வாழ்க்கையில் வேறெந்த கனவுகளையும் விட திட்டவட்டமான இலக்குகளே அவசியம். அதற்கு ஒரு கால எல்லையும் அமைத்திட வேண்டும். உ.தா நல்ல எழுத்தாளனாவது என்பதை விட ஒரு கால அளவுக்குள் ஒரு நாவலோ பத்து கதைகளோ எழுத வேண்டும் என்பது சிறப்பான இலக்கு. அது இன்னும் நேரடியானது, தூலமானது. 'நல்ல' என்பது, எழுத்தாளனாக இருப்பது என்பது அரூபமானவை. அரூபமாக நம்மை வரையறுப்பது தேவையில்லாத அழுத்தத்தில், நெருக்கடியில் நம்மை வைத்திருக்கும். தொடர்ந்து நான் எவ்வளவு பெரிய ஆள் என சவடால் விட்டுக்கொண்டிருக்கவோ ஜால்ராவுக்கு ஆள் சேர்க்கவோ வேண்டி இருக்கும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தரும் சந்தோஷத்தை கற்பனையான சுயமதிப்பீடுகள் தராது.
ஒரு நாவலை தினமும் எழுதுவதை விட இத்தனை காட்சிகள், பக்கங்கள், சொற்கள் எழுதுவேன் என முடிவெடுப்பது சிறப்பானது, நிஜமானது.
இலக்கியம், தத்துவம் படித்து அறிவு பெற்றவனாவேன் என்பதை விட இன்னின்ன வகை நூல்களைப் படிப்பேன், இவ்வகை தத்துவத்தில் இவ்வருட முடிவுக்குள் ஒரு குறிப்பிட்ட நூல்களைப் படித்து முடித்து அதைப் பற்றி பேசுவேன், எழுத்வேன் எனும் இலக்கு மேலானது.
பணக்காரன் ஆவேன் என்பதை விட இவ்வளவு ஆயிரங்கள், லட்சங்களை இந்த காலத்திற்குள் சம்பாதிப்பேன் என்பது பயனுள்ளது.
பாடத்திட்ட அமைப்பில் இதை outcome-based learning என்கிறார்கள். அதாவது இலக்கை திட்டவட்டமாக தீர்மானித்து விட்டு திட்டத்தை உருவாக்குவது. திட்டத்தை அமைத்து விட்டு இலக்கை நாடுவது தவறானது.
மகிழ்ச்சியாக வாழ்தலும் அப்படியே. எது மகிழ்ச்சியைத் தரும் என அடையாளம் காணாமல் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
நான் தினமும் எழுந்ததும் இன்று இந்த புத்தகத்துக்காக இத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என நினைத்துக் கொள்வேன். தூங்கப் போகுமுன் அதை சாதிப்பேன். இல்லாவிடினும் அடுத்த நாள் எழுத்த மீண்டும் அன்றைய இலக்கை முடிவு செய்வேன். திரும்பத் திரும்ப மனதிடம் சொன்னால் நான் அதை செய்து விடுவேன். அல்ல, என் மனமே அதை செய்து விடும். அவ்வளவு தான். நான் ஒரு நல்ல எழுத்தாளனா இல்லையா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. நான் கடந்த வருடத்தை விட இவ்வருடம் மேம்பட்டிருக்கிறேனா என்றும் யோசிப்பதில்லை. இதிலெல்லாம் அர்த்தமில்லை. கடந்தாண்டு மூன்று புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன் என்றால் இந்த ஆண்டு எத்தனை? அதை எப்படி செய்வது? என் நேரத்தை எப்படி மேலாண்மை செய்து என் இலக்கை அடைவது? இப்படித்தான் யோசிக்கிறேன்.
மனுஷ்யபுத்திரன் 14 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்னார், "நீ 'சிறப்பாக' எழுத முடியாது. எழுத மட்டுமே முடியும். நீ உள்ளுக்குள் சிறப்பாக இயங்கினால், உனக்கு சரக்கிருந்தால், உன் எழுத்தும் சிறப்பாக அமையும். அது உன் கையில் இல்லை. அதனால் அதைப் பற்றி கவலைப்படாதே!" நாம் கடுமையாக உழைக்கலாம், பயிற்சி செய்யலாம், அது நம் படைப்பு மேம்பட உதவும். ஆனால் அதுவும் ஓரளவுக்குத் தான். நாம் எதுவாக இருக்கிறோமோ அதுவே நம் எழுத்து. அதை மாற்ற முடியாது எனும் போது ஏன் உன்னதத்தை நாடி வருத்திக் கொள்ள வேண்டும்? எந்த துறையிலும் நாம் நாணயமாக இருந்தால் அங்கு நம் வெளிப்பாடு சிறப்பாக அமைவதைக் காண்கிறோம். எனில் உன்னதத்தை நாடுவதை விட இயல்பாக இருத்தலும், அதில் ஒர் தொடர்ச்சியை தக்க வைப்பதும், அதைத் தூலமாக வரையறுப்பதுமே முக்கியம்.