விராத் கோலி ஒரு மகத்தான டெஸ்ட் தலைவர். டெஸ்ட் அணித்தலைமையில் இருந்து விலகுவதாக அவர் எடுத்திருக்கிற இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது! ஒரு விதத்தில் இதற்கு ஜெய் ஷா உள்ளிட்ட மோசமான நிர்வாகிகள் தாம் பொறுப்பேற்க வேண்டும்.
கோலி தன் முடிவை மாற்றிக் கொள்வார் என நான் நம்பவில்லை ஆகையால் அடுத்த தலைவர் யாரென தேர்வாளர்கள் சிந்திக்க வேண்டும். ரோஹித் அடிக்கடி காயம்பெற்று காணாமல் போய் விடுவதால் அவரை அனைத்து வடிவங்களுக்கும் தலைவராக்குவது சமயோஜிதமான முடிவு அல்ல.
அதே நேரம் கெ.எல் ராகுலின் அணித்தலைமையும் என்க்குப் பிடிக்கவில்லை. ராகுல் இன்ஸமாம் உல் ஹக்கைப் போன்றவர். சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் இயல்பான தலைமைப் பண்போ, நடைமுறை புத்திசாலித்தனமோ அனைவரிடமும் நன்றாகப் பேசி உற்சாகப்படுத்தும் இயல்பு கொண்டவரோ அல்ல. அவர் திட்டமிடுதலில் மக்கு என்பதை ஐ.பி.எல்லில் கண்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவர் தலைமை ஏற்ற போது அவருக்கு அணியை தன் சொல்லுக்கு ஏற்ப வழிநடத்தும் ஆளுமையோ சந்தர்பத்துக்கு ஏற்ப யுக்தி வகுக்கும் தந்திரமோ இல்லை எனக் கண்டோம். அவருடைய தலைமை ஸ்டைல் இங்கிலாந்தின் ரூட்டைப் போன்றது. ரூட் எவ்வளவு மட்டமான தலைவர் என நமக்குத் தெரியும். ஒரு தலைவர் தோல்வியை தவிர்க்க நினைக்கலாம், ஆனால் சதா தோல்வியை எண்ணி பயந்தபடி களத்தடுப்பை அமைப்பது மோசமானது. ராகுலை நம்பி அணியை ஒப்படைப்பது நிம்மி அக்காவை நிதியமைச்சராக்கியதைப் போன்றது.
ராகுலை மறந்து விட்டு ரிஷப் பண்டை ஒருநாள் வடிவில் துணைத் தலைவராக்க வேண்டும். ரிஷப் வியூகம் வகுப்பதில் திறமையானவர் அல்ல, ஆனால் அணியிடம் சரியாக தன் முடிவுகளைக் கொண்டு சென்று அனைவரிடமும் கலகலப்பாக பழகி உற்சாகப்படுத்த அறிந்தவர். ராகுல் ஒரு introvert என்றால் ரிஷப் ஒரு extrovert. தலைவர்களைப் பொறுத்தமட்டில் extrovertகளே தோதானவர்கள்.
டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினையோ பும்ராவையோ தலைவராக்கலாம். இருவரில் அஷ்வினே மேலானவர் என்றாலும் அணிக்குள் அவருக்கு எந்தளவுக்கு ஆதரவிருக்கும் எனத் தெரியவில்லை. பொதுவாகவே தமிழர்களை இந்திய அணி நேசிப்பதில்லை. அதுவும் வாயாடித் தமிழர்களை. மற்றொரு சிக்கல் அஷ்வினால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆட முடியும் என்பது.
ரோஹித் இப்போதைக்கு ஒருநாள் வடிவில் மட்டும் தலைமை தாங்கி சாதிக்கும் பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளில் அவர் குறைவாக ஆடி ஒருநாள் வடிவில் அதிகம் ஆட வைத்தால், அவரது உடற்தகுதி மேம்படும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பார்.