எம்.ஜி.ஆர் சரோஜா தேவியை தவிர்க்கத் தொடங்கி அந்த இடத்தில் ஜெயலலிதாவை கொண்டு வந்த கதையை நாம் அறிவோம். அது ஏன் என்பதன் பின்னால் எம்.ஜி.ஆரின் பாதுகாப்பின்மை குறித்த ஒரு கதை இருக்கிறது.
சரோஜா தேவி எம்.ஜி.ஆரின் படத்தில் (நாடோடி மன்னன்) நாயகியாக அறிமுகமானாலும் தொடர்ந்து, விரைவில் தமிழில் பிரசித்தமான நடிகையாகிறார். துவக்கத்தில் பார்க்க கறுப்பாக, பேரழகிகளின் அங்க லட்சணங்கள் என தமிழ் சினிமாவில் நம்பப்படுகிற தோற்ற இயல்புகள் இல்லாமலே இருந்தார். அதனாலே அவரை நாயகி ஆக்க துவக்கத்தில் தயாரிப்பாளருக்கு அவநம்பிக்கை இருந்தது. எம்.ஜி.ஆருக்கு அவரை பிடித்துப் போக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க வைத்து ஓக்கே பண்ணுகிறார். எம்.ஜி.ஆரின் தேர்வும் கணிப்பும் பொய்க்கவில்லை. சரோஜா தேவி அந்த காலத்துக்கு கனவுக்கன்னியாக மாறுகிறார். முகம், கழுத்து, கைகள் என எங்கும் களிம்புகள் பூசி தன்னை பளிச்சென்று மாற்ற முயன்று, அந்த ஒயிலான நடை, சிங்காரமான வெட்டு, தளுக்கு, கொஞ்சல் மொழி ஆகியவை கொண்டு ரசிகர்களை நிரந்தரமாக தொந்தர்வுக்குள்ளாக்கும் கனவு நாயகி ஆகிறார். ஆனால் அவருடைய நிறம் துவங்கி அவர் நடக்கிற பாணி (ஏன் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு நடக்கிறார் என தயாரிப்பாளர் கேட்கிறார்), கன்னட சாயல் அதிகம் கொண்ட தமிழ் ஆகியவை பிரச்சனைகளாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டு பின்பு அவற்றினாலே அவர் வெகுவாக சிலாகிக்கப்படும் நிலைக்கு விரைவில் வருகிறார்.
ஆனால் இதே சரோஜா தேவி சாமர்த்தியமாக தன் தொழில் வாழ்வையும் அமைத்துக் கொள்கிறார். எம்.ஜி.ஆரின் தோட்டத்து முல்லையாக மட்டும் இருக்க மறுக்கிறார். அதுவும் எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வில் இருந்த ஓராண்டில் அவருடைய படங்கள் முடங்கிப் போகின்றன. திரும்ப வரும் எம்.ஜி.ஆரால் சிவாஜிக்கு ஈடாக வெற்றிப்படங்களை உடனடியாக அளிக்க முடியவில்லை. படங்களை நேரத்துக்கு முடிக்காமல் தாமதித்து தயாரிப்பாளர்களை நட்டமடைய வைக்கிறார் எனும் குற்றச்சாட்டு எல்லா திசைகளிலும் எழுகிறது. ஆனால் இந்த ஓராண்டுக்குள் சரோஜா தேவி சிவாஜி “கல்யாண பரிசு”, “பாகப்பிரிவினை”, “கைராசி” உள்ளிட்ட வேறு நாயகர்களின் வெற்றிப்படங்களில் நடித்து தமிழகம் முழுக்க பிரபலமாகிறார். எம்.ஜி.ஆர் திரும்ப வரும் போது தான் ஆரம்பத்தில் பார்த்த சரோஜா தேவி அல்ல இவர் எனப் புரிந்து கொள்கிறார். காலை முதல் மாலை வரை சிவாஜியின் படத்து வேலையை முடித்து விட்டு மாலையில் அவர் எம்.ஜி.ஆரின் “திருடாதேவுக்கான” படத்தளத்துக்கு வருவார். அப்போது அவருடனான காட்சிகளில் நடிப்பதற்காக ஒருநாள் முழுக்க எம்.ஜி.ஆர் பொறுமையாக காத்திருப்பாராம். எம்.ஜி.ஆருக்கு கடுப்பு தான், ஆனால் வேறு வழியில்லையே. அதனால் பொறுத்துக் கொண்டார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை அளித்து தன்னை உச்ச நட்சத்திரமாக மீண்டும் உயர்த்திக்கொண்டார் எம்.ஜி.ஆர். இருந்தாலும் சரோஜா தேவி அப்போதும் எம்.ஜி.ஆரின் கைகளுக்குள் எப்போதும் சிக்கிக் கிடக்காத பட்டாம்பூச்சியாகவே இருந்தார்.
இதன் பிறகே ஜெயலலிதாவின் வருகை தமிழில் “வெண்ணிற ஆடையுடன்” நிகழ்கிறது. எம்.ஜி.ஆர் அதற்கு முன்னே அவரை கவனித்து 1965இல் தன் “ஆயிரத்தில் ஒருவனில்” நாயகி ஆக்குகிறார் (ஜெயலலிதாவுக்கு முதலில் வெளியான படம் அது.) அப்போது ஜெயலலிதாவுக்கு வயது 17 (பார்க்க அதைவிட இளமையாக இருப்பார்.) எம்.ஜி.ஆருக்கோ வயது அப்போது 48. 31 வயது வித்தியாசம் இருவருக்கும் இடையே. அப்போது அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்கிறார்: “என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு விரைவில் வயதாகி விடுகிறது. ஆனால் எனக்கோ வயதாக ஆக இளமை திரும்புகிறது. அதனால் இனி இது போல இளம் நடிகைகளுடன் மட்டுமே நடிக்கப் போகிறேன்.” என்ன குசும்பு பாருங்கள். சொன்னது போன்றே எம்.ஜி.ஆர் சரோஜா தேவிக்கு வாய்ப்புகளை அவர் அடுத்து அளிக்கவில்லை. (தயாரிப்பாளரின் வலியுறுத்தலால் மட்டும் “அன்பே வா” படத்தில் மீண்டும் சரோஜா தேவியுடன் இணைந்தார்.) ஜெயலலிதாவுடன் தொடர்ந்து அவர் நடிக்க, ஜெயலலிதா ஒரு உச்ச நட்சத்திரமாகிறார்.
எம்.ஜி.ஆரின் இந்த தேர்வைப் பற்றி யோசிக்கையில் ஒன்று தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் தன் செல்வாக்கின் உச்சத்தின் இருந்த போது அவருக்கு வயதாகி விடுகிறது. அது குறித்த ஒரு தாழ்வுணர்வு அவருக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். அதை யாரும் குறிப்பிடாலாகாது என அவர் கவனமாக இருக்கிறார். ஆக, “எனக்கு போகப் போக இளமை அதிகமாகிறது” என கூறிக்கொண்டே அவரே அதை நம்பவும் முயல்கிறார். அவருடன் இருந்த ஜால்ராக்களும் அதை ஊக்கப்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவருக்கு இன்னொரு பக்கம் தன் வயசான தோற்றம் உறுத்தியபடியும் இருக்கிறது. இதை ஈடு கட்ட அவர் 18 வயதுக்குள்ளான, அவருடைய மகளின் தோற்றம் உள்ள பெண்களுடன் நடிக்கத் தொடங்குகிறார். அந்த காலத்தில் துடிப்பான இளம் நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருடன் போட்டி போடவும் செய்கிறார் எம்.ஜி.ஆர். இப்போது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் அன்று இந்த கோணங்கித்தனங்களை அவர் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்திருக்கிறார். பின்னர் இதையே இப்போது தமிழில் ரஜினி, கமல், மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களும் பின்பற்றுகிறார்கள். மோகன்லால் கூடுதலாக முகத்தசைகளுக்கு அறுவை சிகிச்சை பண்ணிக் கொண்டு அது சொதப்பிட உணர்ச்சிகளை முகத்தில் காட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவர் இளம்பெண்களுடன் இன்னும் நடனமாடத் தான் செய்கிறார்.
வணிக சினிமாவில் இந்த 60, 70 வயதுக்காரர்களின் இளமை ஒரு தீராத பிரச்சனையாகவே இன்றும் தொடர்கிறது. 1960களில் ‘“இது வாலிப வயசு” என எம்.ஜி.ஆர் கூடுதலாக முறுக்கேற்றிக் கொண்டு ஆட்டம் போட்டு இப்பழக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

