முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறிவினால் ஏதாவது பயனுண்டா?



நான் அறிவினால் பயனில்லை என்று சொல்லவில்லை, அறிவுக்கு பலனுண்டு என அனைவரும் அறிவோம் (அதை நாம் பயன்படுத்தாமல் இருப்பது வேறு விசயம்), ஆனால் அது என்ன பயன் என்று நாம் கேட்பது அவசியம். .தா., அறிதல் இன்பமளிக்கும் செயல். ஒரு புதிய செய்தியை அறியும் போது கூட நாம் இன்புறுகிறோம். அதே நேரம் இச்செய்திகள் நமக்கு ஒரு நிபுணத்துவத்தை தருவதுண்டா?


ஒருவர் அரசியல் செய்திகளை தொடர்ந்து சேகரித்து வருகிறார்; அரசியல் குறித்த தன் அறிவை பெருக்கிக் கொள்கிறார். ஆனால் அவரை ஒரு அரசியல் நிபுணர் என்று கூற முடியுமா? சாதிகளின் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு அனுசரித்து யுக்திகளை வகுத்தால் ஒரு கட்சி தேர்தலில் வெல்ல முடியும் எனும் கருதுகோள் அல்லது நம்பிக்கை ஒரு சிந்தனையாளருக்கு இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கையை யுக்தியாக மாற்றி நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட சூழலில் நேரத்தில் அதற்கு மதிப்புண்டா என அவர் அறிய முடியும். ஆக அரசியலுக்கு வெளியே இருக்கும் ஒரு அரசியல் அறிஞர் ஒரு போதும் அதில் நிபுணராக முடியாது. ஒரு துறவி காமக் கலையில் நிறைய ஆராய்ச்சி செய்து ஒரு நூல் இயற்றலாம். அது தலைசிறந்த நூல் என பலரால் போற்றவும் படலாம். ஆனால் காமம் குறித்த எண்ணங்கள், நம்பிக்கைகள், கருத்துக்களை செயல்படுகையில் மட்டுமே அதில் ஒருநிபுணத்துவம்சம்மந்தப்பட்டவருக்கு கிடைக்கிறது. அதாவது நிபுணத்துவம் என்பதுசெயலில்இருக்கிறது, சிந்தனையிலோ கோட்பாட்டிலோ இல்லை


தன்னுடைய Nicomachean Ethics என்ற நூலில் அரிஸ்டாட்டில் அரசியல் துறையில் அனுபவம் பெற அப்போதைக்கு வாய்ப்பில்லாத, பொதுவாக வாழ்வனுபவம் குறைவாக உள்ள இளைஞர்களுக்கு அரசியலியல் கற்றுக் கொடுக்கப்படுமாயின் அதனால் அவர்களுக்கு பயனிருக்குமா எனக் கேட்கிறார் (பக். 5). அரிஸ்டாட்டில் என்ன சொல்ல வருகிறார்?


 சாதியை எடுத்துக் கொள்வோம். அதன் சீர்கேடுகளை கல்வியினால் அறிவது ஒன்று, நேரடியாக அனுபவிப்பது மற்றொன்று. அதை அனுபவிக்காதவர்கள் அதை ஒரு கருத்தாக அறியும் போது அவர்கள் அதைதொலைவில் உள்ள ஒரு பொருளாகபாவிக்கிறார்கள்.


சாதியை விட இவ்விசயத்தில் சிக்கலான மற்றொரு அறிவு ஆன்மீக அறிவு. யாருமே ஆன்மாவைக் கண்டதோ தொட்டோ முகர்ந்தோ சுவைத்தோ உணர்ந்ததில்லை. ஆனால் ஆன்மீகம் பற்றி பல கோடிப் பக்கங்கள் உலகம் முழுக்க எழுதபட்டிருக்கின்றன. அதை பல கோடி பேர் படிக்கிறார்கள். பல கோடி பேர் ஆன்மாவின் பயணம் பற்றி பேசி அதை பல கோடி பேர் உன்னிப்பாக கேட்கிறார்கள்.


எனில் படிப்பினால், அறிதலினால் பயனே இல்லையா? இருக்கிறது. அறிதலானது ஒரு செயலின் பகுதியாக இருக்க வேண்டும், அதற்கு என்று ஒரு இலக்கு இருக்க வேண்டும் என்கிறார் அரிஸ்டாட்டில். அதாவது சாதியை இன்ன இடத்தில், இன்ன நேரத்தில், இந்த அளவுக்கு ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ வேண்டும் என முடிவெடுக்கிற ஒருவர் அதற்கான திட்டங்களை வகுக்கிறார். அப்போது அவர் சாதி குறித்து ஆய்வு செய்து சாதி குறித்த தன் அறிவை முதற்கட்டமாக விரிவாக்குகிறார். அடுத்து ஒவ்வொரு செயல்திட்டமாக நடைமுறைப்படுத்துகிறார்; பல நடைமுறை தடைகளை, சிக்கல்களை எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராக முயற்சி எடுக்கையில் அவருடைய அறிவு செயல்முறைக்கு வந்து நிபுணத்துவம் ஆகிறது. அதுவரை அவ்வறிவு உயிரற்ற ஜடம் மட்டுமே


ஏன் வாசிக்க வேண்டும்?” எனும் நூலை எழுதிய போது நான் வாசிப்பை நமது இருத்தலின் பகுதியாக பார்க்க வேண்டும், அதற்கு வெளியே அறிவை அடைவதற்கான முயற்சியாக வாசிப்பு இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது இதனாலே. அதாவது வாசித்து பெற்ற அறிவைக் கொண்டு இவ்வாழ்வை மேம்படுத்த முடியாது. வாசிப்பே ஒரு குறிப்பிட்ட இலக்கைக் கொண்ட வாழ்வின் பகுதியாக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைந்ததும் வாசிப்பின் நோக்கம் நிறைவடைந்து விட வேண்டும். .தா., என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவது எனது இலக்கு என்றால் அதற்கான செயல்திட்டமாக வாசிப்பு இருக்கலாம். இன்பமடையும் போதே அவ்வாசிப்பு நியாயம் பெறும். அந்த இன்பம் கொள்ளும் செயலுக்கு வெளியே வாசிப்பறிவுக்கு மதிப்பில்லை. நான் சைவ உணவு சமையலை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் “50 வகையான சைவ உணவுப் பதார்த்தங்கள்என்கிற நூலை வாசித்து அதை வைத்து சமைத்துப் பார்க்க வேண்டும். அப்போதே அந்த வாசிப்பு நிறைவு கொள்ளும். (இன்று நாம் பார்வையின்பத்துக்காக மட்டுமே சமையல் காணொளிகளை தினமும் பார்க்கிறோம்.) எனக்கு என்னுடைய இருத்தல் குறித்து ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு விடை காண்பது என் இலக்கு. அதற்காக நான் நாகார்ஜுனரையோ கீதையையோ பயிலலாம், பேருரைகளைக் கேட்கலாம், தியானம் பயிலலாம், ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து புதிய வாழ்க்கைமுறையை ஏற்படுத்தலாம், ஆனால் என் இலக்கை நான் நடைமுறையில் ஒருசெயலாகஅடையும் வரை இந்த பயிற்சிகளினால் எந்த பயனும் இல்லை. அல்லது அந்தசெயலுக்குவெளியே அது அறிவே அல்ல


இதை சிறப்பாக புரிந்து கொண்ட மதம் பௌத்தம். அதனாலே அது எந்த தத்துவ அறிவையும் அற நியதியையும் வாழ்தலுக்கு, செயல்பாட்டுக்கு வெளியே வைத்து பார்ப்பதில்லை. அதனாலே கல்வியினால் என்ன பயன் என்று கேட்கும் வள்ளுவர் இவ்வாறு சொல்லுகிறார்:


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். – குறள்: 2


அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் 


புத்தரின் பாதங்கள் உலகம் முழுக்க மூவாயிரம் காணப்படுகின்றன என்கிறார் எழுத்தாளர் மோட்டோஜி நிவா. பௌத்த தொன்மப்படி இந்த பாதங்களை வணங்குவதன் நோக்கம் புத்தர் பூமியில் கால்பதித்து நின்று போதித்தவர் என்பதை உணர்த்துவதே. அதாவது அவர் உலகில் நமது இருத்தலை, அதன் வழியாக ஒரு மனிதன் தன்னை அறிவதை பிரதானப்படுத்தினார், உடலுக்கும் செயலுக்கும் முக்கியத்துவம் அளித்தார், வானுலகை அடைவதே உன்னத அறிவு என்று கருதவில்லை என்பதே புத்தரின் பாதம் உணர்த்தும் சேதி. புத்தரின் பாதத்தை தொழுவதன் பொருள் நேரடியாக பாத வடிவொன்றை வணங்குவது அல்ல. புத்தரின் அறிவுரையை நேரடி அனுபவத்தில் நடைமுறைப்படுத்துவது என்பதேநற்றாள் தொழுவது’. அல்லாவிடில் அவ்வறிவுக்கு எந்த பயனும் இல்லை என்கிறார் வள்ளுவர்



இந்த புரிதல் அறிவுச்செயல்பாட்டிற்கு ஒரு நெருக்கடியை கொண்டு வருகிறது: அவதானிப்பால், பகுத்தறிவால் புரிந்து கொண்ட தகவல் அறிவுக்கு, தர்க்க அறிவுக்கு அதனளவில் பயனில்லை என்றால் அறிவுத் தேடலின் நோக்கம் அறிவு அல்லவா? இல்லை என்று சொல்லுவார் அரிஸ்டாட்டில். இந்த கட்டுரையை வாசிப்பது இதனால் இன்ன விசயத்தை அறிந்து கொள்ளலாம், அது நம் வாழ்க்கைப் பார்வையை மேம்படுத்துமே எனும் நோக்கத்தில் இருத்தலாகாது. இதை வாசிப்பதனால் (1) ஒரு குறிப்பிட்ட இன்பம் கிடைக்கும்; (2) இதைக் கொண்டு என் வாழ்வை இன்னும் ஆழமாக, செறிவாக என்னால் மேலெடுக்க முடியும் எனில், அதுவே என் இலக்கு எனில், அது நிகழும் போது மட்டுமே இந்த வாசிப்பு அர்த்தபூர்வமானதாகிறது


அரிஸ்டாட்டில் மட்டுமல்ல நவீன யுகத்திலும் அறிதல் என்றால் என்ன எனும் கேள்வியை இந்த கோணத்தில் அணுகிய தத்துவ அறிஞர்கள் உண்டு. இவர்களில் நீட்சேயும் ஹைடெக்கரும் முக்கியமானவர்கள். பிரக்ஞையின் அமைப்பை, செயல்பாட்டைப் பற்றி அது ஒரு தனியான பிரகிருதி என்பதைப் போல ஹுசர்ல் விளக்கிய போது இருத்தலையும் பிரக்ஞையும் அப்படி தனித்தனியாக பிரித்து பார்ப்பதை கடுமையாக விமர்சித்தவர் ஹைடெக்கர். மழை வெளியே பெய்து கொண்டிருக்கும் போது வீட்டில் கணப்படுப்பின் முன் அமர்ந்து ஒருவர் சூடான காபியை அருந்துகிறார் என்றால் காலத்தினுள்ளும், வெளியினுள்ளும் அவர் தன் இருத்தலை அறிந்தபடித்தான் இருக்கிறார். ஒரு மிடறு காபியை உறிஞ்சி சுவைப்பது கூட இருத்தலை அறிவதே என்று சொல்லுவார் அவர். நவீன வாழ்வு அறிதலை பகுத்தறிவு சார்ந்த, துய்ப்பு நடவடிக்கையாக மாற்றியதால் மனிதன் தன் இருப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டான் என்று அவர் கவலைப்பட்டார். அதாவது நவீன மனிதனின் சிந்தனை சார்ந்த பிரக்ஞை அவனுக்கும் இருத்தலுக்கும் இடையே ஒரு இடைஞ்சலாக வந்து அமர்ந்து விட்டது. ஒரு மரவெட்டி ஒரு வெட்டும் போது கோடரியை எடுத்து வீசத் தொடங்குகிறான். ஆனால் நவீன மனிதனோ இது என்னவகையான மரம், இதன் தாவரவியல் பரிமாணங்கள் என்ன, இதன் பொருள் மதிப்பு என்ன, இந்த கோடரி எப்படியானது என்றெல்லாம் சிந்திக்கிறான். கோடரியை கையில் ஏந்தும் வரை அவனையும் அவனுடைய இருத்தலையும் இந்த மனம் பிரித்து வைத்து விடுகிறது. சில நேரம் ஒரு செயலில் முழுமையாக ஈடுபட விடாதபடி அது செய்வதும் உண்டு. தான் நிற்கிற வெளி ஏற்படுத்தும் இருத்தலின் பிரிக்க முடியாத ஒரு பகுதியே அம்மரம் என அவனால் உடல் சார்ந்து உணர முடியாமல் போகிறது. இது ஒரு மகத்தான் இழப்பு என்கிறார் ஹைடெக்கர். எந்திரங்களின் துணை கொண்டு வாழப்படும் நவீன வாழ்வை அவர் எதிர்த்தார்நீட்சேயும் இவ்வகையான பார்வையை தனது நூல்களில் கவித்துவமான மொழியில் முன்வைத்தார். காலம் உணத்தும் இருத்தலை அறிய முடியாதவனாக அறிதலின் மனம் அவனை மாற்றி விட்டது என்று அவர் வருந்தினார்.  


ஆனால் பின்நவீன வாழ்வில் நாம் அரிஸ்டாட்டிலில் இருந்து ஹைடெக்கர், நீட்சே வரை சுட்டிக்காட்டிய பிரச்சனைகளின் விஸ்வரூபத்தை பார்த்தபடி திகைத்து நிற்கிறோம். இன்று நாம்  தகவல்களின் மலை உச்சிகள் மீது உட்கார்ந்திருக்கிறோம். நாம் இரவும் பகலும் தகவல் அறிவை புசித்தபடியே இருக்கிறோம். இது எந்த எல்லை வரை போய் விட்டதென்றால் நாம் நம்மையே தகவல்களின் தொகுப்பாகவே இன்று காண்கிறோம். நமது தன்னிலை இன்று நாம் வாங்கி சேர்க்கிற பொருட்களின் விபரங்களால், நாம் நம்மைக் குறித்து பிறரிடத்து, சமூகவலைதளங்களில், ஏற்படுத்திக் கொண்டே இருக்கிற (இது முடிவற்றது) பிம்ப கட்டமைப்பால் உருவாகிறது; நமது உடலென்பது இன்று நமது மருத்துவ அறிக்கைகளால், சமூகம் ஏற்கிற தோற்ற அமைவுக்குள் அது வருகிறதா என்பதே நம்மை அரிக்கிற கவலையாக இருக்கிறது; நமது பல்வேறு உள்ளுறுப்புகளின் இயக்கங்கள் குறித்த தகவல்களால் அமைந்திருக்கிறது; ஒரு குடிமகனாக நமது இருப்பு நமது ஆதார், பேன், வாக்காளர் அட்டைகளாக சுருங்கி விடுகிறது. ‘நாம் என்பது இவ்வளவு தான்என கையளவு தகவல்களாக எடுத்துப் பார்க்கும்படியாகி விட்டது.

 வேறெப்போதையும் விட நாம் நம்மைப் பற்றியே இன்று அதிகம் பேசிக் கொண்டிருப்பது நம்மை தகவல்களாலான ஒரு இருப்பாக நாம் காண்பதாலே. நமது வேலையிடத்தில் நமது வேலைத்திறனை, தாக்கத்தை மதிப்பிட 5 வகையான மெட்ரிக்ஸை மனிதவள மேம்பாட்டுத்துறை வைத்திருக்கிறது. ஒரு கணவனாக நீங்கள் உங்கள் மனைவியிடம், பிள்ளைகளிடம் அன்பாக இருந்து நிறைவளிக்கிறீர்களா, கடமையை ஆற்றுகிறீர்களா என அறியவும் இன்று எவ்வளவு நேரத்தை அவர்களுடன் செலவிடுகிறோம், அதற்கு எவ்வளவு செலவிடுகிறோம், அது மகிழ்ச்சியானதாக இருக்கிறதா என்றே மதிப்பிடுகிறோம். முன்பு நாம் புற அறிவை செயலில் இருந்து துண்டித்து அதை ஆராயவும் பரிசீலிக்கவும் முயன்றோம் என்றால் இன்று நம்மையே ஒரு அறிவாகக் கண்டு நம்மிடம் இருந்து நாமே சுயமாக துண்டித்துக் கொள்கிறோம். சதா நம்மையே ஆராய்ந்து பதற்றத்தில் இருக்கிறோம். அதனால் ஏற்படும் மன அழுத்தத்தில் தவிக்கிறோம். இருப்பில் இருந்து சுய-துண்டிப்பு நிகழும் போது நாம் கடும் தனிமைக்கு ஆட்படுகிறோம்


ஆக வேறெப்போதையும் விட அறிதலினால், அறிவினால் என்ன பயன் என நாம் இன்றைய காலத்திலேயே தீவிரமாக யோசிக்க வேண்டும்.


நன்றி: சமயம் இணைய இதழ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...