“வெளிப்படையாகவே சொல்கிறேன் நான் ஒரு சனாதனவாதி தான்.”
- மகாத்மா காந்தி
“கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே.. ஒன்று ஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம் சிவசமயம். மீளணும் எனும்போது, மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பியதைப் போல சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிற மாதிரி திரும்பி வா.”
- சீமான்
சீமான் ஒரு இந்துத்துவவாதியா, அவருடைய தமிழ் தேசியம் ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழிய வடிவமா என்றெல்லாம் இப்போது கேள்விகள் எழுகின்றன. தமிழன் இந்துவாக மட்டுமே இருந்தாக வேண்டும் என்பதைத் தான் தமிழன் சைவனாகவோ வைணவனாகவோ மட்டுமே இருந்தாக வேண்டும் என சீமான் கூறுகிறார் என்பது தெளிவு; ஏனென்றால் தமிழரின் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் பண்டைய தமிழகத்தில் சைவ, வைணவ மதங்கள் இருக்கவில்லை என்கிறார்கள்; கீழடி கண்டுபிடிப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. இருந்தும் சைவம், வைணவமே அசலான தமிழ் மதங்கள் என சீமான் பிடிவாதம் பிடிப்பது அவருடைய அடிப்படையான மதவாதப் போக்கினாலே என்று அவருடைய விமர்சகர்கள் கருதுகிறார்கள். இது சீமான் எனும் தனிமனித அரசியல் தலைவரின் பிரச்சனை மட்டுமல்ல, தமிழக வாக்கரசியலில் இளைஞர்களில் ஒரு தீவிர தமிழ் தேசிய திரள் அவரைப் பின்பற்றுகிறது, ஆகையால் சீமானின் இந்த ‘தாய் மதம் திரும்புங்கள்’ எனும் பிரச்சாரம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்கது தான். இன்னொரு பக்கம் சீமானின் ஆதரவாளர்கள் அவர் தொடர்ந்து இந்திய தேசியத்தை, இந்துத்துவத்தை எதிர்த்து வந்துள்ளவர், அவர் இந்து மதத்துக்கு திரும்புங்கள் என்று நேரடியாக கூறவில்லை, ஆகையால் அவரை வலதுசாரி என முத்திரை குத்துவது நியாயமாகாது என வாதிடுகின்றனர். ஒருவேளை சீமானின் விமர்சகர்கள் அவரை தவறாக புரிந்து கொள்கிறார்களோ? அவருக்கு நிதியளிப்பது பாஜகவும், அதிமுகவும் எனும் சதித்திட்ட கோட்பாட்டை ஒட்டி இதை எளிமைப்படுத்துகிறார்களோ? இந்த இரு தரப்புகளும் சீமானைப் போன்ற ஒரு தலைவரை எப்படி வகைப்படுத்துவது என்பதில் ஒரு பெரும் குழப்பத்தில் போய் முடிகின்றன. ஆனால் இதற்கு முன்பே இந்தியாவிலும் தமிழகத்திலும் சீமானைப் போல சிந்தித்தவர்கள் வரலாற்றில் இருந்துள்ளனர், அவர்களைக் குறித்தும் இத்தகைய குழப்பங்கள் எழுந்துள்ளன. அவர்கள் பொதுவாக இந்து மத சீர்திருத்தவாதிகள் என அறியப்படுபவர்கள். காந்தி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த கட்டுரை சீமானை இந்திய தேசிய எதிர்ப்பாளர், தமிழ் தேசியர், வலதுசாரி எனப் பார்க்காமல், மொழிவழி தேசியத்தின் முகமூடியில் தோன்றி உள்ள மத சீர்திருத்தவாதியாக பார்ப்பது தெளிவளிக்கும் என வாதிடுகிறது. ஏனென்றால் இது இந்த குறிப்பிட கர்வாப்ஸி கருத்தை மட்டுமல்ல தமிழ் மரபு பெருமிதங்களை ஒட்டி அவர் சமூகப் பிரச்சனைகளுக்கு தரும் தீர்வுகளையும் - ‘குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு கட்டாயமில்லை, கடலை மிட்டாய் தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தாலே நம் பொருளாதாரம் வளரும், நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் பண்டைய தமிழ்வாழ்வில் தீர்வுகள் உள்ளன’ - புரிந்து கொள்ள உதவும்.
காந்தி தான் வாழ்ந்த காலத்தில் பல பிற்போக்கான, சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். ஏனென்றால் அவரும் அரசியல் களத்தில் இருந்தாலும் இந்து மத சீர்திருத்தவாதிகளின் மரபில் வருபவராக தன்னைக் கண்டவரே. இது அவரை எப்போதும் சர்ச்சைகளின் மையத்தில் வைத்திருந்தது.
இந்து மதம் மட்டுமே சகிப்புத்தன்மை கொண்டது
“காந்தியும் இந்து மதமும்” எனும் கட்டுரையில் காந்தியின் இந்து மதப்பற்றைப் பற்றி கீழ்கண்ட விசயத்தை ரவி கெ. மிஷ்ரா குறிப்பிடுகிறார். (https://journals.sagepub.com/doi/full/10.1177/0019556118820453)
“ஒரு அமெரிக்க நண்பர் ஒருமுறை காந்தியிடம் கடிதம் எழுதி அவர் ஏன் இந்துவாக இருக்கிறார் என்பதை விளக்கும்படிக் கேட்டார். அவருக்கு அளித்த பதிலில் காந்தி தான் இந்து மதத்துக்குள் பிறந்ததால் இந்துவாக இல்லை, மாறாக பிற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதமே மிகவும் சகிப்புத்தன்மையும் அனைவரையும் உள்ளடக்கியது, அகிம்சையின் மிக உயர்ந்த வெளிப்பாட்டை இந்து மதத்தில் மட்டுமே காண முடியும் என்றார்.”
இந்த மேற்கோளில் காந்தியின் கருத்து எவ்வளவு ஆபத்தானது என கவனியுங்கள். இன்று ஜெயமோகன் இஸ்லாம் பற்றி கூறுகையில் அது ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட மதம் என வலியுறுத்துவற்கு இணையானது காந்தியின் இக்கருத்து. ஒரே வித்தியாசம் காந்தி இதை மறைமுகமாக வலியுறுத்துகிறார் என்பது. இந்து மதத்தை தவிர வேறு மதங்கள் ஹிம்சையானவை என்கிறாரே காந்தி, இது உண்மையா? கிறித்துவமும் இஸ்லாமும் வன்முறையான மதங்களா?
இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும் - கிறித்துவத்தின், இஸ்லாத்தில் பெயரில் நடந்த போர்கள் நிஜத்தில் மதத்துக்காக அல்ல நாடுகளை கைப்பற்றி சந்தையை கட்டுப்படுத்தி முதலீட்டியத்தை வளர்க்கும் நோக்கிலே நடத்தப்பட்டன. இந்தியாவில் நிலைமை இதுவாகவே இருந்தது. இங்கு மதத்தின் பெயரில் நிகழாத வன்முறையா, மோதல்களா, படுகொலைகளா? ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என நமது பண்டைய பக்தி இலக்கியங்களே மீள மீள சொல்கின்றனவே. நாகப்பட்டினத்தில் உள்ள பௌத்த கோயிலில் இருந்து பொற்சிலையை திருமங்கை ஆழ்வார் திருடி வந்து இந்துக்கோயிலை எழுப்பிய நிகழ்வு பதிவாகி உள்ளதே. Against the Grain: Notes on Identity, Intolerance and History எனும் நூலில் வரலாற்றாசிரியர் டி.என் ஜா இந்தியா முழுக்க வைதீகர்கள் பௌத்த, சமண மடாலயங்கள், கோயில்களை கொள்ளையடித்து நிர்மூலமாக்கியதை, ஆயிரக்கணக்கில் பௌத்த மடாலயங்களை ஷேம குப்தா எனும் மன்னர் தீக்கிரையாக்கியதைப் பற்றி சொல்லுகிறார். மாமன்னர் அசோகர் வாழ்ந்த காலத்திலேயே பௌத்தர்களும் அவர்களுடைய மடங்களும் தாக்கப்பட்ட வரலாற்றை கல்ஹனாவின் “ராஜதரங்கினி” எனும் நூல் குறிப்பிடுவதாக ஜா பதிவு செய்கிறார். அது மட்டுமல்ல, 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண அறிஞரான ஹேம சந்திரா மனு ஸ்மிரிதி சடங்குகளின் வடிவில் வன்முறையை முன்னெடுப்பதாக அதை கண்டித்திருக்கிறார்.
ஆனால் காந்தி அதைப் பற்றி யோசிக்கவோ பேசவோ விரும்பவில்லை. அவர் ஒரு சமணர் என்றாலும் அவர் தன்னை ஒரு பெருமைமிகு இந்துவாகவே கருதினார். அதுவும் 1908 வரையில் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ஆரிய ரத்தம் கொண்ட இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை விட மேலானவர்கள், இரு இனங்களும் சேர்ந்து வாழவோ திருமணம் செய்யவோ கூடாது என வலியுறுத்தினார். இந்த இனத்தூய்மைவாதம் காந்தி இந்தியா திரும்பிய போதும் அவருடைய சாதீய பார்வையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வேலைகளில் தாழ்வு உயர்வு இல்லை என்று சொல்லிக் கொண்டே மக்களை மலம் அள்ள வைக்கும் இந்த சமூக பொருளாதார அமைப்பை மாற்றத் தேவையில்லை என்று வலியுறுத்தினார் — ஏனென்றால் அது இந்து சமூகத்தின் கட்டமைப்பை நிலைகுலைத்து விடும் என அவர் பயந்தார்.
இந்து சீர்திருத்தவாத மரபின் உள்நோக்கம்
பூர்வ தமிழர் சைவர்களும் மாலியர்களுமே (வைணவர்) எனும் சீமானின் கருத்து புதிய ஒன்றல்ல. அவருக்கு முன்பே கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக இதே கருத்தை இந்திய தேசியத்தின் பெயரில் சீர்திருத்தவாதிகள் வைத்துள்ளனர். மதசீர்திருத்த போக்கானது இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றான்டில் வலுப்பெற்ற ஒரு இயக்கம். வடக்கே ராஜா ராம் மோகன் ராய், விவேகானந்தர், தயானந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவே ஆகியோர் இந்த இந்து சீர்திருத்தவாதிகளின் பட்டியலில் வருகிறார்கள். 1828இல் ஆரம்பிக்கப்பட்ட பிரம்ம சமாஜம், 1875இல் ஆரம்பிக்கப்பட்ட ஆரிய சமாஜம் ஆகிய இயக்கங்கள் அந்த காலகட்டத்தில் கிறித்துவத்தின் பரவலை ஒட்டி எழுந்த அச்சத்தின் விளைவாக வைதீக இந்து மதத்தை நவீன காலத்துக்கு ஏற்ப மீளுருவாக்கம் பண்ணவும் அதே நேரத்தில் சனாதனத்தை, பார்ப்பனியத்தை பாதுகாக்கவும் உருவானவை. நேரு இந்த சீர்திருத்தவாத இயக்கங்கள் இந்துமதத்தை கிறித்துவத்தின் பாணியில் பிரச்சாரம் செய்யும் நோக்கில் தோன்றியவை என்று கூறிட, டி நாகராஜ் தன்னுடைய “தீப்பற்றிய பாதங்கள்” நூலில் இந்த சீர்திருத்த இயக்கங்கள் இதற்கு முன்பிருந்தே நம் சமூகத்தில் தோன்றி சாதீய ஒடுக்குமுறையில் இருந்து தாழ்த்தப்பட்டோருக்கு ஆசுவாசம் அளிக்கும் நோக்கில் செயல்பட்டதுண்டு என்கிறார். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த இந்து சீர்திருத்தவாத சிந்தனையானது நமது இந்திய விடுதலைப்போராட்டம், இந்திய தேசியவாத அலை ஆகியவற்றுடன் ஒரு தாய் பிள்ளைகளாக கைகோர்த்துக் கொண்டன. “ஆங்கிலேயர்கள் கிறித்துவர்கள், அந்நியர்கள், அவர்களிடம் இருந்து இந்து சகோதரர்களைக் காப்பாற்ற வேண்டும்” என ஒரு பக்கம் வெறிப்பேச்சுகள் எழ, காந்தி பிரித்தானிய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாமல் இந்த இந்து-கிறித்துவ இருமை அவசியமில்லை என்று பேசினார். அதே சமயம் அவருக்குள் இந்து அல்லாத மதங்கள் வன்முறையை போதிப்பவை எனும் நம்பிக்கை ஆழமாய் வேர்விட்டிருந்ததுடன், தன்னை ஒரு இந்து சீர்திருத்தவாதியாக மேற்சொன்ன மரபை சேர்ந்தவராகவே அவர் கண்டார். அதாவது வெளிப்படையாக மத சகிப்புத்தன்மையை போதித்தாலும் உள்ளுக்குள் தன்னுடைய மதமே மேலானது, நாகரிகமானது, பிற மதத்தவர் கொலைகாரர்கள், கீழானவர் என்று அவர் நம்பினார்.
இந்துக்கள் மட்டுமே இந்தியர் ஆக முடியும்
1908இல் தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த போது அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரும் இந்துமதத்தை பின்பற்ற வேண்டும் என பரிந்துரைத்தார்.
“இந்நாட்களில் இந்தியர்கள் அதிக அளவில் வெளிநாடு செல்கிறார்கள். அந்நிய தேசத்துக்கு புலம் பெயர்ந்த பின் தமது குறிப்பிட்ட மதம் என்ன என்கிற பிரக்ஞையை எல்லாரும் தக்க வைத்திருப்பதில்லை. இந்த எழுத்தாளர் [நான்] என்ன நினைக்கிறார் என்றால் இந்துக்கள் மட்டுமல்ல எல்லா இந்தியர்களின் கடமையானது இந்து மதத்தின் பொதுவான அடிப்படைகளுடன் தம்மை பரிச்சயப்படுத்திக் கொள்வதே.”
சீமான் வெளிப்படையாக இன்று சொல்வதை காந்தி அன்று நைச்சியமாக முன்வைப்பதை கவனியுங்கள். தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களே, நீங்கள் விரும்பினானும் இல்லாவிடினும் நீங்கள் இந்துக்கள் அல்லாவிடினும் நீங்கள் இந்துக்களாகவே இருந்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் நம் காந்தியார்.
ரவி கெ மிஷ்ரா மற்றொரு தகவலை தருகிறார். ஆலய நுழைவு இயக்கத்தை காந்தி முன்னெடுக்கும் போது அதில் பங்கேற்க இஸ்லாமியர், கிறித்துவர் சார்பில் அவருடைய நெருங்கிய நண்பரான பேராசிரிய அப்துர் ரஹ்மான் விருப்பம் தெரிவித்தார். அப்போது காந்தி தன் வழக்கமான வாழைப்பழ நைசில் பதிலளிக்கையில் “மாற்று மதத்தவர் வருவதில் பிரச்சனையில்ல்லை, அதே நேரம் அவர்கள் இந்த இயக்கத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாகாது, ஏனென்றால் இது இந்துக்களின் உள்விவகாரம்” என்றார். முக்கியமாக மாற்று மதத்தவர் இந்த சீர்திருத்தத்தில் பங்கேற்றால் அதை அவர்கள் பயன்படுத்தி தலித்துகளை மதமாற்றி விடுவார்கள் என தான் அஞ்சுவதாக தெரிவித்தார். (“It could provide legitimacy to the non-Hindus which they could capitalise upon in their bid to gain converts to their own fold”.)
1933இல் ஜபல்பூரில் லியனர்டு தியோலஜிக்கல் கல்லூரியில் நடந்த கூட்டத்தின் போது தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் மாற்றுமதத்தவர் பங்கேற்கலாமா எனும் கேள்வியை எதிர்கொண்டு பதிலளித்த காந்தி “அவர்கள் தனது ஹரிஜன சேவா சங்கத்தின் கீழ் இணைந்து வேண்டுமெனில் செயலாற்றலாம், ஆனால் தனியாக செயல்பட்டு தலித்துகளை முன்னேற்ற முயலக் கூடாது” என்றார். அதற்கு அவர் கூறிய காரணம் மாற்று மதத்தவர் மதமாற்றத்திற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்துவர் என்பதே. ஆனால் காந்தியின் ஹரிஜன் சேவா சங்கம் என்ன பண்ணும்? அதனுள் வரும் கிறித்தவர், இஸ்லாமியரை பூர்வ இந்து மத பிரக்ஞையுடன் செயல்பட்டு ராமனையும் ஹரியையும் போற்றக் கேட்கும். அதாவது “இந்துக்கள் அங்கே வர மாட்டார்கள், கிறித்துவர்களும் இஸ்லாமியரும் இங்கே இந்து மதத்துக்குள் வாங்க. நாம சேர்ந்து தீண்டாமையை ஒழிப்போம்” என்கிறார். ஆனால் தீண்டாமையை வளர்க்கிற வைதீக இந்து மதத்துக்குள் இருந்து அதை எப்படி ஒழிக்க முடியும் எனக் கேட்டார் அம்பேத்கர். அதற்கு காந்தியாரிடம் பதில் இல்லை. இந்தியர் என்றால் இந்துக்கள் மட்டுமே என காந்தியார் தொடர்ந்து வலியுறுத்தினார். எப்படி காந்தியாரின் டகால்டி வேலை?
காந்தியும் கலப்புத் திருமணமும்
மன்சங்கர் திரிவேதி எனும் இந்துவுக்கும் எலிசபெத் எனும் கிறித்துவப் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா என காந்தியின் கருத்தைக் கேட்டு எபி. அரிஸ்டார்ச்சி என்பவர் கடிதம் எழுதுகிறார். அதற்கு பதிலளிக்கும் காந்தி அந்த கலப்பு மணம் தனக்கு ஏற்படையதே என்று விட்டு வழக்கம் போல வாழைப்பழ நிபந்தனைகளை வைக்கிறார்:
1) எலிசபெத் ரோமன் கத்தோலிக்கராகவே வாழட்டும், ஆனால் அவள் இந்து நம்பிக்கைகளை வரித்துக் கொண்டு, வைணவ சடங்குகளை பின்பற்ற வேண்டும்.
2) அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இந்துக்களாகவே வளர்க்கப்பட வேண்டும்.
இந்த இரு விசயங்களை அப்பெண் பின்பற்றாவிடில் அவர்களுடைய குடும்ப வாழ்வு நிம்மதியாக இருக்காது என்கிறார் காந்தி.
எவ்வளவு பிற்போக்கான பரிந்துரைகள்! ஏன் மன்சங்கர் இந்துவாக இருந்தபடியே கிறித்துவத்தை பின்பற்றி தேவாலயத்துக்கு தவறாமல் செல்ல வேண்டும் என காந்தி சொல்லவில்லை? ஏனென்றால் ஒரு இந்தியன் மனதளவிலும் வாழ்க்கையிலும் கிறித்துவனாக இருக்கவே முடியாது என அவர் வலுவாக நம்பினார்.
காந்தியின் இத்தகைய கருத்துக்கள் இப்போதும் “சிறுபான்மையினர் மதமாற்ற நோக்கத்துடனே செயல்படுகிறார்கள், அது இந்துமதத்துக்கு பாதகமானது” எனும் இந்துத்துவர்களின் பிரச்சாரத்துக்கு நெருக்கமாக இருப்பதை கவனியுங்கள். காந்தியை போன்ற இந்துமத சீர்திருத்தவாதிகளும் சரி, இந்துத்துவர்களும் சரி சாதீய ஒடுக்குமுறையை ஒரு “உள்விவகாரமாகவே” அன்றும் இன்றும் பார்க்கிறார்கள். அதனாலே காந்தியர்கள் தொடர்ந்து சிறுபான்மையினரை இந்திய பரப்பில் மற்றமையாக கட்டமைக்கிற வேலைக்கு இந்துத்துவர்களுக்கு துணை போகிறார்கள் என்பதை பார்க்கிறோம் - ஒரே வித்தியாசம் காந்தியர்கள் சற்று மென்மையாக மாற்று மதத்தவரை கையாளக் கோரினால் இந்துத்துவர்கள் அவர்களை வன்முறையைக் கொண்டு வெளியேற்ற விரும்புகிறார்கள். காந்தியர்கள் சிறுபான்மையினரை இந்து மனப்பான்மையுடன், இந்துமதத்தை பின்பற்றும்படி கேட்பார்கள், அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் இந்தியர்களே என வலியுறுத்துவார்கள். சீமான் இதே கதையாடலை தமிழ் இந்துக்கள் - தமிழரல்லாத சிறுபான்மையினர் எனும் இருமை சட்டகத்தின்படி வலியுறுத்துவதை கவனியுங்கள்.
காந்தி இந்தியா முழுக்க பரவிய பக்தி மரபு, அதனை ஒட்டியும் தொடர்ந்து தோன்றிய இந்து சீர்திருத்த மரபு, அதன் நீட்சியாக கிளர்ந்தெழுந்த இந்திய சுதந்திர போராட்டம் ஆகியவற்றின் அரசியல் கலாச்சார பிரதிநிதியாக திகழ்ந்தார். சீமானிடம் இப்போதைக்கு நாம் “இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்”, பார்ப்பனியம்-இந்து-இந்தியா எனும் கருத்தமைவை புனிதப்படுத்தும் போக்கும், “இந்து மட்டுமே தேசப்பற்றாளனாக முடியும்” எனும் நம்பிக்கை வெளிப்படவில்லை என்பதால் அவரை இந்துத்துவவாதி என நாம் கோர இயலாது. மாறாக காந்தியைப் போன்று அவர் ஒரு இந்து சீர்திருத்தவாதியாக வெளிப்பட்டிருக்கிறார்.
இந்த சீர்திருத்தவாதிகளில் பெயரில் மட்டுமே “திருத்தம்” இருக்கும், அவர்களின் பிரதான நோக்கம் மரபையும், சனாதன சிந்தனைகளையும் சமகால நெருக்கடிகளுக்கு ஏற்ப மேக் அப் போட்டு அழகாக பெருந்திரளுக்கு அளிப்பதே என்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழில் இந்து சீர்திருத்தவாத மரபு சைவ தமிழ் தேசியமாகவே தோற்றம் கொண்டது என்பது வரலாறு. இந்த சைவ தமிழ் தேசியர்களே பௌத்தரான வள்ளுவரை பார்ப்பன அப்பாவுக்கும் தலித் அம்மாவுக்கும் பிறந்த சைவத் துறவியாக கட்டமைத்து ஸ்வீகரித்தார்கள். தம் சைவ சித்தாந்தத்துக்கு ஏற்ப வள்ளுவத்தில் உள்ள பௌத்த கருத்துக்களை தவறாக உரையெழுதி திரித்தார்கள். சீமான் இந்த ‘மரபில்’ வந்து கிறித்துவர்களையும் இஸ்லாமியரையும் சைவராக்கப் பார்க்கிறார். இது அவர் திடீரென உதிர்த்த கருத்தல்ல. அவருடைய கட்சி கொள்கை விளக்கத்திலே இது ஆரம்பத்தில் இருந்தே உள்ள கருத்து தான் என்கிறார் ஆழி செந்தில்நாதன் (“நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தின் மீதான விமர்சனங்கள்” - தொகுப்பு: கீற்று நந்தன்).
சீமான் எனும் தமிழ் இந்து சீர்திருத்தவாதி?
காந்தி உள்ளிட்ட இந்து சீர்திருத்தவாதிகள் தொண்ணூறுகளில் இந்து தேசியவாதம் காட்டுத்தீயாக வளர்வதற்கான மண்ணை தயாரித்து விட்டே சென்றனர். அதே போலத் தான் இங்கு தமிழ் தேசிய சைவர்கள் ஒரு மென்மையான சனாதன சிந்தனை தமிழ் பண்பாட்டில் பரவ வழிவகுத்தனர், அதை பயன்படுத்தி இன்னும் இந்துத்துவம் இங்கு தழைக்கவில்லை என்றாலும் அதற்கான ஒரு கலாச்சார வெளியை தயாராக வைத்துள்ளனர். சீமான் அந்த விதையை எடுத்து அரசியல் வெளியில் நட்டு வளர்க்க முடியுமா எனப் பார்க்கிறார். ஆனால் அவ்விதை இதுவரை மண்ணுக்குள்ளே செத்துப் போயுள்ளது என்பதை வரலாறு நமக்கு சொல்லுகிறது. சீமானின் ‘தாய் மதத்துக்கு வாங்க’ விதைக்கும் அந்நிலை தான் என சொல்லவா வேண்டும்?

