இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதிய பாராட்டுரையைப் பார்த்து பேஸ்புக்கர்கள் பொங்கோ பொங்கென்று பொங்குவதைப் பார்த்தால் எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. நாம் ஏன் கலைஞர்களை எப்போதும் சமூகத்தின் மனசாட்சியாகப் பார்க்கிறோம்? நமது அரசியல் நம்பிக்கைகளுடன் அவர்கள் உடன்படவில்லை என்றால் மனம் உடைந்து போகிறோம், கொந்தளிக்கிறோம், சபிக்கிறோம்? இந்த கலைஞர்கள் எப்போதாவது “நான் உங்களுடைய சிந்தனைகளை வழிநடத்துகிறேன், உங்கள் மனசாட்சியின் குரலாக இருக்கிறேன்” என்று கோரியிருக்கிறார்களா? இல்லையே. பின் எதற்கு?
இன்னொரு கேள்வி: அவர்களுடைய அரசியல் தரப்பை வெளிப்படுத்தும் போது புண்படும் நாம் அதை அவர்கள் செய்யாத போது என்றாவது உங்கள் அரசியல் என்ன என்று கேட்டிருக்கிறோமா? இல்லையே. சொல்லாமல் இருந்தால் சரி, சொன்னால் பிரச்சனையா?
தமிழில், இந்திய மொழிகளில் மட்டுமல்ல, உலக அளவில் கூட பல கலைஞர்களின் அரசியல் நம்பிக்கைகளை, பண்பாட்டு அவதானிப்புகளை, தனிப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி படித்து நான் அதிர்ந்திருக்கிறேன். பிறகு இதில் எல்லாம் அர்த்தமில்லை என்னும் முடிவுக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் ஒரு தனிமனிதனாக என்னுடைய அரசியல், சமூகக் கருத்துக்களிலேயே உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அனேகமான கருத்துக்கள் இருக்கும், என்னாலே ஏற்றுக் கொள்ள முடியாத முரண்பாடுகள் இருக்கும்.
இளையராஜாவோ இந்துத்துவாவை ஆதரிக்கும் இன்ன பிற எழுத்தாளர்களோ அல்லது வழக்குகளில், சர்ச்சைகளில், குற்றங்களில் மாட்டிக் கொண்ட மகத்தான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தத்துவஞானிகளோ எனக்குப் பிரச்சனையில்லை. வெகுஜன ஊடகங்கள் அவர்களைத் தொடர்ந்து வெகுமக்களின் பிரதிநிதியாகப் புனைந்து முன்வைப்பதே பிரச்சனை. கடந்த தேர்தலில் விஜய் சிவப்பு கறுப்பு வண்ணத்துடன் சைக்கிள் ஓட்டி வாக்களிக்க வந்த போதே நாம் இந்த தவறை செய்தோம். அண்மையில் ரஹ்மான் விசயத்தில், இப்போது ராஜா குறித்த சர்ச்சையிலும் இத்தவறை செய்கிறோம். ஊடகங்களுக்கு இது ஒரு வியாபாரம். ஆனால் நாம் இதற்கு பலியாகாமல் இருப்பது புத்திசாலித்தனம்.
அடிப்படையில் ஒரு படைப்பாளியும் தனிமனிதனே. அவனது அரசியல் நிலைப்பாட்டை நாம் அறிந்து கொள்ள அவசியமே இல்லை. எப்படி தேர்தலில் யாருக்கு வாக்களிச்சீங்க எனக் கேட்பதில்லையோ அப்படியே இதையும் கேட்கத் தேவையில்லை.
அவர்கள் அரசியல் நோக்கர்கள், கட்சி பேச்சாளர்கள் எனில் நாம் அவர்களுடன் மோதலாம், விவாதிக்கலாம். ஏனென்றால் அரசியலை பேசுவது, கருத்தியலை கட்டமைப்பது ஒரு தொழில்சார் சமாச்சாரம். அதற்கென தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள் வேறு, போகிற போக்கில் அரசியல் பார்வையை வெளிப்படுத்துவோர் வேறு. முன்னவர்களுக்கு ஒரு தொடர்ச்சி இருக்கும், தர்க்கம், நோக்கம் தெளிவாக இருக்கும், பின்னவர்களுக்கு அது பொருட்டாகவே இராது. முன்னவர்களுக்கு அது வாழ்க்கை, பின்னவர்களின் வாழ்க்கையின் நோக்கம் அரசியல் அல்ல.
அரசியல் என்பது நாம் சமூகத்துடன் உறவாடி, அதிகாரத்துடன் சமரசம் பண்ணி நீதியைப் பெறுவதற்கான ஒரு கருவி. அது மொழி வழியாக நம்மை வந்தடைகிறது. அதற்கென சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். நமக்கும் அரசியல் கருவிக்கும் நடுவே வரும் முகவர்களே அரசியல் நோக்கர்கள். அரசியல் நோக்கர்களால் கட்டமைக்கப்படும் ஆளுமைகளே தலைவர்கள். இந்த சங்கிலியில் எங்குமே உயர்பண்பாட்டு கலைஞர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, இசைக்கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்ட வெகுஜன கலைஞர்களுக்கு இடமில்லை என்பதே உண்மை.
அரசியல்வாதிகள் இந்த கலைஞர்களை, விளையாட்டு வீரர்களை தம் மேடையில் இடம்பெறச் செய்வதுண்டு, அவர்களுடைய புகழை பயன்படுத்துவதுண்டு. அது ஒரு விளம்பரப் படத்தில் விராத் கோலியை பயன்படுத்துவது போலத் தான். கவன ஈர்ப்பை தாண்டி அதற்கு மதிப்பில்லை. ரஹ்மானும், இளையராஜாவும் கூறும் எதிர்நிலை அரசியல் கருத்துக்களும் அசலான அரசியல் உரையாடல் அல்ல. அவை கவன ஈர்ப்புக்கான சமாச்சாரங்கள் மட்டுமே.
தமிழகத்தில் நீண்ட காலமாக ஒரு பிரச்சனை உண்டு - இங்கு பெரியார், அண்ணாவுக்குப் பிறகு அரசியல் கருத்தாளர்கள், சித்தாந்தவாதிகளுக்கு வெகுஜன பரப்பில் முக்கியத்துவம் இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் (திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு) மேடைப்பேச்சாளர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் அரசிய நோக்கர்களின் இடத்தை எடுத்துக் கொண்டார்கள். அரசியல் என்பது பொழுதுபோக்காக, பொழுதுபோக்கே அரசியல் என்றானது. அதனால் தான் “முதல்வனில்” சங்கர் ஒரு டிவி நெறியாளரை அரசியல் தலைவராக, முதல்வராக சித்தரிக்கிறார். இதன் துவக்கத்தை நாம் எம்.ஜி.ஆரின் “நாடோடி மன்னனிலே” பார்க்கலாம். சொல்லப் போனால் அப்படத்தின் ஒற்றை வரியின் சற்று வண்ணமயமான வடிவமே “முதல்வன்”. இப்படங்களில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் அழகாக அதே சமயம் மிக அபத்தமாக இருந்ததும், அவற்றைப் பார்த்து மக்கள் அன்று சில்லறையை சிதற விட்டதும் இச்சூழலின் இயல்பான விளைவுகளே. அதன் பிறகு அண்மையில் சமூகவலைதளங்கள் வலுப்பெற்றிட, அரசியல் தலைவர்களையே ஒரு சினிமா ஹீரோவைப் போல ஊடகங்கள் வழி ஊதிப்பெருக்குகிற போக்கு தோன்றியது. அதன் பிறகு டிவீட் போடுகிறவர்களை, யுடியூபர்கள் கட்சிகள் விலைக்கு வாங்கும் நிலை தோன்றியது. இப்படி நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு விட்டன. அமெரிக்காவை சேர்ந்த ஒரு பாப் பாடகி மோடி அரசை விமர்சித்ததும் ஒட்டுமொத்த அரசு எந்திரமே கொந்தளித்து எதிர்வினையாற்றிய அபத்தத்தைப் பார்த்தோம். இப்போது அந்த பாடகி எங்கே போனார்? இந்தியாவில் அதன் பிறகு எந்த அரசியல் / மக்கள் பிரச்சனையும் வரவில்லையா?
இதனால் தான் சொல்கிறேன் - நாம் முன்னேற வேண்டுமெனில் அசலான நடைமுறை அரசிலுடன் உரையாட வேண்டும், போலியான அரசியல் கதையாடல்களுடன் அல்ல. அரசியல் நிகழ்வுகளை, ஊழல்களை, பொருளாதார நகர்வுகளை, பட்ஜெட்டைப் பற்றி பேச வேண்டும். அரசியல்வாதியையும் மக்களையும் ஒரு தரப்பாகவும் கலைஞனையும் அவனது தொழிலையும், பிற தனிமனிதர்களையும் அதற்கு சம்மந்தமில்லாத மற்றொரு தரப்பாகப் பார்த்தாலே நமது சமூகம் முன்னேறும்.
எனில் படைப்பில் அரசியல் இல்லையா என்றால் உண்டு. ஆனால் அது மொழிக்குள்ளும் நம் செயல்பாடுகளிலும் கதையாடல்களாக வெளிப்படும் பண்பாட்டு அரசியல், அதிகார அரசியல் மட்டுமே அன்றி நடைமுறை, தேர்தல் அரசியல் அல்ல. இரண்டுக்கும் பாரித்த வேறுபாடு உள்ளது. கட்சி அரசியல், சித்தாந்த அரசியல் கலைப்படைப்புகளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் அது மற்றொன்றாகி விடும். இமையத்தின் “வாழ்க வாழ்க” நாவல், “பெத்தவன்” நெடுங்கதை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஒரு படைப்பாளி கட்சி / சித்தாந்த அரசியலைப் பேசும் போது அவன் ஒரு தனிமனிதனாகி விடுகிறான். இந்த மாற்றத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஆகையால் சினிமா கலைஞர்கள் பேசுகிற அரசியலை வைத்து அக்கப்போர் செய்வது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளும் செயல். “ஜெய்பீமில்” நடித்ததும் சூர்யா புரட்சி நடிகர், அரசியல் வழிகாட்டி ஆக மாட்டார். பொட்டு வைத்து மோடி ஜியை புகழ்ந்ததும் இளையராஜா சாவர்க்கர் ஆகி விட மாட்டார். சூர்யாவும் ராஜாவும் என்னையும் உங்களையும் போன்றவர்கள் - அவர்கள் அரசியல்வாதிகளோ அரசியல் கருத்தாளர்கள் / நோக்கர்களோ அல்ல. இன்னும் சொல்லப் போனால் ஒரு டிவி நெறியாளரைக் கூட நாம் அரசியல் கருத்தாளராகப் பார்க்க வேண்டியதில்லை.
இன்னொரு பக்கம், ராஜாவுக்கு தன் படைப்புகளை எந்த அரசியல் சித்தாந்தத்திலும் அடைப்பதில் உடன்பாடில்லை. அவர் தன் இசையை அரசியலுக்கு, தர்க்கத்துக்கு அப்பாலானதாகப் பார்க்கிறார், அதனாலே அவர் சமஸ்கிருதமயமாகலுக்கு பலியாகி தவறான முகாமில் அடையாளத்தை தேடுகிறார் என விமர்சித்த கெ.ஏ குணசேகரனின் நூலுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். இப்போது ஒருவர் அவரது இசையை ‘இந்து தேசிய’ இசை என்றாலும் ராஜாவுக்கு கடுப்பாகும், என்ன வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.
எப்படி தேர்தலில் ஒரு மதவாத, வலதுசாரி தலைவரான மோடிக்கு வாக்களிக்க ஒருவருக்கு உரிமை உண்டோ (அந்த உரிமையே தவறானது என்பது வேறு விசயம்) அதே போல அவரைப் புகழ்ந்து பேசவும் உரிமை உண்டு. இந்த விசயத்தில் ராஜா மீதோ நம் மீதோ தவறில்லை. இதை ஒரு செய்தியாகப் பரப்பி நம்மையும் பேச வைக்கிற இந்த ஊடகங்களைத் தான் தலையிலேயே போட வேண்டும்.
