வரலாற்றை எழுதுவது குறித்த பார்வையில் கடந்த 50-60 ஆண்டுகளுக்கு மேலாக உலக அரங்கில் முக்கியமான ஒரு மாற்றம் வந்துள்ளது. வெறும் தரவுகளை தமக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து எழுதப்பட்டதே நமது வரலாறு, அது மட்டும் நிஜவரலாறு அல்ல. வரலாறானது தினம் தினம் மக்கள் மத்தியில் நிகழ்ந்து மலர்ந்துமாறு இருக்கிறது. வரலாற்றை எழுதுவதில் நாட்டார் வழக்குகள், தொல்கதைகள், மக்களின் நினைவுக் குறிப்புகளுக்கு, நமது கற்பனைக்கு ஒரு முக்கியமான இடமிருக்கலாம் என்று இன்று கருதப்படுகிறது. இந்த கோணத்தில் இருந்து நுண்கதையாடல்களின் கண்டடைதலாக வரலாறு மாறி வருகிறது. ஒரு புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையில் வரலாறு தோன்ற முடியும், ஏனென்றால் புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளி போலியானது, ஏனென்றால் தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான தூரம் வெறும் தோற்றப்பிழை என்கிற இடத்துக்கு பின்நவீன சிந்தனை நம்மை கொண்டு வந்துள்ளது.
Conjecture எனப்படும் அனுமானத்துக்கு நமது வரலாற்றை கட்டமைப்பதில் ஒரு முக்கியம் இடமுண்டு. இதை தமிழில் அன்றே மிகச்சிறப்பாக பயன்படுத்தி முக்கியமான பனுவல்களை உருவாக்கியவர் அயோத்திதாசர்.
ஏகப்பட்ட தரவுகளை போகிற போக்கில் மேற்கோள் காட்டினாலும் அவற்றுக்குள் அடங்காத கருத்துக்களை ஜீ பூம்பா என கையை சுழற்றி வெளியே எடுக்கிற போக்கை நீங்கள் பூக்கோவிடமே காண முடியும். நீட்சே, லகான், டெலூஸ், ஹைடெக்கர் என பல முக்கியமான சிந்தனையாளர்களும் அயோத்திதாசரின் பாணியில் எழுதியவர்களே. நமது தமிழில் இன்று சிலர் செய்வதைப் போல அவர்களிடம் யாரும் போய் எங்கே சான்றுகள், ஆவணங்கள் என்று லத்தியால் தட்டி கேட்பதில்லை. அவர்களுக்கு மொழியின் நுட்பத்துக்கும் நமது இருப்புக்குமான தொடர்பு பற்றி தெரியும். பகுத்தறிவு வாதம் மிக பலவீனமான ஒரு கருவி என்றும் தெரியும். நமது எதார்த்தவாத எழுத்தின் தொடர்ச்சியாக தமிழில் இன்று சிந்திக்கும் சில எழுத்தாள மூளைகளுக்கு மட்டும் அது இன்னும் புரியவில்லை. ஏனென்றால் அவர்கள் சமகாலத்தில் எழுதப்படும் பண்பாட்டு, உளவியல், கோட்பாட்டு ஆய்வுகளை படிப்பதில்லை. அவர்கள் காந்தியையும் ஜெயமோகனையும் தாண்டி யோசிப்பதில்லை.
அடுத்து, ஈழப்போரின் போது என்ன நடந்தது என்பதை ஒரு மரபார்ந்த வரலாற்றாய்வாளர் புள்ளிவிபரங்களையும், அரசு ஆவணங்களையும் வைத்து மட்டுமே புறவயமாக சித்தரிக்க முடியும். ஆனால் அங்கு அப்போது வாழ்ந்த பலதரப்பட்ட மக்களிடம் பேசும் போது இந்த புறவய சித்திரத்துக்கு நேரெதிரான, அல்லது தொடர்பற்ற பல முரணான கதையாடல்களை நாம் பெற முடியும். மரபான வரலாறு அவற்றை மிகை என்றோ பிரமை என்றோ நிராகரிக்கும், ஆனால் பின்நவீன வரலாற்றியல் அந்த கதையாடலுக்கே முக்கியத்துவம் அளிக்கும். அதாவது யானையின் பார்வையில் இருந்து காட்டைப் பார்ப்பது மரபான வரலாறு, எறும்புகள், ஈக்கள், புழுக்களின் பார்வையில் இருந்து நோக்குவது இன்றைய வரலாறு.
இதற்கு அடுத்ததாக, இன்றைய வரலாற்றெழுத்தில் தர்க்க ரீதியான, தகவல்பூர்வமான நேரடியான மொழிக்கு முக்கியத்துவம் குறைவு. சற்று புனைவுத்தன்மையுடன், உருவகங்களுடன் பேசுவதன் வழி உண்மையை நோக்கி கூடுதலான தூரம் பயணிக்க முடியும் என அது நம்புகிறது. அயோத்தி தாசரை நமக்கு இன்று படிக்கையில் அவருடைய மொழியில் உள்ள விளையாட்டுத்தனம், கவித்துவம் முக்கியம் என்று படுகிறது. நமது கலாச்சாரத்தின் அரசியலை, அந்த அரசியலின் வரலாற்றை அவர் ஒரு நிரூபணம்-கருதுகோள் எனும் முறைமையை கொண்டு பேசியிருக்க முடியாது. மேலும், நாட்டார் பௌத்தம் என அவர் தனது செயற்பாடுகளின் வழியாகவும், வேர்ச்சொல் ஆய்வு வழியாகவும் கண்டறிந்தது நமது மொழியின் பிரக்ஞையாக விளங்கும் ஒரு எதிரோட்டத்தை. அந்த எதிரோட்டத்தை நீங்கள் தரவுகளின் வழி காட்ட முடியாது, அது உங்கள் கற்பனையின், நுண்ணுணர்வின் வழியாக மட்டுமே காண முடியும். அநேகமாக நீட்சே இப்படியான ஒரு மொழியில் தான் கிறித்துவத்தையும், அவர் காலத்து அரிஸ்டாட்டியலாளர்களையும், அறிவியல் ஆதரவாளர்களை விமர்சித்தார். அயோத்திதாசர் புத்தரை புனைந்ததைப் போன்றே நீட்சேயும் கர்த்தரை ஜாருதுஷ்டிரனாக, அதிமனிதனாக புனைந்தார். அதை நேரடியாக பொருள் கொள்ள முயன்றால் வேடிக்கையாகவே இருக்கும், ஆனால் சரியான விதத்தில் பார்த்தால் அதன் ஆழம் விளங்கும்.
தமிழில் இதை விளக்குவதற்காக தொடர்ந்து முயன்று வருபவர் பேராசிரிய டி. தருமராஜ். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் எதையும் படிக்காதவர்களிடம் உரையாட வேண்டி வருகிறது. அவர் ‘அ’ என்றால் இவர்கள் ‘உ’ என்று புரிந்து கொள்ளுகிறார்கள். வைதீக இந்துமத ஆதரவாளர்கள் புனைந்தது பொய்க் கதையாடல்கள் என்றால் அயோத்தி தாசரும் அதைத்தானே செய்கிறார் என்கிறார்கள் அவர்கள். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் வைதீகத்தை இவர்கள் அயோத்திதாசரை நாம் உள்ளே கொண்டு வரும் வரை விமர்சிக்கவே மாட்டார்கள். “நாங்கள் வைதீகத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் எதிர்க்கவும் இல்லை” என ஒரு மாதிரி சூர்யா நாயகிகளின் இடுப்பை தொட்டும் தொடாமல் டூயட் பாடுவதை போல இந்துமதத்துடன் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருப்பார்கள். அதனாலே தருமராஜ் இவர்களை திராவிடர்கள் என்று அழைக்கிறார். தருமராஜ் திராவிடர்கள் எனக் குறிப்பிடுவது ஒன்றே குலம் ‘அண்ணாயிஸ்டுகளையே’. இவர்களுக்கு அதுவும் புரியவில்லை. அதை நேரடியாக எடுத்துக் கொண்டு “பாஸ் நாங்க திமுக” இல்லை என்று பதில் சொல்லுகிறார்கள். ப்ளீஸ் ஒரு கத்தியால் என்னைக் குத்துங்க, ஆனால் இப்படி மறைபொருள் தெரியாதவர்களாக இருந்து சாவடிக்காதீங்க.
அப்புறம், வரலாற்றில் பொய்-உண்மை எனும் இருமைக்கு இனி எந்த மதிப்பும் இல்லை. நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் அது தான். ஏனென்றால் அந்த இருமையை நீங்கள் முன்னிறுத்தும் போது கூடவே ஒரு அதிகார படிநிலையையும் தான் முன்னிறுத்துகிறீர்கள். அது ஆபத்தானது.
புத்தர் ஆதியந்தமான கடவுள் என்றோ, பௌத்தமே இங்கு முதலில் தோன்றிய கடவுள் என்பதோ அயோத்திதாசரின் கருதுகோள் அல்ல. பார்ப்பனியத்தின் நகலாக்கத்தை அவர் அம்பலப்படுத்துகிறார். ஆரியர்கள் புதிதாக ஒன்றை உருவாக்காமல் ஏற்கனவே உள்ள கருத்துக்கள், தொன்மங்களை சற்றே தமக்கு ஏற்றபடி மாற்றி, அசலாக இருந்ததை மற்றமையாக்கி விடுகிறார்கள் என்றே அவர் சொல்லுகிறார். அதுவே வேஷபிராமணர் என ஆரியரை அவர் அழைப்பதற்கான காரணம்.
இந்த நகலாக்கமானது அதிகார மையங்களின் தந்திரமாகவே இன்றும் இருக்கிறது. அதே சமயம் ஒன்றை திரும்ப பகடி செய்து நகலாக்கத்தில் ஈடுபடுவது ஒரு எதிர்-அதிகார முயற்சியாகிறது. கடவுள் இல்லை என்பதை விட கடவுளின் பொருள் வேறு என அதே மொழியில் ஒரு நகலாக ஒரு மாற்றை உருவாக்கிக் காட்டுவது ஒரு கலகமாகிறது. நமது அன்றாட செயல்பாடுகளிலே இப்படியான நகலாக்க முயற்சிகள் உண்டு என டெலூஸ் கூறுகிறார். எல்லாரும் சேலை கட்டிக்கொண்டு போகிற இடத்தில் ஒரு பெண் சற்றே வித்தியாசமாக சேலை அணிந்தபடி செல்வாள். அந்த வித்தியாசம் பலருக்கும் புலப்படாது. எல்லாரும் புன்னகைக்கிற போது ஒருவர் சற்று மாறுபட்டு புன்முறுவல் செய்வார். அந்த போலச் செய்தலுக்கும் அதில் தோன்றும் மாறுபாட்டுக்கும் நடுவே வரும் இடைவெளியிலே நமது இருத்தல் சாத்தியமாகிறது என டெலூஸ் சொல்லுகிறார். புத்தரை நாம் திரும்பத் திரும்ப போல செய்கிறோம். அதிகார வர்க்கம் அதில் ஒரு அசல் உள்ளதாக நம்மை நம்ப வைக்கிறது. ஆனால் நாம் போலச்செய்வதில் சின்னச்சின்ன படைப்பூக்கமான மாறுதல்கள் வருகின்றன, அதுவே அதுவே நமது நாட்டார் பண்பாடு என அயோத்திதாசர் அறிந்திருந்தார். அவர் சொல்லுகிற புத்தர் நாம் வரலாற்றில் படிக்கிற புத்தர் அல்ல. அதனாலே வேதகாலத்துக்கு முன்பே புத்தர் இருந்தார் என அவர் சொல்ல வருகிறார். அயோத்தி தாசர் மட்டுமல்ல அம்பேத்கர் புத்தரைப் பற்றி எழுதிய நூலிலும் (“புத்தரும் அவரது தம்மமும்”) புத்தரின் வாழ்க்கையை முழுக்க தொல்கதைகள், கற்பனையின் வழியே கட்டமைக்கிறார். அவ்வாறே அவர் மக்களின் அன்றாட வாழ்வில் சாத்தியமாகிற நவபௌத்தத்தை முன்வைத்தார். அயோத்திதாசரை அறிந்திருக்காத அம்பேத்கர், தர்க்கரீதியாக மட்டுமே எப்போதும் எழுதி வந்த அம்பேத்கர், பௌத்தத்தை வரையறுக்கும் நூலில் ஒரு புதிய மொழியை அயோத்தி தாசரின் சாயல் கொண்ட ஒரு மொழியை முதற்பாதி புத்தகத்தில் பயன்படுத்தியதை நினைத்தால் ஆச்சரியமாகிறது. ஒருவேளை அவ்வாறே இங்குள்ள சூழலில் பௌத்தத்தை பார்க்க வேண்டும் என அவரும் அயோத்திதாசரைப் போன்று நம்பியிருக்கலாம்.
கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக பின்நவீன சிந்தனையாளர்கள் தமிழில் காத்திரமாக மும்முரமாக செயல்படவில்லை. முக்கியமான கோட்பாட்டு நூல்களின் அறிமுகமோ மொழியாக்கம் இங்கு பெரிதாக நடைபெறவில்லை. அது இங்கே ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் விளைவே டி. தர்மராஜ் இவ்வளவு தவறாக புரிந்து கொள்ளப்படுவதும், “மூன்றாம் பிறை” ஶ்ரீதேவியிடம் கமல் பேசுவதைப் போல அவர் திரும்ப இவர்களை கையாள்வதும். என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?