இந்த ஆண்டு எனக்கு சற்று கூடுதல் தெளிவு மனிதர்களைப் பற்றி கிடைத்திருக்கிறது. அது என் வாசிப்பிலும் அனுபவத்திலும் இருந்து கிட்டியது.
நாமே தேடிச் செல்லாவிட்டாலும் துன்பம் வரும் போது கூடவே உதவிக்கு நண்பர்களும் வருவார்கள் எனும் இதமான நம்பிக்கையும் கிடைத்தது.
பெங்களூருக்கு வந்த பிறகு பலவிதமான நண்பர்களை, வாசகர்களை, மனிதர்களை சந்தித்து அளவளாவுவது வெகுவாக குறைந்து போனாலும் நிறைய வாசித்திருக்கிறேன். குறிப்பாக தத்துவத்திலும் இலக்கியத்திலும். அந்த விதத்தில் மகிழ்ச்சி. புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வது எப்போதும் தித்திப்பானது அல்லவா! கூடவே ஒரு பிரச்சனையை தர்க்கரீதியாக பகுப்பாய்வு செய்ய தத்துவ வாசிப்பு உதவியுள்ளது. இலக்கியத்தில் ஐரோப்பிய, அமெரிக்க, பின்நவீன இலக்கியம் நோக்கி கவனத்தை செலுத்தினேன். இதை அடுத்து, கதைத்தொழில் நுட்பம் சார்ந்து நிறைய வாசித்தேன், சிந்தித்தேன்; இயன்றால் அடுத்த வருடத்திற்குள் நாவல், திரைக்கதை ஆகிய வடிவங்களின் கதைத்தொழில் நுட்பத்தை விளக்குகிற புத்தகங்களை எழுதுவேன். அதே போல 2022-23 ஆண்டுகளில், அமெரிக்க பல்கலைகளில் உள்ள BFA in Creative Writing பாணியில் நாவல், சிறுகதை, திரைக்கதை ஆகியவற்றை எழுதப் பயிற்சியளிக்கும் பாடத்திட்டங்களை உருவாக்கி (கல்லூரியில்) கற்பிக்கும் திட்டமும் உள்ளது.
இதுவரை உணர்ச்சிகரமாகவும், கருத்து, மனவோட்டம் சார்ந்தும் மட்டுமே கதைகளைப் பார்த்து வந்த எனக்கு இப்படி புறவயமாக பார்ப்பது, பரிசீலிப்பது ஜாலியாக இருக்கிறது. கதைகளை வடிவம் சார்ந்து புரிந்து கொள்ளும், திட்டமிடும் திறனை இது எனக்கு அளித்துள்ளது. நான் எழுதிக் கைவிட்ட நாவல்களில் செய்த தவறுகள் என்ன, எழுதி வரும் நாவலில் செய்ய வேண்டிய திருத்தங்கள் என்னவென யோசிக்கிற பக்குவம் கிடைத்திருக்கிறது.
பெங்களூருக்கு வந்த பின்னர் முன்பை விட அதிகமாக எழுதி இருக்கிறேன். விசித்திரமாக, வாழ்க்கையில் குறைவான மகிழ்ச்சியுடன், அதிருப்தியுடன், அதிக தனிமையில் இருந்தாலும் என் வாசிப்பு, எழுத்து செயல்பாடுகள் மேம்பட்டிருக்கின்றன.
இந்த வருடம் லாக் டவுன் காரணமாகவும், உடலை கவனிப்பதில் அக்கறை காட்டாததாலும் நிறைய எடை போட்டு விட்டேன். இப்போது எழுதி வரும் நாவலை முடித்து விட்டு உடலை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வருட துவக்கத்தில் வாழ்வதில் சற்றும் அக்கறை இல்லாமல் இருந்தேன். எழுத்து மட்டுமே என்னை தொடர்ந்து செலுத்தியது. அந்த அவநம்பிக்கை சட்டென ஒரு நாள் போய் விட்டது. நம்பிக்கைகளின் ஊற்று பெருகியது. எல்லாம் ஷண நேரத்தில் தோன்றி மறைவது எனக் கற்றுக் கொண்டேன். அந்தந்த நேரத்தில் எப்படி ஒன்றிருக்கிறதோ அதைத் தாண்டி அதற்கு மதிப்போ நீடிக்கிற தன்மையோ இல்லை எனப் புரிந்து கொண்டேன். சுதந்திரம் என்பது அன்றன்றைக்குள், அந்தந்த மணிப்பொழுதுகளுக்குள் புழங்குவது மட்டுமே.
எதிர்காலம் குறித்து கனவு காணலாம். ஆனால் அது ஒரு கிளுகிளுப்பாக ஆறுதலுக்காக மட்டுமே. நம்மால் செய்ய முடிவதெல்லாம் அன்றாடத்தை அர்த்தபூர்வமாக வைத்துக் கொள்வது மட்டுமே. அதுவே நாமும் நம்மைச் சுற்றியுள்ளோரும் சமூகமும் உருவாக்கித் தரும் சட்டகத்தினுள் இருந்தபடி, தரப்பட்ட பாத்திரத்துக்குள் சரியாக நடித்தபடி மட்டுமே சாத்தியம்.
இந்த உலகம் ஒரு மிகப்பெரிய புனைவு என்றால் அதனுள் சின்னச் சின்ன கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்து சரிவர பொருந்திக் கொள்வது மட்டுமே நம்மால் செய்ய முடிந்தது. அப்போதும் கதை என்ன, அதன் அமைப்பு, போக்கு, எந்த கடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொண்டு இயங்கினால், நமதான ஒரு அர்த்தத்தை அதற்கு கொடுக்கவும் முடிந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட நடிப்பவரோ காட்சியை அமைப்பவரோ சொதப்பினால் கூட நாம் மேடைக்கு வெளியே தூக்கி வீசப்படுவோம். அப்போது மற்றொரு கதையை நாடிச் சென்று விட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு உட்பட்ட நிகழ்த்து கலை எனும் புரிதல் அவசியம் என நினைக்கிறேன்.
இதைத் தாண்டி எவருக்கும், எதற்கும் மதிப்பில்லை.
இது நான் கண்டடைந்த மற்றொரு புரிதல்.
வரும் ஆண்டும் நமக்கு சிறப்பாக அமையட்டும். கொண்டாடுவோம்!