சுகுமாரக் குறுப்பு கேரளாவில் மிக பிரசித்தமான ஒரு குற்றவாளி. 1984, ஜனவரி 21இல் அவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து ஒரு கொலையை செய்தார். கொலை அல்ல பிரச்சனை, அதை எதற்காக செய்தார் என்பதே. அவர் வெளிநாட்டில் வேலை செய்யும் போது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை 30 லட்சத்துக்கு எடுத்திருந்தார். ஜெர்மனியில் ஒருவர் தன்னுடைய சாவை பொய்யாக சித்தரித்து காப்பீட்டு பணத்தை கையாடினார். அதில் இருந்து தூண்டுதலைப் பெற்ற சுகுமாரக் குறுப்பு இந்தியாவில் முதன்முறையாக அக்குற்றத்தை முயன்று பார்க்கும் முயற்சியில் தன்னை ஒத்த தோற்றமுள்ள சாக்கோ எனும் அந்த இளைஞரை இரவில் தன் காரில் அழைத்து சென்று விஷமூட்டி கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தன் காரில் வைத்து எரித்தார். இந்தக் குற்றத்தை ஆச்சரியமாக கேரள போலீசார் கண்டுபிடித்ததுடன் சுகுமாரக் குறுப்பைத் தேடி இந்தியா முழுக்கவும் பின்னர் வெளிநாட்டுக்கும் பயணித்தனர். ஆனால் குறுப்புக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் என்பதால் அவர் போலீசின் வேட்டையில் இருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகிறது. குறுப் இப்படி 37 வருடங்களாக தலைமறைவான குற்றவாளி எனும் அளவிலும், அவருடைய குரூரமான திட்டம், சாமர்த்தியம் காரணமாகவும் கேரள கூட்டுமனத்தில் ஒரு தவிர்க்க முடியாத எதிர்-தொன்மமாக மாறினார். அடிக்கடி அங்கே போலீஸைக் கிண்டலடிக்க சுகுமாரக் குறுப்பைக் கண்டுபிடிச்சிட்டீங்களா எனும் கேள்வியை மக்கள் எழுப்புவர். குறுப்பின் கதையை இதுவரை அங்கே இரண்டு முறை படமாக எடுத்திருக்கிறார்கள். இப்போது வந்துள்ள துல்கர் சல்மான் நாயகனாக குறுப்பாக நடித்துள்ள “குறுப்” அவற்றில் மூன்றாவது.
படம் எப்படி?
முதல் பாதி சுவாரஸ்யமாக ரசிக்கத்தக்கதாக உள்ளது; இரண்டாம் பாதியில் தான் படம் நிறைய குழப்பங்களுக்குள் மாட்டிக்கொள்கிறது - குறுப் நல்லவரா கெட்டவரா, வில்லனா ஹீரோவா எனும் கேள்விக்கு தெளிவாக பதிலளிக்க முடியாமல் இயக்குநர் திண்டாடுகிறார். இடைவேளை வரை், நமக்கு குறுப் மீது பரிதாபமும் ஆர்வமும் தோன்றும்படியே அவரை ஒரு புத்திசாலியான, அடாவடியான, நன்மையுள்ள பாத்திரமாக இயக்குநர் காட்டுகிறார். அதாவது என்னதான் சூழ்ச்சியும் ஏமாற்றுப்புத்தியும் கொண்டவர் என்றாலும் அதை அவர் அடுத்தவர்களைக் கெடுக்க பயன்படுத்துபவர் அல்ல குறுப் என இயக்குநர் வலியுறுத்துகிறார். அவர் காப்பீட்டு பணத்தை களவாட திட்டமிடும் போது தான் அந்த நன்மையான முகம் மாறத் தொடங்குகிறது. இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது என்பதை இயக்குநரால் சரிவர நிறுவ முடியவில்லை. குறிப்பாக குறுப்பின் நண்பர்கள் சேர்ந்து சார்ளி எனும் இளைஞனைக் கொல்லும் காட்சியில் நமது பச்சாதாபம் சார்ளி மீதும் சார்ளியின் குடும்பத்தின் மீதும் சென்று விடுகிறது. வழக்கை விசாரிக்கும் போலிஸ் அதிகாரி ஹீரோவாக மாறத் தொடங்குகிறார். தப்பித்தோடும் குறுப் வில்லனாகிறார். ஆனாலும் அவ்வப்போது அவருடைய சாகசங்கள், சாமர்த்தியங்களைக் காட்டி நம்மை அவரை ரசிக்க வைக்கவும் இயக்குநர் முயல்கிறார்.
அடுத்து திரைக்கதையில் மற்றொரு தவறை இயக்குநர் செய்கிறார் - ஒரு இரண்டாவது வில்லனை அனேகமாக படம் முடியும் தறுவாயில் அறிமுகப்படுத்துகிறார்: சவுதி ராஜ குடும்பத்தின் இளவசரன். இந்த இளவரசனிடம் இருந்து பல நூறு கோடிகள் பணத்தை திருடிய நிலையில் அவரிடம் இருந்தும் தப்பிக்கும் நோக்கிலே குறுப் அந்த கொலைக்குற்றத்தை செய்து தான் இறந்ததாக சித்தரிக்க முயன்றதாக ஒரு புதிய விளக்கத்தை படம் தருகிறது. இதற்கான முஸ்தீபை படத்தில் பாதியிலே துவங்கி இருந்தாலும் நம்மை முழுமையாக நம்ப வைக்க அது போதுமானதாக இல்லை. படம் முடியும் போது குறுப் நிஜமாகவே கொல்லப்பட்டாரா அல்லது அவர் உயிருடன் ஒரு ஆயுத வியாபாரியாக, உலகக்குற்றவாளியாக நீடிக்கிறாரா எனும் ஒரு முடிச்சையும் (படத்தின் இரண்டாம் பாகத்திற்காக) இயக்குநர் வைக்கிறார்.
இப்படி படம் முடியும் போது நமக்கு அதிருப்தியே எஞ்சுகிறது. ஓன்று துல்கர் சல்மான் “ஜோஜி”, “கும்பளாங்கி நைட்ஸ்” படங்களில் பகத் பாஸில் செய்தது போல முழுமையான எதிர்நாயகன் / வில்லன் பாத்திரமாக இதை ஏற்று நடித்திருக்க வேண்டும். அல்லது இயக்குநர் குறுப்பின் பாத்திரத்தை ஒரு சரியான எதிர்-நாயகனாக உருவாக்கி இருக்க வேண்டும்.
எதிர்-நாயகனுக்கு ஒரு பச்சாதாபமான பின்கதை அவசியம். அங்கிருந்து அவன் மெல்ல மெல்ல குற்றங்களை நோக்கி தன்னுடைய பிழையான வாழ்க்கைப் பார்வை காரணமாக செல்வதாகக் காட்ட வேண்டும். தன்னுடைய பாத்திர வழுவை அவன் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு வருந்தி அதே நேரம் தன்னால் மீள முடியாதபடிக்கு குற்றத்தின் சகதியில் ஆழமாக சிக்கிக்கொண்டிருப்பதையும் காட்ட வேண்டும். இறுதியாக அவன் வீழ்ச்சியுடன் முடிக்க வேண்டும். இப்படி எதிர்நாயக பாத்திரத்தை அரிஸ்டாட்டில் தனது “கவிதையியல்” நூலில் வரையறுக்கிறார். இந்த இலக்கணப்படி அமைக்கப்பட்ட எதிர்நாயக படங்கள் வெற்றி பெற்றுவிடும் என்பது வரலாறு.
செல்வராகவனின் “காதல் கொண்டேன்” இதற்கு சிறந்த உதாரணம். அப்படத்தில் தனுஷின் பாத்திரமான வினோத் தன் ஒருதலைக் காதலிக்காக நிறைய கொலைகளை செய்வான், ஆனால் அவன் இறுதியில் தனது காதலி அவள் விரும்புகிறவனுடன் வாழட்டும் என்று விட்டுக்கொடுத்து தன்னை மாய்த்துக்கொள்ளும் இடத்தில் தியாகியாகி எதிர்நாயகனில் இருந்து நாயகனாகி விடுவான். ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள், தஸ்தாவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” இவ்வகை பாத்திர படைப்புக்கு பிற உதாரணங்கள். இதில் சிறிது பிசகினாலே ஒன்று பார்வையாளர்களுக்கு அப்பாத்திரம் மீது வெறுப்பு வரும் அல்லது “குறுப்பில்” நடப்பது போல குழப்பம் ஏற்படும். செல்வராகவனின் “புதுப்பேட்டை” என்னதான் அற்புதமான படம் என்றாலும் அதன் எதிர்-நாயக பாத்திரப் படைப்பில் ஒரு பிழை உண்டு - கொக்கி குமார் மீது நமக்கு ஏற்படும் பச்சாதாபம் ஒரு கட்டத்தில் மறைந்து நாம் அவனை வெறுக்கத் தொடங்குகிறோம். அவன் தன் மகனை இழக்கும் காட்சியில் அந்த பச்சாதாபம் மீண்டும் தோன்றுகிறது, ஆனால் அவனுடைய இரக்கமற்ற சுபாவம் மீண்டும் எட்டிப் பார்க்க அவன் எதிர்நாயகனா வில்லனா என நாம் குழம்புகிறோம். அவன் தன் பிறழ்வை உணர்கிறானா, தனக்குள் போராடுகிறான என செல்வராகவன் காட்டாமல் படத்தை ஒரு அரசியல் பகடியாக முடித்து விடுகிறார். “புதுப்பேட்டை” வணிக அளவில் தோல்வி அடைந்ததற்கு இந்த பாத்திர வளர்ச்சியில் ஏற்பட்ட பிழையும் ஒரு காரணமாக இருக்கலாம். “ஜோஜியில்” இந்த எதிர்நாயக குணாதசியத்தை துல்லியமாக கையாண்டிருந்தார்கள். ஜோஜியின் வீழ்ச்சி, அவனுக்கு கிடைக்கும் தற்கொலைக்கு முயல்வது ஆகியன அவன் மீது ஒருவித மென்மையான பிரியத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது, அவன் தன்னை இறுதி வரை அறிவது இல்லையென்றாலும் கூட. “குறுப்” அவ்விதத்தில் சொதப்பி உள்ளது!