என்னுடைய “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” நாவல் குறித்து உங்களுக்கு எழக் கூடிய சில கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களை கீழே தருகிறேன்:
1) இது எம்மாதிரியான நாவல்?
இது ஒரு துப்பறியும் நாவல். பின்நவீன பாணியில் (வாசிப்புக்கு முடிந்தவரை இடைஞ்சல் இல்லாமல் சரளமாக) எழுத முயன்றிருக்கிறேன்.
2) இது துப்பறியும் நாவலா? இலக்கிய நாவலா?
இந்நாவலின் உள்ளே நீங்கள் பயணிக்கும் போது அதற்கு வெளியே உள்ள கதைத்தளத்துக்கு அப்பால் இது மனிதனின் தன்னிலையானது எப்படியானது, நம்மை அறிவதில் நமக்குள்ள போராட்டம் என்ன என்பதைப் பற்றியும் பேசி இருக்கிறேன். ஆக இது வெறுமனே ஒரு மேலோட்டமான துப்பறியும் நாவல் அல்ல. என்னதான் ஒரு வெகுஜன வடிவத்தில் சங்கதிகளைக் கொண்டு சுவாரஸ்யமான கதையை இது சொன்னாலும், சற்று கவனித்து ஆழமாக படிக்க வேண்டிய இலக்கிய பிரதியாகவே இந்நாவல் இருக்கும்.
3) இது உண்மைச் சம்பவத்தின அடிப்படையில் எழுதப்படதா?
எல்லா துப்பறியும் நாவல்களிலும் பிரசித்தமான நிஜ வழக்குகளின் சாயல் இருக்கும். இந்நாவலிலும் அது உண்டு. ஆனால் இது ஒரு நிஜமாக நடந்த வழக்கை ஆவணப்படுத்தும் முயற்சி அல்ல. மாறாக, நிஜத்தில் வெளிவராத உண்மைகளை என் கற்பனையைக் கொண்டு இந்நாவலில் வெளிச்சம் போட்டுக் கோட்ட, ஊடுருவிப் பயணிக்க முயன்றிருக்கிறேன். அதனால், என்னதான் அண்மையில் நடந்த ஒரு குற்ற வழக்கை இது நினைவுபடுத்தினாலும், இதை ஒரு கற்பனையான படைப்பாக வாசிப்பதே ஒரு நாவலாக இதற்கு நியாயம் சேர்க்கும்.
மற்றபடி முடித்து வைக்கப்பட்டும் இன்னும் முடிவுறாமல் சர்ச்சைகளில் சிக்கி பல திசைகளிலாய் கொழுந்து விட்டெரியும் சில வழக்குகளை இந்நாவல் நினைவுபடுத்தக் கூடாது, இதன் மூலம் யாரையும் புண்படுத்தவும் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் என் கை நான் சொல்வதையே கேட்காதே! என்ன செய்ய?
4) இது துப்பறியும் நாவலா அல்லது பேய்க்கதையா?
இரண்டையும் கலந்த ஒரு வடிவத்தை பரிசோதனை செய்து பார்த்திருக்கிறேன். நாம் இத்தகைய கலவை வடிவத்தை வெகுஜன துப்பறியும் படங்களில் அதிகமாக பார்த்திருக்கிறோம். நான் அதை இலக்கிய வடிவில் முயன்றிருக்கிறேன். அதுவும் அச்சுறுத்தும் பேயாக இல்லாமல் அன்பான அழகான பேயாக காட்ட நினைத்தேன். பஷீரின் “நீல வெளிச்சத்தின்” பாணியில்.
