மனப்பிரச்சனை உள்ள தாய்மார் குழந்தைகளை கவனிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். அவர்கள் தமது மன அழுத்தத்துக்கு குழந்தையை இலக்காக்கி கவனிக்காமல் சாப்பாடு கொடுக்காமல், குளிக்க வைக்காமல் விடுவது ஒரு வகை என்றால், அடித்து துன்புறுத்துவது மற்றொரு வகை. அடுத்து இவர்கள் சுயவதையிலும் ஈடுபடுவார்கள். தமது மன அழுத்தத்திற்கு புற உலகமே - கணவர், குழந்தைகள் - காரணம் என எண்ணி, அதற்கு தீர்வு இவர்களை ஒழிப்பதே என நம்பத் தொடங்குவர். தமது கடுங்கோபத்துக்கு வடிகாலாக குழந்தைகளை அடித்து சிதைப்பது, இப்போதெல்லாம் அதை காணொலியாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பிக் கொடுப்பது சாதாரணமாக நடக்கும் காரியங்கள். அந்த காணொலி ஆதாரத்தை வைத்து தான் இந்த பெண்ணிடம் இருந்து தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளார்.
மீண்டும் சொல்கிறேன், மனநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அன்னையர் குழந்தைகளை வளர்க்கும் தகுதி அற்றவர்கள். ஆனால் இதைப் போன்ற கொடூரங்கள் நிகழும் வரை சட்டமோ சமூகமோ இதை வலியுறுத்துவதோ தடுப்பதோ இல்லை. இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது!
இன்னும் எத்தனைக் காலம் தான் குழந்தைகளை வளர்க்கும் ஆற்றலோ தகுதியோ ஆண்களுக்கு இல்லை, பெண்களுக்கு மட்டுமே உண்டு என நாம் (நீதிமன்றம், ஊடகங்கள்) சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? அதற்குப் பதிலாக யாருக்கு மன ஆரோக்கியம், பக்குவம் உள்ளது என ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். பெண்ணாக பிறப்பதாலே தாய்மை தோன்றுவதில்லை. தாய்மை என்பது சில குறிப்பிட்ட சந்தப்ப சூழல்களில், குறிப்பிட்ட உடல், மன நிலைகளின், குடும்ப, சமூக கலாச்சார பின்னணியில் தோன்றுவது. சிறிய பிறழ்வு இருந்தாலே தாய்மை மறைந்து கொலைகார சுபாவம் வளர்ந்து விடும். இன்று வேலை, சமூகவலைதளம், புற அழுத்தம் என பல காரணங்களால் பெண்கள் அதிகமாக மனநோய்க்கு - மன அழுத்தத்துக்கு - ஆளாகிறார்கள். குறிப்பாக, மகப்பேறுக்கு பின்பான ஹார்மோன் மாற்றங்களால் அவர்கள் கடும் கோபமும், வெறுப்பும் கொண்டவர்களாக மாறுகிறார்கள் - முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலையில் எரியும் வீட்டைப் போல இருக்கிறார்கள். சிலருக்கு இந்த ஹார்மோன் மாற்றங்களின் நீட்சியாக கடும் மன அழுத்தம் வருவதுண்டு. முந்தைய கூட்டுக் குடும்ப அமைப்பில் குழந்தைகளை சமாளிக்க, கவனிக்க நிறைய உறவினர்கள் உதவினார்கள் என்பதால் இப்பெண்கள் அன்று ஓரளவுக்கு சமாளித்து தம் அழுத்தங்கள், மனமூட்டங்களில் இருந்து மெல்ல மீண்டு வந்தனர். ஆனால் இன்றைய தனித்த குடும்பங்களில் அவர்களுடைய வெறுப்பின் ஒரே இலக்காக கணவனும் குழந்தையும் மாறி விடுகிறார்கள். அதனாலே குழந்தை பிறந்த இரு வருடங்களுக்குள் நிறைய விவாகரத்துகள் நிகழ்கின்றன.
இதற்கு ஒரு தீர்வு உண்டு: மனநல மருத்துவர்கள் தம்மிடம் வரும் பெண் நோயாளிகளில் சிறு குழந்தைகள் உள்ளவர்களைப் பற்றி அரசுக்கு உடனடியாகத் தெரிவித்து விட வேண்டும். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வரவில்லை என்றாலோ மன அழுத்தம் துவக்க நிலையில் இருந்து தீவிரமானதாக, மனச்சிதைவாக உருமாறுகிறது எனத் தெரிந்தாலோ உடனடியாக காவல் நிலையம் மூலம் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். விவாகரத்து வழக்குகளின் போதும் மனப்பிரச்சனை உள்ள தாய்மாருக்கு கஸ்டடி உரிமை கொடுக்கக் கூடாது.
நம் அரசும் நீதித்துறையும் விழித்துக் கொள்ளாதவரை இத்தகைய கொடுமைகள் நடந்தபடித்தான் இருக்கும்! என்னவொரு துயரம்.
இது சார்ந்து எனக்கு சில தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. ஒருநாள் அவற்றை ஒரு நாவலில் சித்தரிப்பேன்.
இனி குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் இக்காட்சி தான் என் மனதில் எழுதும். நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவேன்?