இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் ஆடுதளம், சூழலை தவறாக கணித்து, 190-200 அடிக்கும் நோக்கில் முதல் 7-15 ஓவர்களில் ஆடியது தான்.
இதற்கு தலைவர் சஞ்சு தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் மில்லருடன் இணைந்து 15வது ஓவர் வரை சராசரியாக ஓவருக்கு 7-8 ரன்கள் அடித்திருந்தால் போதும். 110-115 வந்திருப்பார்கள். அங்கிருந்து 165-170 அடிப்பது சாத்தியமாகி இருக்கும். அது இந்த ஆடுதளத்தில் ஒரு நல்ல ஸ்கோரே. பின்னர் குஜராத் அணியினர் பேசும் போது 150க்குள் ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தவே விரும்பினோம், போனஸாக 130க்கு விழுந்து விட்டார்கள் என்றனர். இது அவர்கள் ஆட்டச்சூழலை சரியாக கணித்தார்கள். ஆனால் ராஜஸ்தானோ 190 வேண்டும் என தவறாக எதிர்பார்த்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த தேவையற்ற எதிர்பார்ப்பே அவர்கள் மீது அழுத்தத்தை உண்டு பண்ணியதே சஞ்சு, மில்லர், ஹெட்மெயரின் விக்கெட்டுகள் விழக் காரணமாகியது.
இவ்வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் நிறைய அணிகள் செய்த தவறு ஆழமாக மட்டையாடி 17வது ஓவரில் 2-3 விக்கெட்டுகளுக்கு மேல் எதிரணிக்கு கொடுக்காமல் இருப்பதே. பெரும்பாலான அணிகள் 12-16வது ஓவருக்குள் தேவையில்லாமல் 20 ரன் ஓவர்களை நாடி 3-4 விக்கெட்டுகளை சராசரியாக இழந்து பல வெல்ல வேண்டிய போட்டிகளை இழந்தன. அத்தவறை குறைவாக செய்த அணி குஜராத் மட்டுமே. இறுதி ஓவர் வரை மில்லர், ஹர்த்திக், திவாட்டியா போன்றவர்கள் பொறுமையாக, தன்னம்பிக்கையுடன் நின்றாடி வென்றளித்தார்கள். இன்று அவர்கள் முதலில் மட்டையாடி இருந்தாலும் அதைச் செய்திருப்பார்கள்.
கடைசியில் முன் யோசனை, திட்டமிடல், ஆட்டச்சூழலை கணித்தாடிய குஜராத்தே வென்றது. அவசரக் குடுக்கை அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் - பட்லர் கைவிட்ட நிலையில் - தோற்றது. இதில் பிற அணிகளுக்கு ஒரு முக்கிய பாடம் உள்ளது: 20 ஓவர்களை ஆடுவது 1-6 இல் வரும் மட்டையாளர்களின் பணி. அவர்கள் 3, 4 ஜோடிகளாக தம்மைப் பிரித்துக் கொண்டு 20 ஓவர்களும் ஆட வேண்டும். ஒரு இவரில் 8-10 ரன்கள் வந்தால் போதும் என கடைசி இரு பந்துகளில் ஒற்றை ரன்களுக்கு ஓட வேண்டும். இறுதி 5 ஓவர்களில் 50-60 ரன்களுக்கு மேலும் அடிக்க முடியும். சற்று சிரமமான ஆடுதளங்களில் இதுவே சரியான அணுகுமுறை. தட்டையான ஆடுதளங்களில் இதே பாணியில் ஆடினால் கடைசி 5 ஓவர்களில் 80 கூட அடிக்கலாம். 220 இலக்கு கிடைக்கும். ராஜஸ்தான், பேங்களூர், தில்லி போன்ற பல அணிகள் இத்தவறை செய்து, batting deep பண்ணாமல் சொதப்பினார்கள், கடைசி சில ஓவர்களை பந்து வீச்சாளர்களை ஆட விட்டார்கள். குஜராத்தைத் தவிர.
அதனாலே குஜராத் இக்கோப்பைக்கு ஒரே தகுதியான அணி! மற்ற அணிகள் இதை 10 ஓவர் போட்டியாகக் கருதி ராட்டினம் சுற்ற, குஜராத் 20 ஓவர்களையும் கணிசமாகப் பயன்படுத்தியது. அது தான் வித்தியாசம்!
என்னதான் ராஜஸ்தான், சன் ரைசர்ஸ், பெங்களூர் போன்ற அணிகளிடம் வலுவான பந்து வீச்சு இருந்தாலும் அவர்களால் கோப்பையை அடிக்க முடியவில்லை. குஜராத்திடமும் நல்ல பந்து வீச்சு இருந்தது. ஆனால் அது போதாது. அதிரடியாளர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஆழமாக, நீடித்து ஆட வேண்டும். ஹர்த்திக்கே அப்படி பொறுப்பெடுத்து ஆடிக் காட்டினார். ஒரு மாரத்தான் ஆட்டம் போல் சளைக்காமல் பொறுமையாக ஓடினார்கள், வென்றார்கள்!