முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்கானிஸ்தான் குறித்த கவலைகள்



அப்கானிஸ்தான்-தாலிபான் பிரச்சனை முழுக்க அம்மக்களின் வரலாறு, உள்நாட்டுச்சிக்கல்கள், அமெரிக்கா, சோவியத் காலனிய ஆதிக்கம், பொருளாதார வளர்ச்சியின்மை, முன்னேற்றத்துக்கும் பழமைக்கும் இடையில் எங்கே போவதெனத் தெரியாத பழங்குடி இனங்கள் சம்மந்தப்பட்டவை. அதை இந்திய சூழலுடன் பொருத்துவதோ, அதை வைத்து பாஜகவை பகடி செய்வதோ, இந்திய இஸ்லாமியர்களுக்கு ஊமைக்குத்து விடுவதோ எல்லாம் அபத்தங்கள். இந்தியா இப்போது வெளியுறவுத்துறை சார்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி அப்கானிஸ்தானை நமக்கு சாதகமாக கையாள வேண்டும் என பரிந்துரைப்பதும் தவறானது - இன்னொரு மக்களின், தேசியத்தின் நெருக்கடியை, குழப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து உள்ளே நுழைவது கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிவது போல ஆகி விடும். அமெரிக்க அரசு இத்தனை ஆண்டுகளாய் அப்கானிஸ்தானை கைப்பிடிக்குள் ராணுவத்தின் மூலம் வைத்திருந்ததால் அந்நாட்டு ஆயுத வியாபாரிகள், கார்ப்பரேட்டுகளைத் தவிர அந்த சாமான்ய அமெரிக்கர்கள் எந்த பயனும் பெறவில்லை. இத்தனை லட்சம் மக்களை டுரோன்களால் போட்டுத்தள்ளியதிலோ, இப்போது அவர்களை தவிக்க விட்டு அலட்சியமாக வெளியேறியதாலோ அமெரிக்கா உண்மையால் எந்த உருப்படியான லாபத்தையும் தார்மீக ரீதியாகவோ அரசியல்ரீதியாகவோ பெறவில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பவை இந்திய பிரிவினையின் போது அப்போதைய பிரிட்டிஷ் அரசு மக்களின் பாதுகாப்பையும் பெருங்கூட்டமாக மக்கள் புலம்பெயர்வதை ஒருங்கிணைப்பதை தம் பொறுப்பல்ல என கைமலர்த்தி விட்டு சென்றதை, அதன் விளைவாக பல லட்சம் பேர் கொல்லப்பட்டதை, உயிரிழந்ததை ஓரளவு நினைவுபடுத்துகிறது.


அப்கானிஸ்தானில் இப்போது நடப்பது ஒரு மிகப்பெரும் அவலமே. மக்கள் விமானத்தில் தொற்றிக்கொண்டு பாதி வானத்தில் இருந்து விழுவதைக் காண கண்ணீர் வருகிறது. விமானத்தைத் துரத்திக் கொண்டும் ஓடும் மக்களின் பரிதாபகர காட்சியையும் ஒரு அமைதியான நாகரிகமான சூழலில் இருந்து பார்க்கிறவரால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அப்கானிஸ்தான் ஒருநாள் தன்னையே சீரமைத்துக் கொள்ளும் என நான் நம்புகிறேன். தாலிபான்கள் மூர்க்கத்தையும், வலிமையையும் இழந்து, அதிகாரத்தையும் மக்களிடம் திரும்பக் கொடுக்கும் நாள் நிச்சயமாக வரும். அதை அம்மக்களே செய்ய முடியும். நாம் அல்ல. அதைப் பற்றி அவர்களே சிந்திக்கவும் தவிக்கவும் வேண்டும். நாம் அல்ல. 


நமது ஜனநாயகத்தை எப்படி பாதுகாப்பது என்று நாம் கவலைப்படுவோம். இப்போதுள்ள மதவாத ஆட்சி ஒன்றியத்தில் தொடரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் நாம் ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு சென்றபடியே இருக்கிறோம். பல்லாயிரம் விவசாயிகளிடம், எதிர்க்கட்சிகளிடம், பல கோடி சிறுபான்மையினரிடம் எந்த உரையாடலையும் வைத்துக் கொள்ள விரும்பாத ஒரு முரட்டு, ஜனநாயக விரோத அரசை நாம் தலைவணங்கி கொண்டாடுகறோம். சொந்த தேவைக்காக பல லட்சம் கோடிகள் வரிப்பணத்தை தன் எதிரிகளையும் நண்பர்களையும் ஒற்றறிய செலவிட்ட ஒரு அரசை பெருவாரியான மக்கள் எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்கிறோம். இதற்கும் தமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். பெட்ரோல் விலை அம்பானிகளின் லாபம் பல்லாயிரம் மடங்கு பெருகும் நோக்கில், அரசின் கஜானாவை நிரப்பும் நோக்கில் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் இதை ஏதோ வானிலை செய்தி போல எடுத்துக் கொண்டு இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என வானத்தைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நாம் ஜனநாயக உரிமைகளோ வாக்களிக்கும் அதிகாரமோ தேவையில்லாத ஒரு மக்கள் கூட்டமென நம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். நாம் முதலில் நம்மைப் பற்றி கவலைப்படுவோம். அப்கானிஸ்தானையும் உகாண்டாவையும் அந்நாட்டு மக்கள் கவனித்துக் கொள்ளட்டும்.

 ஒரு ஜனநாயக நவீன தேசமாக நாம் என்னவாக விரும்பினோம், என்னவாக விரும்புகிறோம், இப்போது எங்கிருக்கிறோம் என நம்மை நமக்குள்ளே ஒப்பிடுவது தான் சரி.

 அதை விட்டு விட்டு பாஜகவும் தாலிபான்களும் ஒன்றா இல்லையா என்றெல்லாம் குடுமிப்பிடி இடுவது என்னவொரு பாசாங்கு. அந்த ஒப்பீடே அவசியமற்றது. உண்மை என்னவென்றால் நமது நவீனத்துக்கு முந்தைய அரசியல், ஜனநாயகமற்ற பாசிச ஆட்சி அமைப்பு குறித்த நமது அவமான உணர்வை மறைக்க “அந்தோ அப்கானிஸ்தானின் நிலையைப் பாரீர்” என ஆவேசப்பட்டுக் கொள்கிறோம். எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு - அடுத்தவன் துர்மணத்தை விமர்சிக்கும் முன் சொந்த குண்டியை மணந்து பார்த்து விட வேண்டும். நாம் நம்முடையதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வோம், அவர்கள் அவர்களுடைய பார்த்துக் கொள்வார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...