கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு
உலகமே
கலங்கலான நீர்த்தொட்டிக்குள் இருந்து
ஒரு மீன் பார்ப்பதைப் போல இருக்கிறது
தான் போகும்
பாதைகளை அது
வாசனைகளால் மட்டுமே
வரையறுத்துக் கொண்டது
தரை, மிதியடி, நாற்காலி, முக்காலி, சக்கரநாற்காலி,
வாஷிங்மெஷின், அலமாரி,
நேராநேரத்துக்கு நிறைந்து அழைக்கும் சாப்பாட்டுக்கிண்ணம்,
வாசல், வாசல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் கதவு
இவ்வளவுக்கும் இடையில் நுணுக்கமாக
இழையும் பல பாதைகள்
நினைவின் வரைபடத்தால்
வரிசை வரிசையாக
செல்லும் எறும்புகளைப் போல
அதன் சிறிய பாதங்கள்
துல்லியமாக நடக்கின்றன
கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு
இந்த உலகமே
வாசனைகளும் சப்தங்களும் தான் என்றானது
அதற்கு எந்த வருத்தமும் இல்லை
அதை நெருக்கமாய் கவனிப்பவர்களுக்குக் கூட
அதன் உலகம் மாறிப்போனது
தெரியவில்லை
தினமும் காலையில் எழுந்ததும்
பால்கனிக் கதவை மூக்கால்
தொட்டுத்திறந்து
வெளிச்சமும் இதமான வெப்பமும் நிறைந்த
மூட்டமான உலகை
பார்வையிடுவது பழக்கத்தினாலே
கதவு திறக்கும் சப்தம்
உணவு சமிக்ஞைக்கான சப்தம்
வா போகலாம் எனும் சப்தம்
தன் பெயருக்கான சப்தம்
தொலைவில் ஏதோ ஒரு தெருமுக்கில் இருந்து
கூட்டுக்குரைப்பு
அண்மையில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து
அழும் குழந்தை
வீட்டுக்குள் கடுமையாக
வாதிடும் இருவர்
தன் பெரிய தொங்கும் காதுகளால்
அது ஒவ்வொருவரையும்
ஒரு இடத்தில் வைத்திருக்கிறது
ஒருவேளை இடமாறி
இவர்கள் போனால் என்னாவது
என ஒரு பயம் அதற்கு உள்ளது
தினமும் எல்லாம் சரியாக
அதனதன் இடத்தில் உள்ளதா
என சோதித்துக் கொள்கிறது
கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்
தனக்கு நேர்ந்த
இரு அவமானங்களை
இங்கு பதிவு செய்ய விரும்புகிறது
ஒன்று, டிவிக்குள் ஓடும்
குழப்பமான சலனங்களில் இருந்து
ஒரு பெரிய கரடி தோன்றியது -
அன்று வெகுநேரம் குலைத்த பின்
ஏதோ உறைக்க அது
மௌனமாகியது
மற்றொன்று, பிரியத்துக்குரியவர்
ஒரு பூங்காவின் மறுஎல்லையில் நின்றபடி
தன்னை அழைத்த போது
அதற்கு பெரியதொரு
கால வெற்றிடத்தில் இருந்து
தான் முதன்முதலாக வெளிப்பட்ட
நெகிழ்வான புழையின்
இருள் துளையில் இருந்து
தன் பெயரை
யாரோ அழைக்கும் சித்திரம் ஏற்பட்டது
“வா சீக்கிரம்”
அது திடுக்கிட்டது
