உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ, காதல் முறிவோ, வியாதியோ, மரணமோ அல்ல. அது பயணம்.
ஏனென்றால் என்னிடம் கார் இல்லை. நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன். ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது. அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும். அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்படே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும். அந்த வழியில் படிக்கடுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும். விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை.
இந்த பேருந்துகள் விசித்திரமாக அமைக்கப்பட்டவை - பெரிய உயரமான படிக்கட்டுகளைக் கொண்டவை. என்னால் ஒரு எட்டில் ஒரு படிக்கட்டில் ஏற முடியாது. நான் பெரும்பாலும் உட்கார்ந்து உட்கார்ந்து ஊர்ந்து தான் ஏற வேண்டும். அதுவும் படிக்கட்டு முடிந்து பேருந்தின் உள்வாயில் இருக்கிறதே அப்பகுதியை சற்று வளைவாக குறுகலாக வைத்திருக்கிறார்கள். அங்கு நான் ஒரு காலில் நின்று ஒரு கையால் பேருந்தின் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றி நின்று தொங்கியபடி சாகசம் புரிந்து தான் ஏற முடியும். இது நடக்கையில் பேருந்து வேறு அசைந்தபடி இருக்குமா என விழுந்து இன்னொரு காலும் உடைந்திடுமா என பயமாக இருக்கும். இவ்வளவு முடிந்து உள்ளே போனால் ஸ்லீப்பர் படுக்கைகள் தாழ்வாக அமைந்திருக்கும். ஆட்டத்தின் இடையே அந்த இடத்தை அடைந்து உட்காருமுன் உயிர் போய் உயிர் வருவது போலிருக்கும். இறங்குவது இதை ஒத்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் உணவுக்காகவும் சிறுநீர் கழிப்பதற்கும் நிறுத்தும் போது நான் இறங்க மாட்டேன். மூத்திரத்தையும் பிற அவதிகளையும் பொறுத்துக் கொண்டு கிடப்பேன்.
ஒருநாள் விடிகாலையில் நான் தனியாக சென்னைக்கு வர நேர்ந்தது. அன்று எனக்கு ரத்த சர்க்கரை அளவுக்கு ஐம்பதுக்கு கீழே குறைந்து விட்டது. பேருந்துக்காரர்கள் “உங்க இடம் வந்திருச்சு” என எழுப்பி விட்ட போது நான் hypoglycaemia ஏற்படுத்திய அரை-பிரக்ஞையில் இருந்தேன். ஒன்றுமே புரியாமல் அதே போல ஊர்ந்து சிரமப்பட்டு இறங்கி என் காலிப்பரின் முட்டியில் உள்ள லாக்கைப் போடும் போது கவனமற்று இருந்து விட்டேன். நான் சில அடிகள் தான் நடந்திருப்பேன். என் காலிப்பர் உடைந்து விட்டது. ஒரு வாடித் தளர்ந்த மாலையில் இருந்து காய்ந்த மலர்கள் உதிர்வதைப் போல நான் குலைந்து விழுந்து போனேன். என் காலிப்பரின் கம்பிகள் முடிச்சுப் போட்ட கயிறைப் போல நெளிந்து கிடக்கிறது. அதில் இருந்து என் காலை விடுவிக்கவும் சிரமப்பட்டேன். நல்ல வேளை அன்று என்னை அழைத்துப் போக எழுத்தாளர் தமயந்தியும் நண்பர்கள் தினேஷும் வளனும் இருந்தார்கள். அதனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அப்படியே சாலையில் கிடந்திருப்பேன். நல்லவேளை, அன்று என் கால் உடைய வில்லை. என்னைப் போன்றோருக்கு எலும்புகள் osteoporatic ஆக இருக்கும் என்பதால் சிறிய கீறல் விழுந்தாலே குணமாக ஆறு மாதங்கள் ஆகும், உடைந்தால் ஒரு வருடத்திற்கு மேல் நான் படுத்த படுக்கைதான், என் எல்லா வேலைகளும் முடங்கிப் போகும்.
போராட்டம் இத்துடன் முடிவதில்லை. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் நான் பல வாகனங்களில் ஏறி இறங்கியாக வேண்டும். தங்கும் இடங்களில் உள்ள படிக்கட்டுகளில் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். இன்னொரு பிரச்சனை ஒரு முறை நெடிய பயணம் மேற்கொண்டால் அதன் மோசமான தாக்கம் என் உடல்நிலையில் இருந்து மறைய ஐந்து நாட்களாவது பிடிக்கிறது என்பது. இதனால் நான் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் வேலையும் நின்று போகிறது.
இந்த விவாகரத்து வழக்கு ஆரம்பித்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் நான் இந்த அவலங்களை அனுபவித்து வருகிறேன். இதில் என்ன கொடுமை என்றால் இதை நான் யாரிடம் நேரில் கூறினாலும் அவர்களுக்கு என் பிரச்சனை சுத்தமாகப் புரியவில்லை என்பது. மக்களிடம் இன்று வெகுவாக அடுத்தவர் துன்பத்தை தமதாக உணரும் empathy எனும் திறன் குறைந்து வருகிறது. “தான் தான்” என மக்கள் சுயஆட்கொள்ளலில் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்க முடியாதபடி வேலை அழுத்தத்தில் இருக்கிறார்கள் அல்லது அடுத்தவர்களுடைய இன்பங்களில் மட்டுமே பங்குபெற வேண்டும், துன்பங்களில் அல்ல எனும் மனநிலையில் இருக்கிறார்கள். என்னுடைய அம்மாவிடம் ஒருமுறை இந்த அவதிகளைப் பற்றி நான் கூறிய போது அவருக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என சுத்தமாகப் புரியவில்லை. ஒரு துளி கண்ணீர் இல்லை, வருத்தம் இல்லை, அவருக்கே இல்லை என்றால் நான் வேறு யாரிடம் எதிர்பார்க்க முடியும்? நியாயமாக வழக்காடு மன்றங்கள் என்னைப் போன்ற ஒருவரை ஒவ்வொரு முறையும் பஸ்ஸைப் பிடிந்து உருண்டு புரண்டு எப்பாடு பட்டேனும் வந்து முகம் காட்டு என்று கேட்கக் கூடாது. இணையவழி ஆஜராக வசதியை அனுமதிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ஊனமுற்றோரிடத்து கரிசனம் கொண்ட சட்டம் இல்லை. ரெண்டு கையும் காலும் இல்லாவிட்டாலும் நீங்க சட்டத்தின் முன் “சமம்” அல்லவா?
ஆனால் வாசிக்கையில் உங்களுக்கு நிச்சயம் எனது அனுபவம் கடத்தப்படும் என நம்புகிறேன், அதனாலே எழுதுகிறேன்.
என்னுடைய விருப்பமெல்லாம் ஒன்று தான் - என்னை இப்படி வருடக்கணக்காக சித்திரவதைக்கு ஆட்படுத்துகிறவர்களுக்கு கடும் துன்பங்கள், இழப்புகள் ஒருநாள் வர வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும்.