தற்போது லார்ட்ஸில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்றுள்ள வெற்றியை அனேகமாக 2001இல் கொல்கொத்தாவில் follow on பண்ணப்பட்டு, தோல்வியின் விளிம்பில் இருந்து லஷ்ம்ண-திராவிட் கூட்டணியால் மீண்டும் வந்து, ஹர்பஜனின் பந்துவீச்சு மேதைமையால் ஆட்டம் முடியும் தறுவாயில் நாம் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடலாம். நேற்று (4வது நாள்) முடிவில் இந்தியா ஜடேஜாவை இழந்த போது (175/6) 70 ரன்கள் கூடுதலாவது எப்படியாவது எடுத்து 220 இலக்கை அடைந்தால் மட்டுமே இந்தியா தப்பிக்க முடியும் எனும் நிலை இருந்தது. இன்று காலை இருபது சொச்சம் ஓட்டங்களுக்கு பண்டும், இஷாந்தும் ஆட்டம் இழக்க, 209/8 எனும் நிலையில் எல்லாம் முடிந்தது என்றே இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் தோன்றி இருக்கும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருந்தால் 190 எனும் இலக்கை 90 ஓவர்களில் அடிப்பது என நிலைமை இந்தியாவுக்கு சிக்கலாகி இருக்கும்.
அதாவது ஓவருக்கு 2 ஓட்டங்கள் போதும். நான்கு விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்தாலும் மிச்ச 90 ரன்களை அவர்களால் அடிக்க முடியும் எனும் நம்பிக்கை இருக்கும் போது கோலியால் தொடர்ந்து தாக்குதல் அணுகுமுறையை எடுக்க முடியாது. ஒன்றிரண்டு பவுண்டரிகள் போனால் களத்தடுப்பை பரவலாக்கி, இங்கிலாந்து மட்டையாளர்கள் ஒற்றை ஓட்டங்கள் எடுப்பதை சுலபமாக்கும் நிலை ஏற்படும். அதன் பிறகு எங்கே தோற்று விடுவோமோ எனும் பயத்துடன், பவுண்டரி கொடுக்காமல் விக்கெட் எடுக்க வேண்டும் எனும் நெருக்கடியில் பந்து வீசுவது மிகவும் சிரமம் ஆகும். அதுவும் மட்டையாடுவதற்கு அதிகமான நெருக்கடி தராத ஒரு நல்ல ஆடுதளத்தில். அதனால் 60-70 ஓவர்களில் 220-230 என்பது ஓரளவுக்கு இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த ஒரு சரியான இலக்காக இருக்கும் என நிபுணர்கள் நம்பினர்கள். கோலி 55-60 ஓவர்களுக்கு மேல் இங்கிலாந்துக்கு கொடுக்கக் கூடாது என தான் நம்பியதாக பின்னர் சொன்னார். ஏனென்றால் அத்தவறை அவர் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராகப் பண்ணினார். ஆனால் அந்த இறுதிப்போட்டியின் இறுதி நாளில் போல இந்திய கீழ் மத்திய வரிசை இப்போது உருக்குலையவிலை. மாறாக இம்முறை பும்ராவும் ஷாமியும் யாரும் எதிர்பாராதபடி அபாரமாக மட்டையாடினர்.
ஆனால் நிஜமான திருப்புமுனை இதுவல்ல - இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் போன நிலையில் ரூட்டுடன் ஜோடி சேர ஆண்டர்ஸன் முகத்தை சுளித்தபடி வந்தார். அப்போது ஒரு ஓவரில் பும்ரா தொடர்ந்து பவுன்சர்களாக வீசினார். ஆண்டர்ஸனுக்கு இரண்டுமுறை தலையில் அடிபட்டது. பும்ரா தொடர்ந்து நோபால்களாக வீசியதால் அந்த ஓவர் 10 பந்துகளுக்கு நீடிக்க அநேகமாய் இரண்டு ஓவர்களுக்கு தொடர்ந்து பவுன்சர்களை சந்தித்தது போல ஆனது ஆண்டர்ஸனின் நிலை. தான் bodyline பந்து வீச்சுக்கு அளாக்கப்படுவதாக நினைத்த ஆண்டர்ஸன் கடுப்பானார். அவர் அவுட் ஆன பின்னர் பும்ராவிடம் அவர் தன் கோபத்தைக் காட்டினார். இங்கிலாந்து அணித்தலைவர் ரூட்டும் கோலியிடம் புகார் கூற, கோலி திரும்பிக் கத்த, மொத்தத்தில் அதைக் காண சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. அடுத்த நாள் இந்தியா மட்டையாட வந்த போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி இந்தியாவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். புஜாராவும் ரஹானேவும் தடுப்பாட்டத்தினால் சரிவை ஓரளவுக்கு தடுத்து இந்தியாவின் உடனடி தோல்வியைத் தள்ளிப்போட்டார்கள். ஐந்தாவது நாள் ஆரம்பத்தில் நான் சொன்னது போல பும்ரா, ஷாமி தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றினார்கள். ஆனால் அதற்கும் மறைமுகமாக உதவியது இங்கிலாந்தின் விசித்திரமான உத்தி.
பும்ரா வந்ததும் ரூட் வுட் மற்றும் ராபின்ஸனைக் கொண்டு பவுன்சர்கள் வீச வைத்தார். அதுவரை சரியான நீளத்தில், திசையில் வீசி ஸ்லிப்பில் விக்கெட் எடுக்க முயன்றவர்கள் இப்போது ஆண்டர்ஸனுக்காக பும்ராவை பழிவாங்க முயன்றனர். பும்ரா இன்னொரு பக்கம் எல்லா பந்துகளையும் அடிக்கிறேன் எனும் பெயரில் மட்டையை ஏதோ சார்லி சாப்ளின் கைத்தடியை சுற்றுவதைப் போல சுழற்றினாரே தவிர பந்து படவேயில்லை. ஷாமியும் இப்போது அடித்தாட தொடங்கினார். வேகவீச்சாளர்களின் பவுன்சர்கள் உடம்பில் பட, தன்னை பழிவாங்க முனைகிறார்கள் இங்கிலாந்து அணியினர் எனும் புரிதல் பும்ராவின் அணுகுமுறையை மாற்றியது. ஆட்டத்தின் அழுத்தம் காணாமல் போனது. தனிப்பட்ட மோதலாக உருமாறியது. இங்கிலாந்து வீரர்கள் தம் கவனத்தை இழந்தனர். தெருவில் விடலைப்பையன்களின் தள்ளுமுள்ளு போல ஆனது ஆட்டம். இதை பும்ரா சரியாக பயன்படுத்தி உறுதிப்பாட்டுடன் ஆடினார். அணியைக் காப்பாற்ற வேண்டும் எனும் நெருக்கடியை விட இவர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் எனும் ஆவேசமே அவரை நடத்தியது என நினைக்கிறேன்.
இன்னொரு பக்கம் ஜோ ரூட் இப்போது இந்த இருவரும் பவுண்டரிகள் அடித்து இலக்கை பெரிதாக்கி விடுவார்களோ என அஞ்சி களத்தடுப்பை எல்லைக்கோட்டுக்கு பரவலாக்கி, ஒற்றை ஓட்டங்கள் எடுப்பதை சுலபமாக்கினார். வேகவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதா, தடுத்தாடுவதா எனக் குழம்பிப் போயினர். ஒரு கட்டத்தில் ஒற்றை ஓட்டங்களிலே பும்ராவும் ஷாமியும் ஓவருக்கு மூன்று நான்கு ஓட்டங்கள் எடுத்தனர். இருவருமாக இலக்கை 220 தாண்டி கொண்டு சென்ற நிலையில் மொத்த இங்கிலாந்து அணியும் ஆட்டத்தில் கவனத்தையும் அக்கறையையும் இழந்தது. இனி ஜெயிக்க முடியாது எனும் எண்ணம் அவர்களுக்கு அதிகமானது. களத்தடுப்பில் சொதப்பினர், கேட்சுகளை விட்டனர். ஷாமி அரைசதம் (56) அடித்தார், பும்ரா 34 எடுத்தார். இருவருமே தன்னம்பிக்கையுடன் சீராகப் பந்துகளை தடுத்தாடி, கவர் பகுதியில் தொடர்ந்து விரட்டும் அளவுக்கு ஆட்டம் இந்தியாவுக்கு சுலபமாகியிருந்தது. 209க்கு 8 விக்கெட்டுகளில் இருந்து 298க்கு 8 எனும் ஸ்கோரில் கோலி டிக்ளேர் பண்ணினார். (ஒருவேளை அவர் இன்னும் 20 ஓவர்கள் கொடுத்திருந்தால் ஷாமி இன்று சதம் அடித்திருக்கவும் கூடும்.)
60 சொச்சம் ஓவர்களில் 272 எனும் கிட்டத்தட்ட அசாத்தியமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் மனதளவில் களைத்துப் போயிருந்தனர். இரண்டே ஓவர்களில் ஒரு ஓட்டத்துக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து ஜோ ரூட் நன்றாக ஆடி ஒரு மறுவருகைக்கு களம் அமைத்தாலும், வெற்றி வாய்ப்பே இல்லை எனும் எண்ணம் இந்தியாவுக்கு தொடர்ந்து அதிரடியாக ஆடும் சுதந்திரத்தைக் கொடுக்க, டிராவுக்காக ஆடும் அனுபவமற்ற இங்கிலாந்தை அது மனதளவில் பின்னுக்கு தள்ளியது. அவர்களுடைய உடல்மொழியே முழுக்கத் தவறாக இருந்தது. ஆட்டத்தின் முக்கியமான அடுத்த திருப்புமுனை ஆண்டர்ஸன் பாணியில் பும்ரா வைடாக ஓடி வந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்து நேராக எடுத்து சென்றிட அதை ரூட் எட்ஜ் கொடுத்ததே.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எனும் நிலையை அடைந்தாலும் ராபின்ஸன் ஆட வந்ததும் மீண்டும் ஒரு திருப்பம் - முன்பு ரூட் செய்த தவறை கோலி இப்போது செய்தார். அவர் ராபின்ஸனிடம் தேவையில்லாமல் கத்துவது, கேலி பண்ணுவது என ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து சிராஜும் வேடிக்கையாக முறைக்க முயன்றார். நிறைய பவுன்சர்கள் வீசினார்கள். ஆட்டத்தில் இருந்து இந்திய அணி கவனத்தை இழக்க ராபின்ஸன் பட்லருடன் சேர்ந்து 30 ரன்கள் சேர்த்தார். முக்கியமாக 60 ஓவர்கள் இன்னிங்ஸில் 13 ஓவர்களை அந்த கூட்டணி முழுங்க இந்தியா நம்பிக்கை இழந்தது. கோலி பட்லரின் கேச்சை விடவும் செய்தார். இடைவேளைக்குப் பின் இஷாந்தும் சிராஜும் பந்து வீசிய நேரத்தில் தான் இந்தியா மீண்டும் தன் நிதானத்தை மீட்டு ஒழுங்காக வீசி, உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஈடுபடாமல் ஆடியது. மிக முக்கியமான திருப்புமுனை பும்ரா ராபின்சனுக்கு சுற்றி ஓடி வந்து (round the wicket) ஒரு மெதுவான பந்தை (slow ball) வீசியதே. அதற்கு முன் சில பவுன்சர்கள் வீசி ராபின்சனை அவர் பின்னங்காலுக்குத் தள்ளியிருக்க அவர் இப்போது LBW ஆனார். நடுவர் கொடுக்காவிடிலும் ரெய்வூ எடுத்து இந்தியா விக்கெட்டை பெற்றது. இதைத் தொடர்ந்து உடனே பட்லர் சிராஜின் பந்தில் வெளியேறினார். ஆண்டர்ஸன் 10வது எண்ணில் ஆட வந்து சில பந்துகள் கூடத் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்ஸ் நினைவில் பவுன்சருக்கு பயந்து பின்னுக்குப் போய் ஏதோ சுவரோடு ஒட்டிய நிழலைப் போல நின்றார். சிராஜின் ஒரு முழுநீளப் பந்துக்கு பவுல்ட் ஆனார். யாருமே கற்பனை பண்ணியிராத ஒரு அபாரமான மீள்வருகையை நிகழ்த்தி, தோல்வியின் விளிம்பில் இருந்து இந்தியா வெற்றி தட்டிச்சென்றது.
யோசித்துப் பார்த்தால் இந்த மொத்த டிராமாவும் ஆண்டர்ஸனை பும்ரா பவுன்சர் போட்டு சிரமப்படுத்திய ஓவரின் போது ஏற்பட்ட சச்சரவினால் விளைந்தது என்று தோன்றுகிறது. அது இப்படி இறுதியில் தமக்கே ஒரு துன்பியலாக மாறும் என ஜோ ரூட் கற்பனை பண்ணி இருக்க மாட்டார். “பொல்லாதவன்” படத்தில் தனுஷைப் பற்றி கிஷோர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. பும்ராவை அவர் பாட்டுக்கு ஆட விட்டிருந்தால் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஐந்து, பத்து ஓட்டங்களுக்கு நடைகட்டி இருப்பார். சுத்தமாக ரிதம் இல்லாமல், 16 நோபால்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் வீசி திணறிக் கொண்டிருந்த பும்ராவை கிளப்பி விட்டு கடைசியில் ஹீரோவும் ஆக்கி விட்டார்கள் ஜோ ரூட்டும், ஆண்டர்ஸனும். பும்ராவின் கோபம் ஒட்டுமொத்த இந்திய அணியையும் வெறிகொண்டு போராடச் செய்தது. ஆட்டம் வெற்றியில் முடிய கோலி லாலிபாப் கிடைத்த குழந்தை போல சுற்றி சுற்றி ஓடிட, ரூட் வெளிறிய முகத்துடன் டிரெஸ்ஸிங் ரூமின் இருட்டில் இருந்து பார்த்தார்.
“பும்ராவை அப்படியே போக விட்டிருக்கலாம் இல்ல?” என யோசித்திருப்பாரோ?


