ஒரு எழுத்தாளனாக என் ஆசான் எப்போதுமே ஜெ.மோ தான். ஒரு பதின்வயதினனாக அவரை அணுகி கவனிக்க இயன்றதே என்னை பின்னாளில் இப்படி ஒரு எழுத்தாளனாக்கியது.
இவையெல்லாம் ஜெ.மோ எனும் ஆசிரியர் எனக்குக் கற்றுத் தந்தவை:
1) ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையை முழுக்க எழுத்தை சுற்றியே அமைத்துக் கொள்ள வேண்டும்.
2) சும்மா புகார் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
3) வேண்டியதை விடா முயற்சியால் அடைய வேண்டும்.
4) எதையும் நம்பிக்கையுடன் உறுதிபட சொல்ல வேண்டும்.
5) நிறைய எழுத வேண்டும்.
6) தினமும் எழுத வேண்டும்.
7) தமிழைத் தாண்டியும் வாசித்து, இலக்கியத்தைத் தாண்டியும் பல ஆர்வங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
8) வாசகனை சமமாக நடத்த வேண்டும்.
9) இளம் படைப்பாளிகளை தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும்.
10) உலகையே மறந்து இலக்கியம், புத்தகங்கள், அறிவுத்துறைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
11) யார் செத்தாலும் கவலைப்படாமல் உலகம் சுற்றுகிற அச்சு நம் எழுத்தே என நம்ப வேண்டும்.
12) பணம் சம்பாதித்தாலும் அதில் பற்றுக் கொள்ளல் ஆகாது.
13)லௌகீகத்தில் சற்று தத்தியாக இருந்தால் தப்பில்லை.
14) நாம் நம்புவதே உண்மை எனக் கருதி செயல்பட வேண்டும் - அப்போது தான் செயலூக்கம், ஆற்றல் கிடைக்கும்.
15) பெண்கள் விசயத்தில் காதலி / துணைவி - தோழியர் என ஒரு கராறான பாகுபாட்டை பேண வேண்டும். உணர்ச்சிகள் அணை உடைத்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பிறருக்கு நாம் தரும் கண்ணியம், மரியாதை.
16) நம்புகிற லட்சியத்தை எப்போதும் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஜெ.மோவிடம் நான் கற்றுக் கொள்ளாதவை:
1) சுய ஒழுக்கம் - கராறாக திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த முடிந்ததில்லை. ஆனால் விழித்திருக்கும் நேரத்தை கணிசமாக எழுத்துக்கு குருதிக்கொடை கொடுத்து விடுகிறேன்.
2) உடல் நலனைப் பேணுவது - உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எழுதும் ஆர்வம் குறைந்து விடுகிற ஒரு வினோத சிக்கல் எனக்குண்டு.
3) ஆசான் குடிக்கவே கூடாது என வலியுறுத்துபவர்.
எனக்கு மதுவில் ஆர்வம் என்றைக்குமே இருந்ததில்லை. ஆனாலும் போரடிக்கும் போது, பெரும்பாலும் மாதம் ஒருமுறை குடிக்கிறேன்.
ஜெ.மோவிடம் நான் தொடர்ந்து மறுப்பவை:
1) சமூக, அரசியல் கருத்துக்கள் - அவரிடம் உள்ள காழ்ப்பினாலோ வேறு ஆதாயங்களுக்காகவோ நான் அவரை விமர்சித்து சில ஆயிரம் பக்கங்களை எழுதவில்லை (தொகுத்தால் ஒரு புத்தகம் அளவுக்கே வந்து விடும்.), மாறாக என் கொள்கை எப்போதுமே அவரிடம் இருந்து மாறுபட்டது. நான் கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கொள்கை அது. ஆக அவரைப் படிக்கும் போதெல்லாம் கடுப்பில் மறுத்து எழுதும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இலக்கிய கொள்கையைப் பொறுத்தமட்டில் அவர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இங்கிலாந்தில் பிரசித்தமாக விளங்கிய லிபரல் ஹியூமனிசப் பள்ளியை சேர்ந்தவர். நான் கடுமையாக வெறுக்கிற ஒரு இலக்கியப் பள்ளி அது. ஆக நான் அவரிடம் இலக்கிய விமர்சனங்களில் முரண்படுவதும் இயல்பே. மற்றபடி தனிப்பட்ட கோபதாபம், கசப்பு ஏதுமில்லை - ஒரு ஆசான் நம் நெஞ்சில் சுடர் விடும் அகல் விளக்கு. அவரை எப்படி வெறுக்க முடியும்?
அந்த சுடரொளிக்கு இந்த ஆசிரியர் தினத்தன்று நன்றியும் அன்பும் தெரிவிக்கிறேன்!