ஒரு அமைப்பு எனும் வகையில் உறவு என்பது கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் இயங்குவது. நீங்கள் கொடுத்து வாங்குவது பணமோ, வசதியோ, உணவோ, அங்கீகாரமோ, அன்போ, ஆறுதலோ, பாதுகாப்போ, இது ஒரு வணிக உறவாடலைப் போன்றதே. ஒரு படைப்பாளனுக்கும் பதிப்பாளனுக்குமான உறவும் அப்படியானதே. நீங்கள் அதற்குள் செல்லும் போது அதில் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் எனும் தெளிவு மிக மிக அவசியம். எப்படி ஒரு உறவுக்குள் எல்லாம் கிடைக்காதோ அப்படியே ஒரு பதிப்பாளரிடம் ஒரு படைப்பாளனுக்கு எல்லா எதிர்பார்ப்புகளும் பூர்த்தியடையாது. எப்படி ஒரு எலக்டிரானிக் கடையில் போய் அரை கிலோ கறி கேட்கக் கூடாதோ அதே போல என்ன கிடைக்கும் என்பது தெரியாமல் நீங்கள் ஒரு பதிப்பாளரிடமும் செல்லக் கூடாது. இந்த தெளிவு என் முந்தைய தலைமுறையில் தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளிடம் இருந்ததைப் போல என்னுடன் எழுத வந்தவர்களிடம் இல்லை என்று இன்று ஒரு சீனியர் எழுத்தாளரிடம் பேசிய போது தோன்றியது.
தமிழில் ஒரு முறைசாரா தொழிலாகவே பதிப்பும் எழுத்தும் இருப்பதால் இன்றைய எழுத்தாளர்கள் பல ஏமாற்றங்களுக்கு ஆளாகிறார்கள்; புலம்புகிறார்கள்; மியூசிக்கல் சேர் விளையாட்டு போல மாறி மாறி பல இருக்கைகளில் அமர்கிறார்கள். முக்கியமாக, அவர்கள் இங்கு எல்லாமே முறையாக, நியாயமாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் லாட்டரி சீட்டு வாங்குவதைப் போன்றதே.
இங்கு என்று தான் இல்லை - என் நண்பர் ஒரு ஆங்கிலக் கவி. அவர் வங்காளத்தில் உள்ள ஒரு பெயர்பெற்ற பதிப்பகத்துக்கு ஒரு லட்சம் மேல் பணம் கொடுத்து தன் முதல் கவிதை நூலை வெளியிட்டார். அடுத்த கவிதை நூலையும் அவ்வாறே வேறொரு பதிப்பகம் வழியாகக் கொண்டு வந்தார். சச்சிதானந்தன் போன்றோர் முன்னுரை எழுதிக் கொடுத்தனர்; அவர் அளவுக்கு அவர் படோடாபமாகவே புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் கடந்த சில மாதங்களாக “எனக்கு ஒரு வருட ராயல்டியாக 450 ரூபாய் மட்டுமே அனுப்பி இருக்கிறார்கள்” என புலம்பிக் கொண்டிருக்கிறார். இனி பணம் கொடுத்து புத்தகம் கொண்டு வரப் போவதில்லை என்று வேறு சபதம் செய்கிறார். நான் “பணம் கொடுக்காதீங்க” என இரண்டு வருடங்களுக்கு முன்பே எச்சரித்தேன். அவர் கேட்கவில்லை. இப்போது புலம்புகிறார். இன்னொரு நண்பர் “என் புத்தகத்தை நூலகங்களில் பார்த்தேன், ஆனால் பதிப்பாளர் எனக்கு காசு தரவில்லை” என்று அழுதார். அவரையும் நான் இதைக் குறிப்பிட்டே முன்பு எச்சரித்திருந்தேன். அப்போது அவர் என் சொற்களை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. இப்படி பலர்!
இந்த வாரம் நீயா நானாவில் சைவம் சாப்பிடும் கணவர்களுக்கும் அசைவம் உண்ணும் மனைவியருக்கும் இடையே ஒரு விவாதம். அதில் ஒரு பெண் தன் கணவரைப் பற்றி சொல்லும் போது “அவரு ஒரு ஓட்டல்ல chef என்று சொல்லித் தான் கட்டி வச்சாங்க. நல்லா விதவிதமாக சிக்கன் கறி, பிரியாணின்னு சமைச்சுப் போடுவாருன்னு நினைச்சா வெறும் சைவமா சமைக்கிறாருங்க” என்று புலம்பினார். கணவன் சைவ உணவுக்காரராம். இது தெரியாமலே கட்டியிருக்கிறார். மேற்சொன்ன ஏமாற்றங்கள் இப்படியானவையே.
தீர விசாரித்து, யோசித்து நம் ஆட்கள் ஒரு பதிப்பாளரை அணுகுவதில்லை. ஏதோ ரோட்டில் போகிற பெண்ணின் கண்ணை மட்டும் பார்த்து காதலில் விழும் சினிமா காதலனைப் போல புத்தகங்களைக் கொடுக்கிறார்கள். நீங்கள் இந்தி பேசுகிற பெண்ணை மணமுடித்து விட்டு “அவ எங்கிட்ட தினமும் இந்தியிலே பேசி சாகடிக்கிறா” என்று புலம்புவதால் என்ன பலன்? வேறு வழியில்லாமல் சிக்கிக் கொண்டால் கழற்றி விட்டு அடுத்து ‘ஒரு தமிழ்ப் பெண்ணிடம்’ போவது தானே சரி! சொல்லப் போனால் ஆண் பெண் உறவை விட எழுத்தாள-பதிப்பாள உறவு சுலபமானது.
இத்தனைக்கும் இன்று ஏகப்பட்ட பதிப்பாளர்கள் தோன்றி விட்டார்கள். POD வந்தே சில வருடங்கள் ஆகின்றன. இன்று பூப்பறிப்பதைப் போல ஒரு புத்தகத்தை பிரசுரித்து விடலாம். ஓரளவுக்கு தெரியப்பட்ட எழுத்தாளர்களிடம் நாவல் இருந்தால் அதை வாங்க நான்கைந்து பதிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். மற்ற எழுத்தாளர்களுக்கும் நூல் பிரசுரிப்பது குதிரைக் கொம்பல்ல.
எப்போதும் ஒரு புத்தகத்தினால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது - பணமா, புகழா, இலக்கிய அங்கீகாரமா, ஒரு துவக்கமா - என்பதில் தெளிவு வேண்டும். அதில் உங்கள் முதலீடு என்ன, முதலுக்கு லாபம் வருமா என்பதும் தெரிந்திருக்க வேண்டும். புத்தகமும் பதிப்பகமும் அதை நோக்கியே எழுதப்படவும் அணுகப்படவும் வேண்டும். “இங்கே போனால் உங்க புத்தகத்துக்கு கவனம், பிராண்ட் வேல்யூ கிடைக்கும், ஆனால் பணம் கஷ்டம் தான்” என்று யாராவது சொன்னால் அதைத் தெரிந்து கொண்டு போங்க. “பணமும் அங்கீகாரமும் கிடைக்கும்” என்றால் அதை நாடிப் போங்க. “அன்பும், நட்புமே எனக்கு முக்கியம், அதனுடன் இலக்கிய ஸ்தானமும் என்றால்” அது கிடைக்கும் இடத்துக்குப் போங்க. “விருதுகள், தொடர்புகள், மொழிபெயர்ப்பு வாய்ப்புகள், இலக்கிய பயண வாய்ப்புகள் முக்கியம் எனக்கு” எனத் தோன்றினால் அவை கிடைக்கும் பதிப்பாளரிடம் செல்லுங்கள்.
இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்:
முதலில், ஒரு எழுத்தாளன் தொடர்ந்து நிலையாக இயங்க நீடித்த பதிப்பாள உறவு முக்கியம்.
இரண்டாவதாக, நீங்கள் அறிமுக எழுத்தாளரோ, அறியப்பட்ட எழுத்தாளரோ அடுத்த பத்தாண்டுகளில் உங்கள் இலக்கு என்ன, அதை அடைய எந்த பதிப்பாளர் பொருத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்தே எழுத வேண்டும். அதை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும், உதிரி பலன்களை அல்ல. சொந்த நண்பர்களே வெளியிட்டாலும் சரி, உங்கள் எதிர்பார்ப்பு நட்பா, அதிக வாசகர்களா, பணமா என முடிவு செய்து அதை மட்டுமே கேளுங்கள். முதல் மூன்றாண்டுகளுக்கு எனக்கு பிராண்ட் மதிப்பு தான் தேவை என்றால் அதுவரை பொறுமையாக இருங்கள். “சமவயது படைப்பாளிகளுடன் பிரசுரித்து அவர்களுடன் போட்டியிட்டு நான் வளர்ந்து கொள்வேன்” என நினைத்தால் பெரும் படைப்பாளிகளைப் பிரசுரிக்காத ஒரு வளரும் பதிப்பகத்துக்குப் போங்க. “புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தக அடுக்கில் அவர்கள் அருகே என் புத்தகமும் வர வேண்டும்” என்றால் அப்படியான ஒரு பதிப்பகத்தை அணுகுங்கள். உங்களுக்கு என்று தனித்த கொள்கை, அரசியல் இருந்தால் உங்களை ஒத்தோருடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்றால், உங்கள் அரசியலுக்கு இணக்கமானோர் உள்ள பதிப்பகத்துக்குப் போங்க. ஒரு இளம் எழுத்தாளனாக அங்கே போன பிறகு உங்கள் முதன்மை எதிர்பார்ப்பை மீறி வேறெதையும் முதல் சில ஆண்டுகளுக்கு எதிர்பார்க்காதீர்கள். உங்களை நிறுவிய பிறகு அடுத்த இலக்கை தீர்மானியுங்கள்.
மூன்றாவதாக, ஒரு பதிப்பாளர் எப்படியானவர், என்ன பின்னணி, என்ன வரலாறு எனத் தெரிந்து கால் வைத்தால் அங்கு கசப்போ ஏமாற்றமோ இராது. நான் ஒரு புத்தகத்தை எழுதும் போதே அதை பிரசுரிக்க வேண்டிய பதிப்பாளர் யார் என இப்போது யோசிக்கிறேன். என் எழுத்தாள நண்பர்களிடம் பரவலாக விசாரித்து நிறைய யோசித்து பல மாதங்களுக்குப் பிறகே எந்த பதிப்பாளரை தேர்வது என ஒரு முடிவை எடுக்கிறேன். அதன் பிறகு ஏமாற்றம் ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் நான் 15 ஆண்டுகளாக புத்தகங்கள் எழுதி வருகிறேன். சங்கடங்கள், அதிர்ச்சிகள் இருந்ததுண்டு, ஆனால் ஒரு சிறிய வருத்தம், ஏமாற்றம் கூட எனக்கு என் பதிப்பாளர்களிடம் ஏற்பட்டதில்லை.
நான்காவதாக, புத்தக விற்பனையில் இருந்து கிடைக்கும் பணம் உபரி வருமானமாகவே இருக்க வேண்டும்; நமக்கு வேறு தொழில் இருக்க வேண்டும். இல்லாவிடில் மேற்சொன்ன மூன்று விசயங்களும் சொதப்பிப் போகும்.
ஐந்தாவதாக, அவசர கதியில் எந்த பிரசுர முடிவையும் எடுக்காதீர்கள். இலக்கிய உலகில் ஒரு புத்தகம் 2022இல் வந்தாலும் 2027இல் வந்தாலும் ஒன்று தான். இங்கு முயலை விட ஆமையே வெல்லும்.
மேலே வருவன இன்று பதிப்பாள-எழுத்தாள உறவைப் பற்றி ஒரு புத்தகத்தைப் படித்த உணர்வில் எழுதியது.
