டி20 உலகக்கோபையின் முதற் போட்டியில் நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியாவின் துவக்க வீரர்கள் பதற்றமாக ஆடி சொதப்பிட, நிச்சயமாக தோற்க வேண்டிய ஒரு ஆட்டத்தை கோலி - பாண்டியாவின் துணையுடன் - இறுதி வரை போராடி வென்றளித்தார். அதுவும் ஹாரிஸ் ரவுபின் 19வது ஓவரில் அவர் அடித்த இரு சிக்ஸர்களையும் மறக்க முடியுமா? கோலியின் தலைசிறந்த டி20 அரைசதம் இதுதான். இந்த ஆட்டநிலையை அவர் இறுதிப் போட்டி வரை எடுத்து சென்றால் கோப்பை நமக்குத் தான் எனத் தோன்றுகிறது.
அதே நேரம் இப்போட்டி முழுக்க பெரிய ஆட்டத்தில் மோதுகிற கால் நடுக்கம் தெளிவாக இந்தியாவுடம் புலப்பட்டது. இன்று கிட்டத்தட்ட choke ஆனார்கள். ஒருவேளை அரை இறுதியிலும் choke ஆனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கோலியின் இன்றைய இன்னிங்ஸ் போல சில அதிசயங்கள் முக்கியமான போட்டிகளில் நடந்தாலே இந்தியாவால் முன்னேற முடியும்.
ஒப்பிடுகையில் பாகிஸ்தான் இன்னும் மேலான தன்னம்பிக்கையுடன் ஒழுங்குடன் ஆடினார்கள். இறுதி வரை கலங்கவில்லை. ஆனால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் - சிங்கைத் தவிர - துவக்க ஓவர்களில் நீளத்தை fullஆகப் போடவில்லை. சற்று தள்ளி பந்தை லெங்த்தில் போட்டதாலே தொடர்ந்து எட்ஜ் வாங்காமல் பந்துகள் மட்டையை பறக்கும் முத்தம் மட்டும் இட்டுச் சென்றன. இல்லாவிடில் புவனேஸ்வருக்கு 3 விக்கெட்டுகள் முதல் 5 ஓவர்களுக்குள் கிடைத்திருக்கும். அதே போல வெவ்வேறு கட்டங்களில் எப்படியாவது சாதிக்க வேண்டும் எனும் மிகை விருப்பத்தில் வேகவீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். அதனாலே 130க்குள் ஆட்டம் இழந்திருக்க வேண்டிய பாகிஸ்தான் 159ஐ எட்டியது.
மட்டையாட்டத்திலும் விக்கெட் கொடுக்கக் கூடாதே எனும் பயத்தில் மிகவும் தடுப்பாட்டத்த நிலைக்கு போனோம். அதனால் பாகிஸ்தான் வீரர்களால் தம் விருப்பப்படி பந்து வீசி கட்டுப்படுத்த முடிந்தது இந்திய அணி இப்படி தன் மீது தானே தேவையில்லாத அழுத்தத்தை போட்டுக் கொள்வது ஒரு பிரச்சினை. கோலியும் ஹர்த்திக்குமே விதிவிலக்குகள். அவர்கள் உணர்ச்சிவயப்படாமல் தோனி ஸ்டைலில் கூலாக ஆட்டத்தை இறுதி வரை எடுத்து சென்றனர். வென்றனர். அதனாலே ஆட்டமுடிவில் ரோஹித் ஓடி வந்து கோலியைத் தூக்கிக் கொண்டார், அவரது கண்கள் ஈரத்தில் மினுங்கின. இன்றைய போட்டியில் கோலி இல்லாமல் நிலைமை தலைகீழாகியிருக்கும் என அவர் அறிவார்.
இந்தியா இப்படி நெருக்கடி சமயங்களில் பயந்து நடுங்குவதை நிறுத்தினால் இந்த உலகக்கோப்பை தொடர் பட்டாசாக இருக்கும். வரும் ஆட்டங்களில் தெரியும் இவர்கள் துணிந்தாடுவார்களா அல்லது நெருப்புக் கோழி போல தலையைப் புதைத்துக் கொண்டு கோலி தம்மைக் காப்பாற்ற மாட்டாரா என எதிர்பார்த்திருப்பார்களா என.