மன ஊக்கம் இருந்தால் காலம் ஏற்படுத்தும் தடைகளைக் கடந்து சிகரம் தொடலாம் என்பதற்கு விராத் கோலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
2019இல் இருந்து 2022இன் துவக்கம் வரை அவர் மோசமான ஆட்டநிலையில் இருந்தார். அணித்தலைவதாக புற அரசியலாலும் தனது தவறான முடிவுகளாலும் சில சறுக்கல்களை சந்தித்த காலத்திலும் அவர் தவறாமல் தினமும் கடுமையான மட்டையாட்ட பயிற்சியில் ஈடுபடுவார். உடனடியாக பலன் இல்லையே என கலங்கி பயிற்சியை கைவிடவில்லை. அதனாலே இன்று அவரால் அந்த முயற்சியின் பலனை அறுவடை பண்ண முடிகிறது.
இது நாவல் எழுதுவோருக்கும் பொருந்தும் - ஒரு நாவலாசிரியன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறந்த படைப்பை எழுதப் போவதில்லை. முடிக்க இயலாமல் பாதியில் தூக்கி வீசப்பட்ட நாவல்கள், எழுத்தில் தோல்விகள் இருக்கும். ஆனால் அதற்காக சோர்ந்து விடாமல் அவன் தினமும் சில மணிநேரங்களோ சில நிமிடங்களோ நாவலெழுத முயல வேண்டும். சரியான வேளை வரும் போது அவன் மேகங்களை விலக்கி ஆதவனாக வெளிப்படும் போது, இந்த முயற்சி, உழைப்பு கைகொடுக்கும். எதுவும் எப்போதும் வீணாகாது!