இளையராஜாவுக்கு எதிராகப் பேசுவோரின் கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரம் ரஜினியும் கமலும் ஓட்டுபிரிக்கும் அரசியலில் கடந்த ஆண்டு முழுக்க ஈடுபட்ட போது, பாஜகவின் நேரடி, மறைமுக பிரச்சார படைகளாக அவர்கள் செயல்பட்ட போது அவர்களும் விமர்சிக்கப்பட்டார்கள், ஆனால் எந்த பத்திரிகையாளரும் அரசியல்வாதியும் “நீ”, “வா”, “போ” என ஒருமையில் அவர்களை அழைத்து சாடவில்லை. ஆனால் இளையராஜா என்றதும் சவுக்கு சங்கர், பத்திரிகையாளர் மணியில் இருந்து இ.வி.கி.எஸ் இளங்கோவன் வரை பொதுமேடை மாண்பின்றி அவரை ஒருமையில் அழைத்து ஏசுவதை எப்படி நாம் புரிந்து கொள்வது? கேட்டால் “தார்மீகக் கோபம்”, “இது தான் தமிழக மேடைக் கலாச்சாரம்” என சமாளிக்க வேண்டியது? நம்மிடையே எவ்வளவு சாக்கடைகள் ஓடுகின்றன என கண்டுகொண்ட தருணமாக இது அமைந்து விட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
மணியின் பேட்டி சற்று வேடிக்கையாகவே இருந்தது - “மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவதற்கு இளையராஜாவுக்கு அத்தனை உரிமைகளும் உண்டு. ஆனால் அவரை கடுமையாக விமர்சிக்க இந்த மாநில மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு” என்று திரும்பத் திரும்ப கூறுகிறார். இதில் ஏதாவது தர்க்கம் இருக்கிறதா? “அவனைக் கத்தியால் குத்துவதற்கு உனக்கு அத்தனை உரிமைகளும் உண்டு, ஆனால் அவனது ஆதரவாளர்களுக்கு உன்னையும் கத்தியால் குத்தவும் அத்தனை உரிமைகளும் உண்டு” எனக் கூறுவதைப் போலிருக்கிறது.
ராஜா-மோடி சர்ச்சை ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒரு பைத்தியக்கார விடுதியாகி விட்டது என நினைக்கிறேன். ராஜா அந்த நூலுக்கு முன்னுரை வழங்கி இருக்கக் கூடாது தான், ஆனால் நமக்கு உடன்பாடில்லாத காரியத்தை அவர் செய்தால் அதற்கு எதிர்வினையாற்ற ஒரு முறைமை, நாகரிகம், கண்ணியம் வேண்டும்.
இப்போது நடப்பது ராஜாவை யார் சொந்தம் கொண்டாடுவது எனும் பிரச்சனையே. அவர் எந்த சொந்த கருத்தையும் நமக்கு எதிராக கொண்டிருக்கக் கூடாது, அவரது நடத்தை மீது நமக்கு முழு கட்டுப்பாடும் வேண்டும், இல்லையென்றால் கடுமையாக சாடி அவரை அவமதிப்போம், கடும் சமூக அழுத்தத்தை செலுத்துவோம் என மிரட்டுகிறோம். யோசித்துப் பாருங்கள் - நமக்கு இணையாக நாம் கருதுபவர்களை இப்படி செய்வோமா? இல்லை. இதுவரை குழந்தைகள், பெண்களையே இப்படி நடத்துவது நமது ‘மரபு’. நாம் ஒருவரை நேசிக்கையில் அவர் நமக்கு இணையான தனிமனிதர் எனும் கோணத்திலே நேசிக்க வேண்டும். ஆனால் ராஜாவை அப்படி இணைவைக்க நாம் விரும்புவதே இல்லை. ஒன்று அவரை நமக்கு கீழாக எண்ணி காறித் துப்புகிறோம் அல்லது தலைக்கு மேல் தூக்கி வைத்து தெய்வமென கொண்டாடுகிறோம். இதை இரண்டையும் நாம் ராஜாவுக்கு மாறி மாறி செய்திருக்கிறோம். இரண்டையும் செய்வதன் நோக்கமே சமத்துவம் தர மாட்டோம் என்பதால் தானே? ஒரு பெண்ணை வேசி என்றும், தெய்வம் என்றும் ஒரே சமயம் அழைப்பது போலல்லவா இது? அவர் மீது இத்தனை உரிமைகளை நமக்கு தந்தது யார்? அவர் தந்தாரா? இல்லையே.
ராஜாவின் சாதியை அவருக்கான கவசமாக நான் இங்கு கொண்டு வருகிறேன் என நீங்கள் கருத வேண்டாம். அது என் நோக்கமல்ல. நாம் தாழ்வாக நினைக்கும் பலருக்கும் இதே நடைமுறையைத் தான் வைத்திருக்கிறோம் என்கிறேன். நாம் ஏற்றுக் கொள்ளாத அரசியலைக் கொண்ட எழுத்தாளர்களையும் இவ்வாறே நடத்துகிறோம். ஆனால் ஜெயலலிதாவை ஒருவரும் பேஸ்புக்கிலோ பேச்சாளர்கள், பத்திரிகையாளர்கள் ஊடகங்களிலோ ஒருமையில் பேசி கடந்த இரு பத்தாண்டுகளில் நான் கண்டதில்லை. ஆனால் பிற நடிகைகள் அப்படி பேசப்பட்டு பார்த்திருக்கிறேன். இந்த வித்தியாசம் தான் நமது பிரச்சனை என்கிறேன். நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வை விரும்பும் ஒரு மனம் இந்த சந்தர்பங்களில் எல்லாம் விழித்துக் கொள்கிறது. சாதியம் இதில் ஒரு பகுதி. சும்மா சும்மா சமூகநீதியை விரும்பும் மாநிலம் என கதறிக் கொண்டிருந்தால் போதாது, அதை நடைமுறையிலும் காட்ட வேண்டும்.
இந்த சர்ச்சையின் முடிவில் நாம் இழிவானவர்களாக எஞ்சியிருக்கிறோம்.
