாக்குறுதிகள் கொடுத்து விட்டு, எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஊடக முகவர், மூன்று லட்ச மதிப்புள்ள ஒரு சின்ன யுடியூப் சேனலின் ஓனர் ஆக்குகிறேன் என இறக்கிக் கொண்டே வந்து விட்டு, “இந்த வீடியோ வந்தா மதன் பிரான்ட் நாளைக்கு எங்கியோ போயிடும் பாருங்க” என்று விட்டு மாலையில் அவரை கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்தே தூக்கி விடுகிறார் அண்ணாமலை. காண்டாகுமா ஆகாதா பிரதர்?
கொஞ்ச நேரம் கழித்து வெண்பாவிடம் அவர் ரொம்ப பணிவாக “இந்த கே.டி ராகவனை எப்படி விசாரிக்கலாமுன்னு சொல்லுங்க?” எனக் கேட்கிறார். உடனே மதனும் வெண்பாவுமாக சேர்ந்து அதிக எண்ணிக்கையில் பெண்கள் இடம்பெறும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க சொல்லலாம் என்கிறார்கள். இது கூட தெரியாதவரையா அமித் ஷா நம்பி பொறுப்பை ஒப்படைத்தார்?
இன்னும் 16 பேரின் காணொலிகள் தன்வசம் உள்ளன என மதன் ஏதோ “freshஆ சங்கரா மீன் வந்திருக்கு சார்” எனும் கணக்கில் சொல்ல, அதற்கு அண்ணாமலை “இந்த சேர்ல உட்கார்ந்திருக்கிற எனக்கு கட்சியில உள்ள எல்லார் பற்றின தகவல்களும் வந்து தான் இருக்கின்றன” என டப் கொடுக்கிறார். அவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு இவர் என்னதான் பண்ணுகிறார் எனும் கேள்வி எழுகிறது.
ஆனால் இதைத் தொடர்ந்து வெண்பாவிடம் “நீங்க ‘பொன்னியின் செல்வனில்’ டயலாக் எழுதுறீங்களா சிஸ்டர்?” என அப்பாவியாகக் கேட்கிறார். தன்னிடம் டீல் பேச வந்திருக்கும் வெண்பாவின் பின்னணியே தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த தமிழக பாஜக தலைவர்களின் அந்தரங்க விவகாரமும் இவருக்குத் தெரியுமா? “இல்லிங்க நான் பாட்டு மட்டும் தான் எழுதி இருக்கேன்…” “எல்லா சாங்ஸுமேவா சிஸ்டர்?” “இல்லீங்க ஒரு பாட்டு தான்.” அப்போது வெண்பாவின் மைண்ட்வாய்ஸ்: “யோவ், நீ விகடன் கூட படிக்கிறது இல்லியா? கூகிள் பண்ணி பார்க்கலாமுல்ல.”
அடுத்து தான் செமையான ‘ஒன்னு வாங்கினால் ரெண்டு’ சலுகை வருகிறது: வெண்பாவை தான் பாஜக இலக்கிய அணியின் பொறுப்பாளர் ஆக்குகிறேன் என்கிறார். வெண்பா பாஜகவில் உறுப்பினர் தானா என்பது கூட தெரியாமல் அவரை இலக்கிய அணியின் பொறுப்பாளராக்குகிறேன் என ஒருவர் சொல்லுகிறார், வெண்பாவோ தான் ஒரு கட்சிக்கூட்டத்திற்குக் கூட போனதில்லை என்கிறார். இவரை நம்பி இவ்வளவு பெரிய லாரியை எப்படி ஒப்படைத்தார்கள்? (நான் என்ன சொல்றேன்னா “அண்ணாமலை ஜி அதெல்லாம் வேண்டாம், பேசாம வெண்பாவை முதல்வர் ஆக்கிடுங்க ஜி”.)
வெண்பா உடனே “எனக்கு பாதுகாப்பு மட்டும் கொடுங்க” என்கிறார் உஷாராக. உடனே நம் சிங்கம் “இந்த வீடியோவுக்குப் பிறகு யாராவது உங்களை அட்டாக் பண்ணினா I will ruthlessly go after them” என்கிறார். ஆனால் அடுத்த நாளே தன் வசமுள்ள காணொலிகளில் தோன்றும் பாஜக மகளிரணிப் பெண்களின் மார்ப் செய்யப்பட்ட முகங்களை ஒரிஜினலுக்கு மாற்றிடும் முயற்சியில் அண்ணாமலை தீவிரமாக இருப்பதாக தெரிய வந்ததாக வெண்பா சொல்லுகிறார். இதுதான் பெண்களை நீங்க பாதுகாக்கும் லட்சணமா?
மதன், வெண்பாவிடம் டீலிங் நடந்து கொண்டிருக்கும் போது தன்னைப் பற்றி தமிழிசையிடம் போட்டுக்கொடுத்த பிரசாத் என்பவருடைய கை,கால்களை கடவுள் அதற்கு அடுத்த நாளே உடைத்து விட்டதாகவும், அவரை தான் பூங்கொத்து, மலர்கள் சகிதம் போய்ப் பார்த்ததாகவும் மதனுக்கு ஒரு மறைமுக மிரட்டலை செய்கிறார் அண்ணாமலை. “நீங்க எம்.எல்.ஏ ஆக்குவேங்குறீங்க, கொஞ்ச நேரத்தில் கைகாலை உடைப்பேங்குறீங்க, இதென்ன தெலுங்கு சினிமாவா மிஸ்டர் மலை? தெலுங்கு சினிமா வில்லன்கள் கூட தன் பேச்சு பதிவாகிறது என உஷாராக இருப்பார்களே!”
அண்ணாமலையிடம் அடிப்படையாக ஒரு பிரச்சனை உள்ளது: அவர் தனக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால் அதைத் தவிர வேறெதையும் அவரால் யோசிக்க முடிவதில்லை. மனம் அது வேண்டும், அது வேண்டும் என பரிதவிக்கிறது. அதனால் தான் நம்பும்படியாக, கோர்வையாக பேசக் கூட வரவில்லை. ஒன்று சொல்லி விட்டு அடுத்த நொடியே அதற்கு மாறாக இன்னொன்றை சொல்லுகிறார். தொடர்ந்து பதற்றத்துக்கு மேல் பதற்றம். என் கணிப்பு சரியென்றால் அவருக்கு ஏதோ மனப்பிரச்சனை இருக்கிறது. நீங்கள் இப்போது இருந்து / நின்று கொண்டிருக்கிற இடத்தில் இருந்து ஒரு பொருள் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அதை எடுக்கணும், எடுக்கணும் என்று மட்டுமே யோசிங்க. எப்படி எடுக்கணும் என்றெல்லாம் யோசிக்காதீங்க. “அது வேணும்” என்பதையே உங்க மனமாக உருமாற்றுங்க. போகிற வழியில் கிடக்கும் நாற்காலி கண்ணுக்குப் படாது. தரையில் எண்ணெய் சிந்தியிருந்தால் கவனிக்க முடியாது. அதாவது situational awareness சுத்தமாகப் போய் விடும். புத்திக்கும் பேச்சுக்கும் தொடர்பு அறுந்து விடும். அப்படியே நடங்க. நிச்சயமா விழுந்து விடுவீர்கள். அண்ணாமலை ஒவ்வொரு விசயத்தையும் இப்படித்தான் டீல் பண்ணுகிறார். அவருடைய ஊடக சந்திப்புகளில் இந்த மனப்போக்கை வெளிப்படையாகவே பார்க்கலாம், அது அவருடைய ஊடக சாமர்த்தியமின்மை, அனுபவமின்மை என நினைத்தேன். இல்லை, உண்மை என்னவென்றால் அவர் மனிதர்களிடம் சும்மா பேசும் போதே நாக்கு உதறுகிறது. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மக்கள் காய் நகர்த்துவார்கள், அவர்களிடம் தன்னை எப்படி முனைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே மானங்கெட்ட அந்த மைண்ட் வாய்ஸ் வேறு அவர் சொல்லைக் கேட்காமல் தத்தித்தத்தி போய் எங்காவது விழுந்து அடிவாங்குகிறது.
தமிழக பாஜகவை நிர்வகிப்பதில் அண்ணாமலை மிக மோசமான தேர்வு. அது மட்டுமல்ல, இவரை சந்தோஷ், நட்டா, ஷா கூட்டணி இப்படியே வளர விட்டால், பாஜகவின் தேசியத் தலைவர்களையும் இப்படி பாலியல் ஹனி டிராப்பிங் முறையில் மிரட்டிப் பணிய வைக்க முயல்வார். மதன் சொல்வதைப் போல “சின்னப்பிள்ளை ஆட்டம்” ஆடுகிறார் அவர். மிஸ்டர் நட்டா, பேசாமல் தமிழிசையையே மீண்டும் தமிழக பாஜகவின் தலைவர் ஆக்குங்க. என்னதான் மக்கள் அவரை பகடி பண்ணினாலும், அவர் மீது எல்லாருக்கும் நல்ல அபிப்ராயம் உண்டு. மக்களை அனுசரித்து செல்பவர். ஒருவேளை இந்த பாஜக ஜல்சா பிம்பத்தை களையவும் அவர் உதவலாம்.
இல்லாவிட்டால், அண்ணாமலையை அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர விட்டால், ஆடிருந்த இடத்தில் ஆட்டுப்புழுக்கை கூட எஞ்சாது!
