காதல் ஒரு கிளர்ச்சியான பொய்
அதில் உண்மையை தேடினால்
காதல் மறைந்து விடும்.
காதல் ஒரு கொண்டாட்டமான நாடகம்
துவக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை
திட்டவட்டமான விதிமுறைகள் கொண்டது
இவ்விதிகளை ஏற்று விட்டால்
ஒரு மகத்தான காவிய உணர்வு
கிட்டும்.
காதலுக்கு உள்ளே வர
கதவு உள்ளதைப் போன்றே
வெளியேறவும் உண்டு.
அதை உணர்ந்து கொண்டால்
மனம் புண்படாமல்
இருக்கலாம்.
காதல் ஒரு வாடகை வீடு
கிளம்பும் வரை,
பணம் தீரும் வரை
அது நம் சொந்த வீடே தான்
காதல் காலாவதி தேதி கொண்ட பண்டம்
அதை ஒருமுறை
மனதில் ஏற்றி விட்டால்
அது காலாதீதமானது எனும்
உணர்வு ஏற்படும்.
காதலில் தன்னலம் முக்கியம்
அப்போதே பேரன்பை, தியாகத்தை
காட்ட இயலும்.
தன்னலமற்ற அன்பு
காதலர்களை அச்சமூட்டும் ஒன்று.
காதல் ஒரு வங்கி இருப்புத் தொகை
அதற்கு ஏடிஎம் அட்டை, கடன் அட்டை, வட்டி
எல்லாம் உண்டு
வரவு செலவு கணக்கு உண்டு.
எப்படி செலவழித்தே ஆக வேண்டும் எனும்
கட்டாயம் கொண்டது
பணமோ
தீர்ந்தே ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் கொண்டது
காதல்.
இரண்டுக்கும் நீங்கள் எங்காவது
வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
வாழ்தல் ஒரு கருத்தோ லட்சியமோ அல்ல
வாழ்தல் ஒரு செயல்
காதலும் ஒரு செயலே
அதனாலே காதலர்கள்
சீக்கிரம் ஓய்ந்து விடுகிறோம்.
இந்த உலகம்
முட்டாள்களுக்கானது
புத்திசாலிகள் காதலிப்பதில்லை
அவர்களுக்கு
இந்த உலகம் கிடைப்பதில்லை.
அதனாலே நாம்
காதலிக்கிறோம்
