நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் சொல் “உருட்டு” என்றும், அநேகமாக எல்லாவித சந்தர்பங்களுக்கும் மரமண்டைத்தனமாக அச்சொல்லை நாம் பயன்படுத்துகிறோம் என அண்மையில் மனுஷ் ஒரு கவிதையில் கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் நிச்சயமாக இச்சொல்லின் பயன்பாடு அதிகரித்துள்ளது உண்மையே. ஆனால் அதற்கான தேவையும் ஏற்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களின் வருகை இன்று எல்லா விசயங்களை நோக்கியும் கருத்து கூறும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. பிரபலங்கள், அதிகாரவர்க்கத்தினர் மனம் திறந்து பேசினால் அது உடனே சர்ச்சையாகிறது. ஏனென்றால் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் அதை கிழித்து தொங்க போட்டு விடுகிறார்கள். இது ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி இருக்கிறது. எல்லாரையும் மனதுக்குப் பட்டதை விட யாரும் புண்படாத வகையான கருத்துக்களையே சொல்லுகிறார்கள். அப்படி ஒரு கருத்து எங்கும் இல்லை என்பதால் நேரடியான பதில்களை தவிர்த்து “உருட்டுகிறார்கள்”. உருட்டுதல் என்பது ஒரு பொருள் “சம்மந்தமில்லாமல் பொத்தாம்பொதுவாக பேசுவது.” நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், ஊடக நெறியாளர்கள் என எல்லாருமே உருட்டிக் கொண்டே போகிறார்கள்.
உருட்டுவதன் மற்றொரு அர்த்தம் தவறு நம் மீது இருக்கும் போதும் அதை ஏற்காமல் வெற்றாய் நியாயப்படுத்துவது. சும்மா எதையாவது சொல்லி தான் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டிக் கொள்வது. அமைச்சர்கள், கட்சியின் ஊடக பிரதிநிதிகள் போன்றோர் இதை அதிகமாக செய்கிறார்கள்.
இப்படி இருவிதமான உருட்டல்களுக்கும் காரணமே நாம் என்கிற போதும், அதிகமாக சமூகவலைதளங்களில் உருட்டுவதும் நாம் தான். ஒரே வித்தியாசம் சமூகவலைதளத்தில் ஒரு பொதுவான போக்கு உருவாகும் போது அதன் திசையில் அங்கபிரதட்சணம் செய்வது போல உருள்வதே நமது வழக்கம். ஒரு பக்கம் மற்றவர்கள் உருட்டும் போது அவர்களைக் கிழிக்கிற நாமே நம்மை பிறர் தப்பாக நினைக்கக் கூடாது எனும் எண்ணி உருள்கிறோம்.
உருட்டுவதன் இன்னொரு வகைமை ஒரு மோசமான விசயத்தை வெல்லத்தில் முக்கி அது மிகவும் சிறந்தது என மிகைக்கப்படுத்தி காட்டுவது. அதாவது ஒவ்வொரு வினாடியையும் பாஸிட்டிவ்வாக “வாவ் சூப்பர் சூப்பர்” என்று பாராட்டிக் கொண்டு செல்வது. இன்று ஊடகங்களில் நெறியாளர்கள், தொகுப்பாளர்கள், வர்ணனையாளர்களாக உள்ளவர்கள் இதை அதிகமாக செய்கிறார்கள். மிக சலிப்பான ஒரு நிகழ்ச்சியை அவர்கள் சுவாரஸ்யமானதாக்க இப்படி கிடந்து உருள்கிறார்கள். மிக அலுப்பான ஒரு போட்டியை முன்பு வர்ணனை செய்தவர்கள் தமது மனநிலையை வெளிக்காட்ட தயங்கியதில்லை. ஜெப்ரி பாய்கட், கவாஸ்கர், சேப்பல் போன்றோர் அப்படி வெளிப்படையாக இருந்தார்கள். ஆனால் இன்றைய வர்ணனையாளர்கள் அப்படி நேர்மையாக இருக்க அஞ்சுகிறார்கள் - எங்கே பார்வையாளர்கள் சேனலை மாற்றி விடுவார்களோ எனும் பயம். அது அவர்களை சியர் கெர்ள்ஸாக மாற்றி விடுகிறது.
இந்த உருட்டை ஊடகங்களில், சமூகவலைதளத்தில் மட்டுமல்ல நேர் வாழ்க்கையிலும் தான் செய்கிறோம். முன்பு இல்லாதளவுக்கு நாம் எல்லாரிடம் “ஹவ் ஆர் யூ” என்று வினவுகிறோம். கேட்கப்பட்டவர்கள் கடும் ஜுரத்தில் இருந்தால் கூட “நல்லா இருக்கேன்” என்கிறார். கேட்கிறவர் கடும் மனச்சோர்வில் இருந்தால் கூட “நானும் நல்லா இருக்கேன்” என்கிறார்கள். மிக மோசமான செய்தியைக் கேட்டால் கூட முகத்தில் ஒரு புன்னகையை வருவித்துக் கொண்டு “நோ பிறாப்ளம்” என்கிறார்கள், உள்ளுக்குள் அழுதபடியே. நாம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறோம், உண்மையை நம் உடல்மொழியிலோ பேச்சிலோ காட்டினால் வேலைக்கு ஆபத்தாகி என அஞ்சுகிறோம்.
இன்னொரு பக்கம், விமர்சிப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள், வாதிடுபவர்களை நாம் எல்லா இடங்களிலும் வெறுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஏனென்றால் ஒரு சிறிய எதிர்கேள்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கூருணர்வு மிக்கவர்களாகி விட்டோம். நம்மை சதா பிறர் புகழ்ந்தபடியே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். பத்து நிமிடம் நம்மை யாராவது புகழாவிடில் கூட பதற்றமாகி சுற்றுமுற்றும் பார்க்கிறோம். யாரிடமாவது போய் இளித்துக் கொண்டு “ஹவ் ஆர் யு?” என்று நிற்கிறோம். சுயபிம்ப நிர்வாகத்தில் இந்தளவுக்கு பிரக்ஞையுடன் நாம் முன்பு இருந்ததில்லை.
இந்த மனநிலை வேலையிடத்தில் என்றில்லை சாலையில் போகும் போது, நமது குடியிருப்பில் அண்டை வீட்டாரிடம் பேசும் போது கூட வெளிப்படுகிறது. வெறுமை, கடன் தொல்லை, மனைவி / கணவனுடன் பிரச்சனை என பல அழுத்தங்கள் இருக்கும். வீட்டில் பெரிய சண்டை நடந்திருக்கும், யாரோ தூக்கு மாட்ட முயன்று நீங்கள் காப்பாற்றி இருப்பீர்கள். ஆனால் வெளியே வந்ததும் அண்டை வீட்டுக்காரரைப் பார்த்ததும் “ஹலோ ஹவ் ஆர் யு? ஐ ஆம் பைன்” என ஆரம்பித்து விடுவீர்கள். கோபத்தை காட்ட, ஒரு துளி கண்ணீர் விட நாம் இப்போது போல வேறெப்போதும் அஞ்சியதில்லை. கக்கூஸில் இருக்கையில் தவிர வேறில்லா இடங்களிலும் இந்த உருட்டு நம்மை இளிச்சவாயன்களாக்கி விட்டது.
இன்று உலகில் உருட்டாமல் இருக்கிற ஒரே இனம் வலதுசாரிகள் தாம். அவர்களுக்கு தமக்கு கெட்ட பெயர் ஏற்படுவது பற்றி, தம்மை வெறுப்பாளர்கள், குறுகின எண்ணம் படைத்தவர்கள், பிரிவினைவாதிகள், அடிமுட்டாள்கள் என்று யார் நினைத்தாலும் கவலையில்ல. அமெரிக்காவில் டிரம்பின் கட்சியினரில் இருந்து பாஜகவினர் வரை பாருங்கள். எப்போதாவது தமது தவறுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? போர்ன் காணொலியை பார்த்தாக மாட்டிக் கொண்ட வலதுசாரி எம்.எல்.ஏக்கள் தம்மை நியாயப்படுத்த முயன்றதில்லை. கே.டி ராகவன் எவ்வளவு தான் அசிங்கப்பட்டாலும் கடைசி வரை “உருட்டவில்லை”. எவ்வளவு டுரோல் செய்யப்பட்டாலும் மதுவந்தி தன்னை மாற்றிக் கொள்வதில்லை. தமது எத்தனையோ பொய்கள், புரட்டுகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சங்கிகள் “உருட்டுவதில்லை” - சொன்ன பொய்யிலே, வெறுப்புவாத கருத்திலே ஊன்றி நிற்கிறார்கள்.
ஏன் அவர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை - ஒருவேளை உலகமே ஒரே சமயம் உருட்டுவதன் இயற்கையான எதிர்வினையாக இவர்கள் மட்டும் இன்னொரு எதிர்முனைக்குப் போய் வெட்கம் மானமற்று நடந்து கொள்கிறார்களா?
உருட்டின் எதிர்மை தான் துணிச்சலான புரட்டா?