இது ஒட்டுமொத்தமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. என்னுடைய அனுமானம் இருவருக்கும் இடையே உறவு மோசமான பின்னர் வேறு நபர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.
தன்னுடனான திருமணத்துக்கு முன்பு மற்றொரு திருமணம் செய்திருந்ததை மறைத்து திவ்யா தன்னை ஏமாற்றியதாகவும், தன் விருப்பத்தை மீறி திவ்யா கர்ப்பத்தைக் கலைத்ததாக அரணவ்வும், அரணவ் தன்னைத் தாக்கி கர்ப்பத்தைக் கலைத்ததாகவும் அவருக்கு வேறு பெண்ணுடன் உறவிருப்பதாக திவ்யாவும் கூறுகிறார். இரண்டுமே பாதி உண்மைகளாக இருக்க வேண்டும். உறவு முறியும் போது ஏற்படும் பகையுணர்வை சில ஆண்கள் வன்முறையாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெண்கள் தமக்கு சாதகமாக உள்ள சட்டங்கள், மகளிர் காவல்நிலையம் போன்ற அமைப்புகளைக் கொண்டு ஆண்களை சிறையில் தள்ளுவார்கள். இரு தரப்பையும் செலுத்துவது ஒரே உணர்வு தான்.
திருமணம் செய்வதால் இவ்வளவு பிரச்சினைகள் வருமெனத் தெரிந்தும் ஏன் போய் சிக்கிக் கொள்கிறார்கள்? ஓரினச் சேர்க்கையாளர்களைப் பாருங்கள், சமூக சட்ட அங்கீகாரம் பரவலாக இல்லாததாலே அடிதடி, நீதிமன்றம், வீட்டுமுன் தர்ணா, வரதட்சணை, அதன் பெயரில் போலி வழக்குகள், விவாகரத்து, அதற்காக பல ஆண்டுகள் தெருத்தெருவாக அலைதல் எதுவும் இன்றி அமைதியாக நேசித்து சேர்ந்து வாழ்ந்து ஆரவாரமின்றி பிரிந்தும் போய் விடுகிறார்கள். ஆனால் இருவர் உறவுக்குள் சமூகம், சட்டம் வந்ததும் பிரச்சினை, தகராறு, வழக்கு, பஞ்சாயத்து என பல பிரச்சினைகளும் கூடவே வருகின்றன. ஒட்டகம் நுழைந்ததைப் போல் இவர்கள் நுழையாத வரை சுபம்.
ஒருவிதத்தில் இருபாலின உறவாளர்கள் துரதிஷ்டசாலிகள். ஆண்-பெண் உலகம் ஒரு அண்டர்வெல்டாக மாறி வருகிறது. அவர்கள் இடையே போலீஸ், வக்கீல், நீதிமன்றம் புழங்குவது அதிகரித்து வருகிறது.