முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின் “நீலகண்டம்” இருக்கும். தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது. மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும், அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம். ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும், ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல, அதிலேயே குவிந்திருக்க வேண்டும். நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன், கொந்தளிப்புடனே “நீலகண்டத்தைப்” படித்தேன்.
எந்தவித இரக்கத்தையும் தன்னிரக்கத்தையும் கோராமல் ஊனத்தைப் பார்க்க முயல்வது இந்நாவலின் ஒரு சிறப்பு. மனிதர்கள் அடிப்படையில் தன்னலம் மிக்கவர்களே. அதுவும் குடும்ப அமைப்புக்குள் - அது தியாகத்தைக் கோருவதாலே - அவர்கள் மிகவும் மூர்க்கமாக மாறுவார்கள். குறிப்பாக அந்த மாற்றுத்திறனாளிக் குழந்தையின் அம்மாவின் பாத்திரம் தன் குடும்பத்தினருடன் உறவை சீர்படுத்தியதும் அவர்களின் கைப்பாவையாக மாறி தன் மாற்றுத்திறனாளிக் குழந்தையைக் கைவிட முன்வருகிற இடம் வெகுசிறப்பு. அதுவும்
அவரது சாதிப் பின்னணியும், அதனாலே தன் கணவனிடத்து அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தும் ஆதிக்க பாவனைகளும், அது ஒரு தவறென அவருக்குத் தோன்றாதிருப்பதும் நாவலில் சரியாக வந்திருக்கின்றன. இந்த இடங்களை சுனில் எந்த ‘மனிதநேய நெஞ்சுநக்கலும்’, செண்டிமெண்டல் நாடகீயங்களும் இல்லாமல் சித்தரித்திருக்கிறார். இது எதார்த்தத்துக்கு வெகுநெருக்கமாக இருக்கிறது.
இந்த நாவலுக்குள் மூன்று நாவல்கள் உள்ளன: ஒன்று பெற்றோரின் தத்தளிப்புகளை, நெருக்கடிகளை, குற்றவுணர்வைப் பேசுவது. இரண்டாவது, மாற்றுத்திறனாளிக் குழந்தையின் மனநிலையை மொபைல் விளையாட்டுகள், எதார்த்தத்தைப் போன்றே தோன்றும் பகற்கற்பனையான மனவோட்டங்களைச் சித்தரிப்பது. மூன்றாவது, பின்நவீன கதையாடல்களின் தனியான ஒரு தடம். இவற்றில் இரண்டாவதே மிகவும் சிரமமானது என்பதாலே நாவலாசிரியரை அதற்காக வெகுவாகப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது.
குழந்தைக்கும் அவளது அப்பாவுக்கும் இடையில் எவ்வளவு முயன்றாலும் எட்ட முடியாத ஒரு தொலைவு தோன்றுகிறது. நாவல் இந்த பிரச்சினையைப் பற்றிப் பேசத் துவங்கி - எட்டாவது அத்தியாயத்தில் இருந்து - தடம் புரள்கிறது. பின்னர் பத்துக்கு மேற்பட்ட அத்தியாயங்களில் கதை இந்த அப்பா பாத்திரத்தின் அலுவலக, குடும்ப, பரம்பரைக் கதைகள், பின்நவீன கதையாடல்கள் என அவருடைய குற்றவுணர்வு, நெருக்கடிகள் குறித்த ஒரு தனிப்பயணமாகிறது. இதில் செட்டியார்களிடையே குழந்தையை தத்தெடுக்கிற மரபான சடங்கு, மனவளர்ச்சியற்ற குழந்தைகள் இறந்து தெய்வமாவது போன்ற இடங்கள் நாவலின் கதையின் ஒரு இணைக் கதையாடலாகிறது, அதாவது பிரச்சினையை மீள மீளக் காட்டுகிறது, ஆனால் மேலும் சிக்கலாக்கவில்லை.
ஒரு உதாரணத்திற்கு, மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதில் பீஷ்மர் போன்றவர்கள் செய்கிற எதிர்பாராத தவறுகள் ஒரு பெரும் பாவமாக உருமாறி அவர்களையும், அடுத்தடுத்த வாரிசுகளையும் வந்து திரும்ப அடிக்கையில் அதன் நியாயமும் அபத்தமும் கதையைத் தீவிரமாக்குகிறது. ஒரு சிறு பிழையின் பெரும் ரத்தக்களறியான விளைவை, துரோகங்களைக் காண்கிறோம். ஜெயமோகனின் “ரப்பரில்” துவக்கத்திலே அந்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குடும்பத்தின் மூத்தவர் தன் முன்னேற்றத்துக்காக செய்கிற சிறிய பாவங்கள் (இயற்கையை அழிப்பது), அவருக்கு முன்பு அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நாயர்கள் செய்த தீண்டாமைக் குற்றங்கள் சித்தரிக்கப்படும். இவற்றின் விளைவு நாவலின் முடிவில் பாத்திரங்களுக்கு நிகழ்வனவற்றுடன் முடிச்சிடப்படும். அப்போது விளைவுகள் வாழ்க்கை மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கிற அளவுக்கு இருக்கும். அப்படியொரு சிக்கலை நோக்கி “நீலகண்டத்தின்” குடும்பக் கதைகள், தொன்மங்களில் வரும் குற்றவுணர்வு சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட திசைகளில் பயணித்ததால் சுனிலால் அதில் அக்கறை செலுத்த முடியவில்லை என நினைக்கிறேன். ஆனால் கடைசி சில அத்தியாயங்களில் தான் அதுவரை குறிப்புணர்த்திய கதையாடல்களுடன் கிளைமேக்ஸை அழகாக முடிச்சிட்டு நிறைவைத் தந்து விடுகிறார்.
இந்நாவலின் மற்றொரு குறையென்றால் அது மாற்றுத்திறனாளி உடலை மற்றமையாகப் பார்க்கும் போக்கே. மற்றொரு பிரச்சினை விக்கிரமாதித்யன் வேதாளம் உரையாடல் பகுதிகளில் (நாவலுக்குள் வரும் மூன்றாவது நாவல்) சுனில் அறப்பிறழ்வு பற்றி ஒரு தத்துவச் சிக்கலை எழுப்ப முயல்கிறார். ஆனால் அது தீவிரமாக நிகழவில்லை.
ஒருவேளை இவ்வளவு பேராவலுடன் நாவலின் களத்தை அவர் அமைக்காவிடில் இன்னும் வலுவாக அவரால் மாற்றுத்திறனாளிகளின், அவர்களுடைய பெற்றோரின் உலகைப் பேசியிருக்க முடியும். ஆனால் பேராவல் தானே உன்னதமான நாவல்களை எழுத நம்மை உந்தித் தள்ளுகிறது. அதனால் தவறில்லை. இந்த சிறுகுறைகளைக் கடந்து பார்த்தால் தமிழில் நான் படித்த நாவல்களில் என்னால் மறக்கவே முடியாத, பல படங்களில் மனசாட்சியைப் பற்றி உலுக்கிற நாவலாக“நீலகண்டம்” உள்ளது.
