அண்மையில் ஒரு நண்பர் தான் புதிதாக 70,000க்கு வாங்கியுள்ள ஒரு மடிக்கணினியை காட்டினார். பார்க்க அழகாக இருந்தது. “நன்றாக வேலை செய்யுதா?” என்று கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார். திறந்ததும் விழித்து சோம்பல் முறிக்கவே நேரம் எடுக்கிறது. சில நேரம் வேலை நடுவே படுமெத்தனமாகிறது என்று புலம்பினார். இவ்வளவு விலைகொடுத்து வாங்கியுமா? எனக்கு அப்போது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தின நிலை நினைவுக்கு வந்தது. அப்போது மடிக்கணினிகளின் விலை ரொம்ப குறைவாக இருந்தது. சுணக்கமின்றி வேலையும் செய்யும். அதுமட்டுமல்ல அன்று இந்தளவுக்கு கணினிகளுக்கு சுமை இருக்கவில்லை. ஒரு மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் கணினியை 10,000-20,000க்குள் வாங்கினால் அசல் விண்டோஸ் இயங்குதளத்தை எல்லாம் நிறுவ மாட்டார்கள். நகல் தான். அதுவும் சமர்த்தாக வேலை செய்யும். தாயிடம் பாலருந்திய நாய்க்குட்டிகளைப் போல துள்ளித் திரியும். நான் அப்போது வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் இப்படியான நகல் இயங்குதள கணினிகளே அதிகம் இருந்தன. எப்போதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஆள் வருவார்கள். அப்போது நகல் கணினிகளை அவசரமாக ஒரு தளத்தில் வைத்து பூட்டி விட்டு எங்...