நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது. ஏனென்றால் அது தனித்துவமானது. தனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார். அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்து “ஜெண்டில்மேன்” வரை கவனிக்கையில் புரிகிறது. எம்.ஜி.ஆர் தனது “நான் ஏன் பிறந்தேன்?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார். அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை.
- நம்பியார் நாடக மேடையிலோ, படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை, மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார். இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார். இது ஏன் என்று யோசித்தேன். எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான். இன்று காலையில் என்னுடைய நாய் சட்டென தலையை முழுமையாக என்னை நோக்கித் திருப்பி கொட்டாவி விட்டது போது புரிந்தது - அப்படி முழுமையாக 180 கோணத்தில் உடலைத் திருப்பிப் பார்ப்பது மிருகங்களின் குணம். ஒரு புலி நம்மை நேராகப் பார்ப்பதை விட சட்டெனத் திரும்பி அவ்வாறு நோக்கினால் அதிர்ந்து உறைந்து போவோம். நம்பியார் மெதுவாக இடுப்பில் இருந்து திரும்பி நோக்கும் போதெல்லாம் நம் உபமனத்துக்கு ஒரு இரைகொல்லியைப் போல தொனிக்கிறார். இதைத் தெரிந்தோ தெரியாமலோ அவர் பண்ணிப் பார்த்து தன் பாணியாக வளர்த்திருக்கலாம். இந்த பாணியை பின்னர் சிறப்பாக பயன்படுத்திய நவீன நடிகர் ரஜினிகாந்த். அ. ராமசாமி சொல்வதைப் போல ரஜினியும் விலங்குகளின் உடல்மொழியை தன் உடல்மொழியில் கொணர்ந்து நடிக்கிறவரே.
- நம்பியாரால் சட்டென தன் குரலை மென்மையில் இருந்து கடுமையான ஒன்றாக மாற்றி பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் எம்.ஜி.ஆர். உ.தா., “ஜெண்டில்மேன்” படத்தில் நம்பியார் ஒரு மென்மையான, கனிவாக நபராக தன் குரலைக் கொண்டே நடித்து ‘தோற்றமளிப்பார்’. ஆனால் ‘எங்க வீட்டுப் பிள்ளையில்’ அவரது குரலின் கடுமை வேறாக இருக்கும். இந்த பாணியை அந்த கால நாடக, சினிமா நடிகர்கள் பின்பற்ற முயன்றனர், ஆனால் யாராலும் நம்பியார் அளவுக்கு குரலின் கடுமையை, அளவை சரளமாக மாற்றி மனவியல்பை வெளிப்படுத்த முடியவில்லை என்கிறார் எம்.ஜி.ஆர்.