“பிரேமம்” படம் குறித்து என்னுடைய மாணவர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் (film studiesஇன் பகுதியாக). “பிரேமம்” படத்தின் தாக்கம் அது வெளியான போது மாணவர்களிடம் எப்படி இருந்திருக்கிறது என்று ஆராயப் போகிறேன் என்றார். நான் அவரது ஆய்வு நோக்கில் ஒரு சிக்கல் உள்ளது என்றார். என்ன?
“பிரேமத்தில்” பாத்திரங்களின் (ஜார்ஜ் மற்றும் அவனது நண்பர்களின்) அனுபவம், எதார்த்தம் என ஒன்று இல்லை. ஜார்ஜ் துவக்கம் முதலே தான் சினிமாவில் பார்த்த ரொமாண்டிக் காட்சிகளை போலச் செய்ய முயல்கிறான். குறிப்பாக தொண்ணூறுகளில் வந்த மோகன் லாலின் படங்களை (“நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்” நேரடியாக குறிப்புணர்த்தப்படுகிறது.) அவன் எவ்வளவு ‘பைங்கிளியாக’ இருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காகவே படம் முழுக்க அங்கங்கே பட்டாம்பூச்சிகள் காட்டப்படுகின்றன. பட்டாம்பூச்சிகள் பற்றின ஒரு பகடியுடனே படம் முடியவும் செய்கிறது.
இப்படத்தின் நகைச்சுவை முழுக்கவே ஜார்ஜின் வாழ்க்கையில் சினிமாவுக்கு வெளியே உள்ள எதார்த்தம் அவனது சினிமா ரொமாண்டிசச்சிற்கு குறுக்கே வரும் போது தோன்றுவதே - முதற்காட்சியில் 16 வயதில் அவன் காதல் கடிதம் எழுதும் போது அவனது அம்மா “சாளை மீன் வாங்கட்டுமாடா?” என பின்னணியில் இருந்து கத்துவார். அவன் அதற்கு பதில் சொல்லிக் கொண்டே எழுதும் போது காதல் கடிதத்தில் மீனைப் பற்றி எழுதி விடுவார். அந்த காட்சி செமையானது. அதன் பிறகு தான் மோகன்லாலின் திரைப்படங்களில் ஒரு முக்கிய மாற்றம் வருகுறது - அவர் மீசையை முறுக்கிக் கொண்டு முரட்டுத்தனமான மாஸ் ஹீரோ, மிகை-ஆண்வெறி பாத்திரங்களில் நடிக்கிறார். “தேவாசுரம்”, “ஸ்படிகம்”, “நரசிம்ஸம்” “ஆறாம் தம்புரான்”, “ராவணப் பிரபு” போன்ற மோகன்லால் படங்கள் வந்து பெரும் வெற்றி பெறுகின்றன. இப்படங்களை ஜார்ஜ் பிரதிபலிக்கத் தொடங்குகிறான். அதுவும் ஜார்ஜ் வளர்ந்து கல்லூரிப் பருவத்தை எட்டும் போது “ஸ்படிகம்” கலாச்சாரம் உச்சம் பெறுகிறது. மீசை முறுக்கிய ஆடு தோமாவாக (“ஸ்படிகம்”) தன்னை கற்பித்துக் கொள்கிறார் அவன். ஆண் செருக்கு கொண்ட மோகன் லாலைப் போன்ற ரவுடியிஸம், முரட்டுத்தனம் என இருந்து கொள்ளலாம், காதல் தொல்லை எல்லாம் எதுக்கு என நினைக்கிறான் என்று சொல்வதை விட மோகன் லாலின் படங்களில் காணும் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறான் என்பதே துல்லியமாக இருக்கும். அவனுடைய வாழ்க்கை முழுக்க அப்படித்தான் இருக்கிறது. இங்கு மற்றொரு விசயத்தை கவனிக்க வேண்டும் - சினிமாவை பிரதிபலிப்பதற்கு அப்பால் மற்றொரு நடைமுறை எதார்த்தத்தை படம் நிகழ்கிற களமான அந்த ஆலுவா பகுதியில் உள்ள கிராமத்தில் இயக்குநர் காட்டுவதில்லை. ஏனென்றால் ஜார்ஜின் கண்ணோட்டத்தில் அப்படி ஒரு எதார்த்தமே இல்லை.
கல்லூரியில் படிக்கையில் மலர் டீச்சர் அவனுடைய வாழ்க்கைக்குள் வர ஒரு மாற்றம் ஏற்படுகிறது - ஆடு தோமாவில் இருந்து பழைய ரொமாண்டிக்கான ஹீரோக்களின் எதார்த்தத்துக்கு மாற அவன் தலைப்படுகிறான்.
பொதுவாகவே நிவின் பாலியின் நடிப்பில் மோகன்லாலின் தாக்கம் இருக்கும். இரண்டு வகையான மோகன் லால்கள் உண்டு - ஒன்று ரெண்டாயிரத்துக்குப் பிறகு அதிகம் பிரசித்தமான அடிதடி உதை, முறுக்கு மீசை மோகன் லால். மற்றொருவர் எண்பது, தொண்ணூறுகளின் மென்மையான, ரொமாண்டிக்கான, சிறிய தன்னிரக்கம் கொண்ட ஆணான மோகன்லால். இந்த படத்தில் நிவின் பாலியின் நடிப்பின் சிறப்பு என்னவென்றால் தனது ஆண்-செருக்கு அடாவடி உடல்மொழி ஒரு பாவனை தான் என அவர் அடிக்கடி உணர்த்தும்படியாக வெட்கப்பட்டு ஒரு சிரிப்பை உதிர்ப்பார். அதை ஒரு changeover தருணம் என்று சொல்லலாம் - அதாவது அடாவடியாக திமிராக ஒரு காட்சிக்குள் வரும் அவர் மற்றொரு மோகன்லாலை பிரதியெடுக்கும் முன் சட்டென வெட்கத்துடன் புன்னகைப்பார். அரை வினாடியில் இந்த மாற்றம் நிகழும். இது பெரும்பாலும் அவரது நண்பர்கள் அவரை கலாய்க்கும் போதே நிகழும். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும் ஜார்ஜின் நிஜமான ஆளுமை இதுவல்ல என்று, ஜார்ஜுக்கு நிஜமான ஆளுமை என ஒன்று இல்லையென, தமக்கே அப்படி ஒன்று இல்லை என.
மலர் டீச்சரை அவன் அவன் காதலிக்கும் போது ஒரு பீயுன் வந்து “உங்க டீச்சர் செம சரக்கில்லடா?” எனக் கேட்பார். அப்போது ஜார்ஜ் மீண்டும் மீசையை முறுக்கி அவரை கன்னத்தில் அறைந்து விட்டு “மாதா பிதா குரு தெய்வம், நினைவிருக்கட்டும்” என்று முறைப்பான். அவர் போய் விடுவார். உடனே அவனது நண்பர்கள் “அப்படியாடா நிஜமாகவே மலர் டீச்சரை அப்படித்தான் பார்க்கிறியா?” என கலாய்ப்பார்கள். அவன் தனது முறுக்கை தளர்த்திவிட்டு மீண்டும் “நமக்கு பார்க்கான்…” “சித்ரம்”, “கிலுக்கம்” மோகன்லால் ஆகி விடுவான்.
மலர் டீச்சர் அவன் வாழ்க்கைக்குள் வந்தவுடன் அவன் தமிழ் ரொமாண்டி படங்களின் உலகுக்குள்ளும் வந்து விழுகிறான். மலர் டீச்சருக்கு கடிதம் எழுதும் போது அவனது நண்பர்கள் “குணாவில்” இருந்து ஒரு பாடலை பாடுகிறார்கள். “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…”. அடுத்து ஊட்டிக்கு போகிற மலர் டீச்சருக்கு வாகன விபத்தாகிறது. தன் நினைவுகளை இழக்கிறார். இந்த பகுதியை பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறையில்” இருந்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எடுத்திருக்கிறார்.
ஜார்ஜைப் போன்றது தான் அபுதாபியில் இருந்து திரும்பி வந்ததாக கிராமத்தில் அரபியில் பேசி பெண்ணை கவர முயலும் “கிரிராஜன் கோழியின்” பாத்திரமும். அவன் பின்னர் ஜார்ஜ் ஒரு பேக்கரியை பெங்களூரில் நடத்தும் போது அங்கு ஒரு குதிரையில் வருவான். இந்த குதிரை அவன் ரொம்ப பழைய ஒரு ரொமாண்டிக் உலகில் இன்னும் வாழ்கிறான் என்பதை உணர்த்தி பகடி செய்வதற்காகவே. இவனுக்கும் ஜார்ஜுக்கும் ஒரே வித்தியாசம் இருவரின் மிகை-கற்பனை உலகங்களின் வரலாற்றுக் காலம் மட்டுமே. கிரிராஜன் இன்னும் சினிமா உலகுக்குள் வரவில்லை. அவன் மற்றொரு செவ்வியல் கற்பனாவாத எதார்த்தத்தை போலச் செய்கிறான் (டான் குவிக்ஸாட்டைப் போல).
ஜார்ஜின் வாழ்வின் மூன்றாவது கட்டத்தில், முப்பது வயதாகும் அவன் தன் தொழிலில் அக்கறையுடன் இருக்கிறான், பெண்களையும் பட்டாம்பூச்சிகளையும் மறந்துவிட்டு சற்று முதிர்ச்சியடைந்து விட்டதாக நமக்குத் தோன்றுகிறது. வருடம் 2015 என்பதால் மோகன் லால் வகையான படங்களும் காலாவதியாகி விட, அவன் ஒரு டிப்பிக்கல் 90கள், 2000த்தின் தலைமுறையின் பிரதிநிதியாக தன் இளமையை நிறைத்த சினிமாவுக்கு மேல் பயணிக்காமல் அத்துடனே நிறுத்திக் கொள்கிறான். ஆனால் இதுவும் ஒரு தோற்றம் மட்டுமே. ஒருநாள் இரவில் கேக் வாங்க செலின் எனும் இளம் பெண் அவன் கடைக்கு வருகிறாள். அடுத்து அவள் மீண்டும் அவன் கடைக்கு வரும் போது தானே அவன் முன்பு காதலித்த மேரியின் சிறிய தங்கை தான் என்று நினைவுபடுத்துகிறாள். அவன் உடனே ‘அவளிடம்’ காதல் வயப்படுகிறான். இல்லை, அவன் அவளிடம் காதல் வயப்படவில்லை. பதின் வயதில் சாத்தியமாகாமல் போன “நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்” எதார்த்தத்தின் மீது மீள்காதல் வயப்படுகிறான். சட்டென தன் இளமைக்குத் திரும்புகிறான். அவனுடைய உடல்மொழியில் ஒரு நுட்பமான மாற்றம் ஏற்படுகிறது; எண்பது, தொண்ணூறுகளின் ரொமாண்டிக்கான, மென்மையான மோகன் லாலிடம் அவன் மீள்கிறான். ஆனால் சட்டென அந்த காதலும் முடிந்து போகிறது. அவள் தனக்கு திருமண ஏற்பாடு ஆகியிருக்கிறது என்று சொல்லுகிறாள். அவன் மனம் உடைந்து போகிறது. எப்படி மேரியை காதலித்த போது ஏற்பட்ட ஏமாற்றத்தில் அவன் “ஸ்படிகம்” மோகன்லாலாக தன்னைக் கற்பித்துக் கொண்டு அந்த சினிமா எதார்த்தத்தை பிரதிபலிக்க முயன்றானோ அதே போலே இம்முறையும் செய்ய ஆரம்பிக்கிறான். ஆனால் இதனிடையே “அவளு வேண்ட்ரா இவளு வேண்ட்ரா” பாடல் வருகிறது. ஏனென்றால் இது பெண்களை சபிக்கிற “இவளுக இம்சை தாங்க முடியல” காலகட்டம் அல்லவா? இந்த பாடலில் அல்போன்ஸ் புத்திரன் ஒரு அழகான பரீட்சார்த்தமான விசயத்தை பண்ணி இருப்பார் - செலின் அந்த ஏழு வயது சிறிய பெண்ணாக ஜார்ஜுடன் சமகாலத்தில் கூடவே வருவாள். ஏன்?
ஏனென்றால் ஜார்ஜ் நினைவுகளை உண்டு வாழும் பிராணி. கண்முன் நிகழும் எதார்த்தம் அவனைத் தீண்டுவதில்லை. ஒன்று சினிமா எதார்த்தம் அல்லது கடந்த காலத்து ரொமாண்டிக்கான எதார்த்தம். செலினை அவன் வளர்ந்த பெண்ணாக பார்த்து காதலிக்கும் போது அவன் உபமனதில் அவள் அச்சிறு குழந்தையாகவும் கூடவே வந்தபடியே இருக்கிறாள். அது வேடிக்கையாகவும் அவனது சிக்கலைக் காட்டுவதாகவும் இருக்கிறது. அதாவது பிரச்சனை அவனை அவளுக்கு குழந்தையாகவே தெரியும் என்பதல்ல - அவனால் சமகால நடைமுறை எதார்த்தத்தில் மட்டுமே நிலைக்க முடியாது என்பதே.
அடுத்தடுத்து செலின் அவனிடம் திரும்ப வருகிறாள். ஆனால் அவளை அவமதித்த ரோனி வர்கீஸ் எனும் வரனை சரி கட்ட வேண்டும். அதனால் ஜார்ஜ் சற்று தாமதமாக ஆடு தோமாவாக ‘முண்டை’ மடித்துக் கட்டி முறுக்கின மீசையுடன் தன் நண்பர்களுடன் போய் உதைக்கிறான். கிளைமேக்ஸில் அல்போன்ஸ் புத்திரன் “ஆட்டோகிராப்” படத்தில் இருந்து ஒரு காட்சியை கொண்டு வருகிறார் (“குணா”, “மூன்றாம் பிறையின்” நீட்சியாக).
படம் முடியும் போது ஜார்ஜ் முழுக்க மீண்டு விட்டான், முதிர்ந்து விட்டான் என்று கூற முடியது; ஆனால் நடைமுறை உலகம் குறித்த கூடுதல் புரிதலைப் பெறுகிறான். அதே சமயம் நாடகீயமான கட்டங்கள் வாழ்வில் வரும்போது அவன் திரும்பவும் மோகன்லாலின் சினிமாக்களையே பிரதியெடுக்க எத்தனிக்கிறான். அவனுக்கு சுயமான அனுபவங்களோ, சொந்தமான எதார்த்தமோ இல்லை, அவன் ஊடகங்கள் தரும் நினைவுகளை உண்டு வாழும் பிறவி, அவனால் வேறெப்படியும் இருக்க முடியாது என அல்போன் புத்திரன் காட்டுகிறார்.
அவனுடைய கதை சினிமா எதார்த்தத்தை பிரதியெடுக்கும் ஒரு மனிதனின் எதார்த்தத்தை சொல்லும் படம். அதைக் கண்டு பார்வையாளர்கள் தூண்டப்பட்டால் அவர்கள் பழைய சினிமாவில் இருந்து பிரதிபலிக்கப்பட்ட எதார்த்ததை பிரதிபலிக்கிறார்கள், அதாவது ஒரு கண்ணாடி முன்பு மற்றொரு கண்ணாடியை வைத்தால் கிடைக்கும் பிரதிபலிப்பைப் போல் ஆகிறார்கள் என்றே அர்த்தம் என்று நான் அந்த மாணவரிடம் விளக்கினேன்.
மேலும், “பிரேமத்தின்” ஒரு நுட்பமான சங்கதி ஜார்ஜ் ஒரு சினிமா வெறியன் எனக் காட்டுவதறாக ஒவ்வொரு பத்து சீனுக்கும் சினிமா போஸ்டர்கள், காட்சிகளின் பின்னணியை இயக்குநர் வைத்து திணிக்கவில்லை என்பது. பார்க்கிற பார்வையாளர்களுக்கு முதலில் ஜார்ஜின் எதார்த்தத்தையே தாம் காண்பதாகத் தோன்றும். இவ்வகையில் பிரக்ஞைபூர்வமாக முந்தைய படங்கள், வெகுஜன ஊடகப் பிரதிகளை குறிப்புணர்த்துகிற படைப்புகளை பின்நவீனத்துவத்தில் pastiche என்கிறார்கள். இப்பாணியில் pasticheஆக இல்லாமல் ஆனால் காதலின் மிகை-கற்பனை உலகை பகடி செய்த படம் பா. ரஞ்சத்தின் “அட்டகத்தி”. Pastiche ஆக இல்லாமல் spoof ஆக இதே விசயத்தை செய்த படங்கள் வெங்கட் பிரபுவின் “சென்னை 28” மற்றும் சி.எஸ் அமுதனின் “தமிழ்ப்படம்”.
இதனால் தான் “பிரேமத்தை” “ஹிருதயம்” போன்ற அட்டைக்காப்பி படங்களுடன் ஒப்பிடலாகாது என்று கூறுகிறேன். Pastiche வேறு, அட்டைக்காப்பி வேறு.
