“இளையராஜாவின் பொன்விதிகள்” என்றொரு கட்டுரையில் ஜெயமோகன் இளையராஜா எந்தளவுக்கு உலக வாழ்வில் பற்றற்றவர், புற உலகின் அரசியல் பற்றின அக்கறையற்றவர், மிச்சம் வைக்காமல் தன்னை கலைக்கு ஒப்புக் கொடுத்தவர், அதற்கான ஒழுங்கைப் பேணுகிறவர் என்று சிலாகிக்கிறார். இதில் என்னைத் தூண்டிய விசயம் பற்று என்பதே. ஒரு கலைஞன் லௌகீகத்தில் பற்றற்றவன் எனும் தொன்மமானது இங்கு கா.ந.சு காலத்தில் இருந்தே இருக்கிறது. (அதற்கு முன் சங்க கால கவிஞர்கள் பரிசிலுக்கு பாட்டெழுதினார்கள் என்னும் நம்பிக்கை இதன் எதிரிடையோ?) இன்று அரசவைப் புலவர்களின் இடத்தில் சினிமா கலைஞர்கள் வந்து விட்டமையால் ஜெயமோகன் ராஜாவை மட்டும் கா.ந.சுவாக புனைகிறார் என நினைக்கிறேன். அல்லது அது அவர் கண்ட இளையராஜாவாக நிஜமாகக் கூட இருக்கலாம். என் ஆர்வம் கலைஞனின் பொன்விதிகளில் ஒன்றாக பற்றற்று இருத்தலைக் கூறலாமா என்பதே.
நான் என்னையே எடுத்துக் கொள்கிறேன். எழுத ஆரம்பித்தால் எனக்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது ஏன் வேலைக்குப் போவது கூட மறந்து போகும். ஒரு பேரழகி என் அருகே வந்து நிற்பது போக அவள் தன் செவ்வாய் திறந்து அருளினாலும் அச்சொற்கள் என் காதில் பட்டு இலையுதிர் மழைத்துளிகள் போலாகி விடும். (ஏனென்றால் நான் யார் சொல்லும் கேட்கக்கூடாது என ஹெட்போன் மாட்டி இசையை உச்சமாக ஒலிக்க விட்டிருப்பேன்.) இத்தனை வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்; இதுவரை என்னிடம் எந்த சேமிப்பும் இல்லை, வீடில்லை, சொத்தில்லை, தங்கமில்லை, ஒன்றுமேயில்லை. (என்னைப் போல எதுவுமே இல்லாதவர்கள் சாமான்யர்களிலும் பலர் இருக்கிறார்கள். அது நம் பொருளாதார அமைப்பின் சாபக்கேடு.) நான் வாங்க ஆசைப்படுவதும் பெரும்பாலும் கணினி, புத்தகம் என்று எழுத்து சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். (என்னைப் போல தினமும் எழுதுகிற படைப்பாளிகளின் விருப்பங்களும் என்னைப் போன்றே எழுத, வாசிக்க நேரம், வேளாவேளைக்கு சாப்பாடு, ஒரு துணை என்றளவிலே இருக்கும்.) என்னைப் போன்ற கலைஞர்கள் பற்றற்றவர்களா?
“அதெப்டிங்க? நீங்க வேலைக்குப் போய் சம்பாதிக்கிறீங்க, சாப்டுறீங்க, பெண் (அல்லது ஆண்) துணை இருக்குது, பற்றில்லாமல் இதெல்லாம் சாத்தியமா” என யோசிப்பீர்கள். ரொம்ப நியாயமான கேள்வி. இதே கேள்வி இளையராஜாவுக்கும் பொருந்தும்.
சரி, உலகப்பற்று அதிகமானோருடன் ஒப்பிடுகையில் ஒரு ‘உன்னத கலைஞன்’ குறைவான லௌகீக அக்கறை கொண்டவன் என்று கூறலாமா? என்னுடைய பதில் இங்கு கூடுதல்-குறைவு எனும் இருமையில் எந்த பொருளும் இல்லை. எந்த கலைஞனும் பற்று கொண்டவனோ பற்றற்றவனோ அல்ல, ‘துறத்தல்’ என்பதே ஒரு போலித்தனம் என்பதே. துறந்தவன் எப்படி துறந்தவன் ஆகிறான், துறக்கும் ஒன்று இருக்கும் வரையில் தானே அவன் துறவி? பற்றற்றவன் எப்படி பற்றற்றவன் ஆகிறான், பற்றிக் கொள்ளும் ஒன்று இருக்கும் வரையில் தானே அவன் பற்றற்றவன்?
மாறாக, ஒரு இசைக்கலைஞனோ எழுத்தாளனோ இந்த உலகை ஒரே சமயம் பற்றிக் கொண்டும் துறந்து கொண்டும் இருக்கிறான் என நம்புகிறேன். இந்த உலகைப் பற்றிக் கொண்டு அதைக் கடந்து போகும் முயற்சியே கலை. அதே நேரம் அவன் இந்த உலகில் இருந்து பறந்து வானிற்கு செல்வதும் இல்லை. அவன் திரும்பவும் பூமிக்கே வருகிறான். மீண்டும் இங்கிருந்து தாவுகிறான், மீள்கிறான். இந்த ஊசலாட்டமே கலை அனுபவம், படைப்பனுபவம். ஹைடெக்கர் சொல்வதைப் போல இந்த உலகில் “இருக்கிற” எவருமே இத்தகைய அனுபவத்தைப் பெறுகிறவர்களே. ஆனால் கலைஞன் இதை இன்னும் உக்கிரமாக, சிக்கலாக அறிகிறான், இன்னும் உன்னதமாக்குகிறான். வாழ்தலின் உன்னத மீமெய்யியல் (the sublime metaphysics of living) என்று படைப்பாக்கத்தைக் கூறலாம்.
ஒருவன் கலைஞனாக இருப்பதன் முழுமுதற் தகுதியே அவன் இந்த உலகுடன் மிகுந்த பற்று கொண்டிருப்பதே. ஒரு பெண்ணை எப்படியாவது சுகிக்க வேண்டுமென உங்கள் உடல் தகிக்கிறதா, அதை உங்களால் தங்குதடையின்றி ஏற்றுக் கொள்ளவும் முடிகிறதா, அதை உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் கலைஞன் ஆகலாம். அப்படி கலைஞன் ஆக இந்த உடல்ரீதியான இச்சையை கடந்து போவதற்கு கலையை பயன்படுத்துகிறீர்கள். ஒரு பெண்ணுடலை ஒரு ஸ்வர ஜதி மூலம் தொடுகிறீர்கள். ஒரு நுட்பமான வரி மூலம் இன்னும் ஆழமாக, பிரம்மாண்டமாக உணர்கிறீர்கள். அப்போது அதை அடையவும் கடந்து போகவும் உங்களால் முடிகிறது. ஆனால் இங்கு முக்கியமானது உங்களுடைய கலையின்பமானது - உங்களை கலைக்குள் வைத்திருக்கும் அந்த சங்கதியானது - கடப்பதில் இல்லை என்பதே. மாறாக, அது உலகில் இருந்து கொண்டே இல்லாமல் போவதில் இருக்கிறது. இருத்தலுக்கும் இன்மைக்கும் நடுவே ஒரு இடைவெளி வருகிறது. அந்த இடைவெளியும் இருத்தலுக்குள்ளே தான் இருக்கிறது (ஏனென்றால் நீங்கள் உலகில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள், ஒவ்வொரு நொடியும்.) பற்றியிருந்தாலோ பற்றற்றிருந்தாலோ நீங்கள் இந்த இடைவெளியை அறிய முடியாது. சொல்லப்போனால் இந்த இடைவெளியை அறியாமல் இங்கு யாரும் இல்லை, இருக்கவும் முடியாது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல அதன் உக்கிரம், தீவிரம், அளவு தான் மனிதர் இடையே வித்தியாசம்.
அதனால் தான் இளையராஜாவோ, ஒரு கலைஞனோ, எழுத்தாளனோ, சாமான்யனோ, ஒரு சாமியார் கூட இங்கு ‘சாமியார்’ அல்ல. ‘சாமியார்’ ஆக சாக வேண்டும் என்கிறேன். சாகையில் மட்டுமே உலகம் மறைகிறது. இடைவெளியும் மறைகிறது. இளையராஜா பற்றற்றவர் என்பது ஒரு மேலோட்டமான புரிதல் மட்டுமே. அவர் ஒரு கணம் உலகை மறக்கிறார். மீண்டும் நினைவு கொள்கிறார். இரண்டுக்கும் இடையே இந்த உலகில், அதன் இடைவெளியில், மிக அதிகமாக தன் இசை வழி திளைக்கிறார். இதுவே எழுத்தாளனுக்கும் நிகழ்கிறது. அது நிகழ அவன் ஒவ்வொரு கணமும் மிகுந்த பற்றுடன் இருக்க வேண்டும். ஆம், இளையராஜாவும் ‘பற்றாளரே’, அதனாலே அவர் உன்னதமான கலைஞன். நான் ஒரு எழுத்தாளனாக இளைராஜாவிடம் இருந்து ஒரு பொன்விதியைப் பெற்றால் அது “உலகில் இரு” என்பதே.
