முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாய் வித் சித்ரா - எஸ்.ரா பேட்டி


கொஞ்சம் நெகிழ்ச்சி, நிறைய செண்டிமெண்ட், நிறைய சுவாரஸ்யமான கதைகள், தகவல்கள், அவதானிப்புகள் என கலவையான உரையாடல். 


எஸ்.ரா ரொம்ப கூர்மையான மனிதர். அதனாலே இலக்கியம், சினிமா குறித்த, குறிப்பாக narratology சார்ந்த அவரது அவதானிப்புகள் வெகுசிறப்பாக இருக்கும். ஆனால் தன் கட்டுரைகளில், உரைகளில் உணர்வுகளை


, சம்பவங்களை சித்தரித்த அளவுக்கு அவர் தன் அவதானிப்புகளை சொன்னதில்லை. சொல்லப் போனால் எஸ்.ரா எனும் தனிப்பட்ட மனிதரின் பார்வையை தவிர்த்து விட்டு எஸ்.ரா எனும் பயணி, எஸ்.ரா எனும் வாசகர், எஸ்.ரா எனும் கதைசொல்லி, எஸ்.ரா எனும் சினிமா ஆர்வலர் என பல்வேறு பாத்திரங்களாக மாறிப் பேசவே அவருக்கு ஆசை அதிகம். தனிப்பட்ட முறையில் உரையாடும் போது அந்த தனிமனிதர் சட்டென வெளிப்பட்டு தன் கருத்துக்களால், பார்வையால் நிறையவே அச்சரியப்படுத்துவார். 


ஒருமுறை - இந்த பேட்டியில் அவர் சொல்லுகிற - ஒரு ரூபா விசயத்தை தனிப்பேச்சில் குறிப்பிட்டார். நான் நீண்ட நாட்கள் அதை மறக்கவே இல்லை. இந்தியர்களின் பேச்சில், சிந்தனையில் இயல்பாகவே ஒரு தத்துவார்த்தம் இருக்கிறது என அவதானித்தார் அன்று. இன்னொரு முறை தான் கதை எழுத ஆரம்பித்த காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் சிறந்த கதைகளில் உள்ள வடிவத்தை உள்வாங்கி, சொற்களை எண்ணி, சொற்களின் அடுக்குமுறையை கவனித்த ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததாக சொன்னார். அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒவ்வொரு சில மாதங்களும் திட்டமிட்டு குறிப்பிட்ட வகையான நூல்களைப் படிப்பது ஆச்சரியமூட்டும் மற்றொரு செயல். நான் ஒருமுறை அவருடைய வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்த போது தன் நாட்காட்டியை காட்டி “நாளை 11 மணிக்கு அங்கு இருப்பேன், அடுத்த வாரம் அந்த நாள் இந்த வேலை பண்ணிக் கொண்டிருப்பேன்” என்று துல்லியமாக சொன்னார். தமிழில் எஸ்.ரா அளவுக்கு நாட்களை கச்சிதமாக திட்டமிட்டு கழிக்கிற மற்றொரு எழுத்தாளர் இல்லை எனத் தோன்றியது. என்னைப் போன்றவர்கள் நாளை காலை 10 மணிக்கு இதைச் செய்ய வேண்டும் என நாட்காட்டியில் குறித்து வைத்தால், மனம் “இதை கண்டிப்பா செய்யக் கூடாது” என பல்லைக்காட்டி இளித்துக் கொள்ளும். அடுத்தடுத்த நாட்களுக்கு இதையிதை செய்யலாம் என திட்டமிட்டால் நாட்காட்டி இருப்பதே மறந்து போகும். அன்று எஸ்.ரா பேசுவதை ஒரு குழந்தை ராணுவ வீரனைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். 


இப்பேட்டியில் சித்ரா லஷ்மண் சுஜாதாவைப் பற்றி கேட்கிறார். அதற்கு எஸ்.ரா தனக்கு சுஜாதா மீது ஆரம்பத்தில் இருந்தே பெரிய ஈடுபாடோ வியப்போ இல்லை, அவருடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையுமே பொருட்படுத்தி ஓரளவு படித்திருக்கிறேன் எனச் சொல்கிறேன். ஆனால் பதிலை முடிக்கும் போது சுஜாதாவின் சிறந்த 100 படைப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக பிரசுரித்திருக்கிறேன் என்கிறார் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு. நான் அந்த நூலைப் படித்திருக்கிறேன் - அது முழுக்க சுஜாதாவை போற்றும் ஒரு எழுத்தாளர் மிகுந்த கவனத்துடன் தொகுத்ததைப் போன்றே இருக்கும். எந்த நூல் என்றாலும் தன் விருப்புவெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அது தன் வாழ்நாள் பணி என்பதைப் போல செய்யும் இயல்பு எஸ்.ராவுக்கு உண்டு. அவரை நம்பி ஒரு ஏவுகணையைக் கூட ஒப்படைக்கலாம். ஒரு விஞ்ஞானியைப் போல அதை வானில் ஏவி விட்டு தான் மறுகாரியம் பார்ப்பார்.


பேட்டியில் நான் ரசித்த மற்றோரிடம் எஸ்.ரா திரைக்கதையை, அதன் நுணுக்கங்களை எளிமையாக விளக்கும் பகுதி. மற்றொன்று சென்னையில் காசில்லாமல் திரிந்த போது பாலத்தின் கீழ் தூங்கிய, நண்பர்களின் அறைகளில் தற்காலிகமாக தங்கிய தினங்களைப் பற்றி நினைவுகூருவது. அதில் அவர் சொல்லும் குப்பைத்தொட்டி சம்பவம் புக்காவஸ்கியின் Ham on Rye நாவலை நினைவுபடுத்தியது.


  பாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.