Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆண்-அடிமை யுகத்துக்கான ஆண்கள் தின வாழ்த்துகள்





ஆண்களுக்கு இது நெருக்கடியான காலம். ஆண்களுக்கு இது நிம்மதியற்ற காலம். ஆண்களுக்கு இது அவநம்பிக்கயின் ஊழிக்காலம். ஆண்களுக்கு இது அடிமை யுகம்!


முன்பு ஆண்கள் - நமது தந்தையரின், தாத்தாக்களின் காலத்தை சொல்கிறேன் - ஆண்களாக இருந்தால் மட்டும் போதும். அவர்கள் கூடுதலாக எதையும் செய்ய வேண்டி இருக்கவில்லை. சமூகம் எதிர்பார்ப்பதை செய்தால் போதும். அதற்காக அவர்கள் கடும் பாதுகாப்பின்மையை, இழப்புகளை, சமூக ஒடுக்குமுறையை சந்திக்க வேண்டி இருக்கவில்லை. முன்பு அவர்கள் ஆணாக இருப்பது குறித்து குற்றவுணர்வை அடைய வேண்டி இருக்கவில்லை. ஆணாக இருக்க முடியாது என்று சொன்னாலும் அடிப்போம் எனும் சமூகத்தை எப்படி சமாளிப்பது என முழி பிதுங்க வேண்டி இருக்கவில்லை. சமூகம், பொருளாதாரம், சட்டம், ஊடகம் அனைத்தும் தமக்கெதிராக திரண்டு நிற்பதைக் கண்டு இதற்கெதிராகப் பேசினால் கூடுதல் அடிவிழுமோ என அஞ்சவும், கடும் அழுத்தத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்தால் நொறுங்கி காணாமல் போய் விடுவோமே என திக்குத்தெரியாமல் நிற்கவும் வேண்டி இருக்கவில்லை. முந்தைய ஆண்களைப் போல மரபின், கூட்டுக்குடும்பத்தின், நிலவுரிமையின் கட்டமைப்புகளுக்குள் பதுங்கிக் கொள்ள இன்றைய ஆண்களால் முடிவதில்லை. 


இன்றைய ஆண் மரபார்ந்த பொருளில் ‘ஆணும்’ இல்லை, ஒரு நவீன ஆணாக அவனால் இருக்கவும் முடிவதில்லை. அவன் பெரிய மீசை வைத்துக் கொள்வதை, கட்டைக்குரலில் பேசுவதை, மிடுக்காக நெஞ்சை விரித்து நடைபோடுவதை கல்வி அமைப்புகளோ நவீன நிறுவனங்களோ அனுமதிப்பதில்லை. அந்த ஆண் பிம்பத்தை இன்றைய ஊடகங்களும் விரும்புவதில்லை. அவன் மழுங்க சிரைத்துக் கொண்டோ சிறிய மீசை வைத்துக் கொண்டோ சிறு கூச்சத்துடன் புன்னகைத்துக் கொண்டு உலகை எதிர்கொள்கிறான். உயரமனவன் எனில் சற்று கூன் போட்டுக் கொள்கிறான். பெண்கள் முன்னிலையில் தன்னை துணிந்து முன்னிறுத்தினால் அது திமிரெனப் பார்க்கப்படுமோ என அஞ்சி அவன் சற்று கூச்சத்துடன், சற்றே மிருதுவான குரலில் பேசுகிறான். அவனுடைய ஆண் தன்மை - அவனுடைய திறமை, பணம், அழகு, திடகாத்திரமான உடலமைப்பு, பேச்சுத்திறனை - வைத்து முடிவு பண்ணப் படுவதால் தான் பெண்களின் மதிப்பீட்டின்படி நிலைக்க முடியுமா என அவன் பதறுகிறான். தான் பணிவாகப் பேச முயல்கையில் அதை ஏன் பெண்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள், ஏன் தன்னை மதிக்கவில்லை, ஏன் முரட்டுத்தனமான, நுண்ணுணர்வற்று சுரண்டுகிற ஆண்களையே இப்பெண்கள் அதிகமாகக் கொண்டாடுகிறார்கள் என அவனுக்குப் புரியவில்லை. நம்மிடம் இப்படி சொல்லப்படவில்லையே என அவன் தன்னையே கேட்டுக் கொள்கிறான். இந்த அவனுக்கு மிகவும் புதிராக மாறிவிட்டது.


இந்த நவீன உலகில் பெண்களால் தம் மரபான பெண்மையையும், நவீனமான சுதந்திரத்தையும் கொண்டாட, முன்வைக்க, சமநிலை பேண் முடிவதைப் போல அவனால் முடிவதில்லை. ஆண் கும்பலின் பகுதியாக தான் இருந்தால் முரடன் என, பண்பற்றவன் எனப் பார்க்கப்படுவோமோ என தயங்கி அவன் பெண்களுடனே நட்பு வைக்க விரும்புகிறான். அதைவிட அதிகமாக பெண்களுடன் இருப்பதே அவனுக்கு சௌகர்யமாகவும் இருக்கிறது. பெண்களே தனக்கு ஆண்களை விட நெருக்கமானவர்கள் என எண்ணுகிறான். இது தன ஆண்மையை சமரசம் பண்ணும் செயல் அல்லவா என்றும் அவனுக்கு குழப்பம் வருகிறது. தம்முடனே கைப்பிள்ளையாக சுற்றும் ஆணை அவரக்ள் போதுமானளவுக்கு மதிப்பதில்லை என்றாலும் அவனால் திரும்ப ஆண்களிடம் செல்ல முடிவதில்லை. பேசாமல் இப்படியே இருந்து கொள்வோம் என்று நினைத்து சமாதானம் ஆகிறான்.   


இன்னொரு பக்கம் தன்னை ஆணாக நிரூபித்தாக வேண்டும் எனும் முயற்சியில் திரும்பத் திரும்ப கோமாளியாகிறான் மற்றொரு ஆண். அவன் தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பெண்களைப் பற்றி பல கற்பனைகளை வளர்த்து பயத்திலும் கசப்பிலும் தனித்திருக்கிறான். 


ஆணாக பெண்ணாக பெண்ணுடன் இருப்பதில் நவீன பெண்ணுக்கு சிக்கல் இருப்பதில்லை - அவள் எப்போதும் பெண்களுடன் இருக்கிறாள். அவளால் தனித்திருக்கவும் முடிகிறது. எங்கு மரபார்ந்த அடையாளங்களைப் பேண் வேண்டும், எங்கு தன்னை வெளிப்படுத்த வேண்டும் என அவளுக்குத் தெரிந்திருக்கிறது. கல்வியை, வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறும் உழைப்பு இருக்கிறது; வெளியே நவீனம், கலகம் எனக் காட்டிவிட்டு குடும்பம், குழந்தைப்பேறு என வந்து விட்டால் எந்த புரட்சியும் பண்ணாமல் அந்த கொடுமைகளை சமூக அங்கீகாரத்துக்கும் அதிகாரத்துக்கும் பயன்படுத்தும் தந்திரம் அவளிடம் இருக்கிறது. என்ன பிரச்சினை என்றாலும் பேசியே ஆணின் வாயை அடைக்க அவளுக்குத் தெரிகிறது. இதுவும் போதாதென்றால் இருக்கவே இருக்கிறது பெண்ணியம் எனும் கோட்பாட்டுக்கு கிராப் வெட்டி, நுணுகக் குறுக்கி வெறும் ஆணினத்தை ஒட்டுமொத்தமாக வில்லனாக்கும், எல்லா பிரச்சினைகளுக்கும் ஆயுதமாக்கும் சாத்தியம். ஆனால் தன்னம்பிக்கையும் துணிச்சலும் குறைவான, பேசவும் தெரியாத மொட்டையான ஆண்களை அவளுக்குப் பிடிக்கவில்லை. இன்றைய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என அவளுக்குத் தெரிகிறது. சரி இருந்து தொலைக்கட்டும், ஒரு போமரேனியன் நாயைப் போல வைத்து கொள்வோம் என நினைக்கிறாள். ஒரு பக்கம் தான் ஒவ்வொரு கணமும் ஒடுக்கப்படுவதாக குரலெழுப்பிக் கொண்டே இந்த ஆணை எப்படி தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளுவது, அவனை எப்படி பிற பெண்களிடம் இருந்து பாதுகாப்பது என கவலையும் கொள்ளுகிறாள்.


பெண்ணுக்குப் பெண்ணியம் என்றால் ஆணாகிய தனக்கு என்ன என அவனுக்குத் தெரியவில்லை. அவன் போனால் போகட்டும் என பேஸ்புக்கில் பெண்ணிய சீற்றங்களுக்கு விருப்பக்குறி இட்டு “அருமை தோழி” என பின்னூட்டம் இட்டு “ஹப்பாடா” எனக் கடக்கிறான்.  


இன்றைய பெண்ணுக்கு பெண்ணிய கோஷமிடும் ஆண் மீது நம்பிக்கையில்லை. அவளுக்கு தன் வால் பிடித்து நடக்கும் ஆணைப் பார்த்தாலும் சற்று அருவருப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறான் எனும் சந்தேகம் அவளை சற்று விழிப்புடனும் வன்மத்துடனும் இருக்க வைக்கிறது. அதே நேரம் அவளுடைய ஆசை அவளை இந்த விழிப்பைக் கடந்தும் ஆணை தன்வயப்படுத்த தூண்டுகிறது. அந்தரங்கத்தில் தன் அத்தனை வேடங்களையும் ஆயுதங்களையும் கழற்றி விட்டு சரணடைகிறாள். அதற்கு அவன் தன்னிடத்து கடன்பட்டிருக்கிறான் என நம்புகிறாள். தான் சரணடையும் ஆண் தன் அடிமையாக இருக்க வேண்டும் அவளுடைய சமூகப் பிரக்ஞையும், அவன் தன்னை அடிமைப்படுத்த வேண்டும் அவளுடைய உபமனமும் விரும்புகிறது. இரண்டு விழைவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. அவளிடம் இருமுகங்களாக வெளிப்படுகின்றன. இந்த இரு முகங்களில் எதனிடம் தான் பேசுவது என அவன் குழம்புகிறான். 


கவலைகள் ஒரு ஆணை சூழ்கையில் அவனுக்கு தோள் சாய்ந்து அழவோ கண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவோ இந்த சமூகமோ குடும்பமோ வந்து நிற்பதில்லை. ஆண் ஏன் அழ வேண்டும் என யாருக்கும் புரியவில்லை. அவனை எந்த உணர்ச்சியும் இல்லாத, வெறுமனே சம்பாதிக்கிற எந்திரமாக மட்டுமே வேலையிட, குடும்பம், பெற்றோர், சமூகம் என எல்லா தரப்பினரும் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் இன்றைய சூழலில் அவன் மெல்லுணர்சசிகளும் மென்மையும் நெகிழ்வும் கொண்டவனாகவும் இருந்தாக வேண்டும். அன்பையும் பிரியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில் காதலி, மனைவி, குழந்தைகள் என யாருமில்லாமல் தனிமைப்பட்டு விடுவான். அப்படி உணர்வுவயப்படுகிற, பிரியம் காட்டுகிறவனுக்கு எப்படி வருத்தங்களும் ஏமாற்றங்களும் இல்லாமல் போகும்? அவனுக்கு ஏமாற்றங்களோ கவலையோ இல்லாமல் எப்படி இருக்கக் கூடும்? ஊடகங்களில் இருந்து குடும்பம் வரை இந்த எளிய உண்மை ஒருவருக்கும் புரிவதில்லை. 


ஒரு பெண் தெருவில் நின்று ஐந்து நிமிடம் அழுதால் உடனே ஐம்பது பேர் கூடி விடுவார்கள். அவளாகவே விடுங்கய்யா என்றாலும் விட மாட்டார்கள். உதவாமல் அகல மாட்டார்கள். தோழிகள், உறவினர், பெற்றோரில் இருந்து சமூகவலைதளங்கள் வரை பெண்ணை அரவணைத்துக் காப்பாற்ற இங்கு பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் தெருவில் நின்று அழுதால் “பைத்தியம் போல” என பார்த்து விட்டு கடந்து விடுவார்கள். எல்லாருக்கும் ஒரே இதயம் தானே? ஒரே கண்ணீர் தானே?


மலம் அள்ளுவதில் இருந்து ராணுவம் போன்ற ஆபத்தான பணிகளில் உயிர்விடுவது வரை ஆணின் இழப்புகளேஅதிகம். சம உரிமை கோரும் போதும் பெண்கள் தமக்கு உயிராபத்தில்லாத, உடல் சிதைவு ஏற்படாத தொழில்களிலே புகுந்திட விரும்புகிறார்கள். உலகில் மிக அதிகமாக தற்கொலை புரிவது, விபத்துகளில் சிக்கி அழிவது, மாரடைப்பில் சாவது ஆண்களே. மிக அதிகமாக நெருக்கடியை, அழுத்தத்தை அனுபவிப்பது ஆண்களே. 


ஒரு குழந்தை பிறந்ததும் ஆண் அப்பாவாகிறான். ஆனால் அது ‘நிபந்தனைக்குட்பட்ட சமூக அடையாளம்’ மட்டுமே என அவனுக்கு அப்போது புரிவதில்லை. அவன் மனைவி அவனை நிராகரிக்க முடிவெடுத்தால் அவனுடைய அப்பா எனும் இடமும் இல்லாமல் ஆகி விடும். இதுவே சட்டம் சொல்லுவது. அதன் பிறகு அவன் குழந்தையை ஒரு விருந்தினனைப் போல அவ்வப்போது சந்திக்கலாம், ஆனால் வளர்க்க முடியாது. அவன் தன் குழந்தைக்கு மாதாமாதம் செலவுக்கு பணமளிக்க வேண்டும், ஆனால் அவன் நினைக்கும் போது பார்க்கவோ பழகவோ முடியாது. சரி அந்தளவுக்கு தான் நமக்கு உரிமை என்று அவன் குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்காமல் இருந்தால் ஒப்புகொள்ள மாட்டார்கள். நீ அப்பன் தானே எனத் திட்டுவார்கள். தாலியைக் கழற்றியதும் “நீ அப்பான்னு யார் சொன்னது?” எனக் கேட்பார்கள். அப்பா தான், ஆனால் அப்பா இல்லை. குடும்பம் உடையும் வரை இந்த அபூர்வ உண்மையை யாரும் உணர்வதில்லை. ஊடகங்களும் இதைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் சமூகம், குடும்பம், உறவுகள், நீதித்துறை என எங்குமே அவனுடைய அப்பா எனும் அடையாளத்துக்கு அங்கீகாரம் இல்லை. அவனுடைய தங்கை, அக்கா பிள்ளைகளுடன் அவனுக்கு உள்ள பந்தம் கூட இப்படி ஒரே நாளில் மாயமாவதில்லை. என்னதான் பெரிய சண்டையானாலும் அவனுடைய மாமன் உறவை மறுக்க முடியாது. தமிழ் சமூகம் ஏன் இன்னமும் ரத்த உறவை, சாதியை விட்டுக் கொடுப்பதில்லை எனப் புரிகிறதா? ஏனென்றால் அங்கு மட்டுமே ஒரே நாளில் அவன் அந்நியனாவதில்லை. இத்தனைக்கும் அவன் தன் ரத்தத்தையும் நேரத்தையும் தன் மனைவிக்கும் குழந்தைக்காகவுமே அதிகம் செலவிடுகிறான். ஆனால் அங்கு ஒரே நாளில் அவன் எச்சில் இலையாகி விடுகிறான். 


இந்த சமூகத்தில் ஒரு பெண் எப்போதும் தனிமைப்படுவதில்லை, அவளாகவே விரும்பி ஒதுங்கி இருந்தால் ஒழிய. அவளைப் பாதுகாக்க வேண்டும், ஆதரவளிக்க வேண்டும் எனும் துடிப்பு குடும்பம், சொந்த பந்தத்தில் இருந்து சமூகம், சட்டம் வரை பரவலாக உள்ளது. அவளுக்கு ஒரு வலி என்றால் அதைப் பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் வருகிறார்கள். அவளுக்கு எப்போது வேண்டுமெனினும் தாய் வீட்டுக்குத் திரும்ப முடியும். சமூகத் தொடர்புகளையும் அவள் எப்போதுமே வலுவாக வைத்துக் கொள்ளுகிறாள். ஆனால் ஆணுக்க்கோ அவனுடைய தொழிலுக்கும் பணியிட பொறுப்புகளுக்கும் வெளியே ஒரு தொடர்புவலை இருப்பதில்லை. வேலைக்காக நகரத்துக்கு பெயரும் ஆணுக்கு தாய் வீடு என ஒன்று இருப்பதில்லை. வேலையில்லாமல் போன, பெண்களால் தனிமைப்படுத்தப்பட்ட  ஆண்கள் நோய் வாய்ப்பட்டு ஆதரவின்றி கிடந்து சாவதை நாம் பல இடங்களில் காண்கிறோம். ஆனால் பெண் அப்படி மிக அரிதாகவே சாகவிடப்படுவாள். மிக மிக கீழான மட்டத்தில் வாழும் பெண்களைத் தவிர, பெரும்பாலான பெண்கள் எங்கேயாவது யாருடனாவது ஒண்டி பிழைத்துக் கொள்ளுகிறாள். உழைத்தால் தான் சோறு என்பது ஆணுக்கு மட்டுமேயான நிபந்தனை. 


ஒரு பெண் வயதுக்கு வந்தால் கொண்டாடும் சமூகம் ஆணின் பாலியலை சிறிதாவது மதிக்கிறதா? அவன் திருமணமாகாமல் திரிந்தால் அதை ஒரு பொருட்டாக மதிக்கிறதா? பொறுமையா வேலை தேடிக்கோ, இப்போ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ என ஏன் ஆணிடம் சமூகம் கோருவதில்லை? ஏன் சம்பாதித்தால் மட்டுமே செக்ஸ் என நிர்பந்திக்கிறது? பெண்ணுக்கு ஏன் இந்த நிர்பந்தம் இல்லை? கடந்த சில பத்தாண்டுகளாக பெண்களுக்கு ஆணுக்கு சமமாக சம்பாதிக்கிறார்கள், அதை பெற்றோரும் ஊக்கப்படுத்துகிறார்களே? ஏன் ஆண் மட்டும் சம்பாதிக்க வேண்டியவன் என நினைக்கிறார்கள்?


சொத்துரிமை பற்றி இன்று பெண்ணியவாதிகள் கவலையுடன் பேசுகிறார்கள். இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்து சமமாக அளிக்க வேண்டும் என்பதே சட்டம். நிறைய இடங்களில் பெண்கள் சொத்தை கேட்டு வாங்கியும் கொள்கிறார்கள். ஆனால் இங்கே மற்றொரு சுரண்டலும் உள்ளது - கல்யாணத்தின் போது தமக்கு நகையும் போட வேண்டும் என பெண்கள் நேரடியாகவே தம் பெற்றோரிடம் கோருகிறார்கள். இவ்வளவு லட்சத்துக்கு, கோடிக்கு நகை வேண்டும் என அடித்துக் கேட்கும் பெண்கள் இன்று உண்டு. அதே நேரம் சொத்தில் ஒரு பகுதியையும் வாங்கிக் கொள்ளுகிறார்கள். ஆண்களுக்கோ தன் பெற்றோர் மறையும் வரை சொத்து பணத்தில் உரிமையில்லை. ஒரு பெண்ணுக்கு சொத்து என்பது நகையாக, பணமாக தம் இருபது வயதிலேயே கிடைத்து விடுகிறது என்றால் ஆண் தன் பெற்றோரின் சொத்தில் இருந்து ஒரு ரூபாய் வாங்கவே ஐம்பது வயது ஆகி சில நேரங்களில் அதுவும் கடந்து மூக்கில் பல் முளைத்து விடும். பழைய காலத்தில் நிலவுடைமையே சம்பாத்திய மார்க்கமாக இருந்த போது ஆண் தன் பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து குடும்ப நிலத்தில் வேலை செய்து வாழ முடிந்தது. அதாவது சொத்து கைக்கு வருமுன்னரே அதை அவனால் அனுபவிக்க முடிந்தது. ஆனால் இன்று நகரத்திற்கு நாம் பெயர்ந்து விட்ட பின்னர் அவனுக்கு அப்படி வீடோ சொத்தோ அனுபவிக்க கிடைப்பதில்லை.

 வரதட்சணை ஒரு ஆணாதிக்க நடவடிக்கை, ஒடுக்குமுறை என்றெல்லாம் பேசும் போது இதை பெண்கள் தான் கேட்டு வாங்கிப் போகிறார்கள் எனும் உண்மையை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். முன்பு அசையா சொத்து ஆணுக்கு மட்டுமே என இருந்த போது அதற்கு ஈடுகட்ட வரதட்சிணை எனும் நடைமுறை தோன்றியது. ஆனால் இன்று சட்டம் பாலின சமத்துவத்தை சொத்து விசயத்தில் நிறுவிய பிறகு பெண்கள் வரதட்சிணையையும் வாங்கி சொத்தையும் பங்கு கேட்கிறார்கள். பெண்ணைப் பெற்ற அப்பாக்கள் கடும் அழுத்தத்திற்காளாகி ஓட்டாண்டியாவது ஆண்களால் அல்ல, பேராசை மிக்க மகள்களால் தான். ஆனால் வழக்கம் போல மொத்த பழியையும் ஆணின் தலையில் போட்டு விடுவார்கள். 

இன்னொரு விசயம், முன்பு ஒரு பெண் தனது வரதட்சிணை, நகையுடன் புகுந்த வீட்டுக்கு சென்று விடுவாள், இந்த அசையும் சொத்து கணவன் குடும்பத்தின் உரிமையாகி விடும் என்பது. ஆனால் இன்று கூட்டுக்குடும்பங்கள் ஒழிந்த பின்னர், மைக்ரோ குடும்பங்களுக்கு நகரங்களுக்கு நாம் பெயர்ந்த பின்னர் அப்பெண் தன் அசையா சொத்தை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள். பெற்றோரின் மரணத்துக்குப் பின் சொத்து பிரிக்கப்படும் போதும் அவளுக்கு இரட்டிப்பாக செல்வம் கிடைக்கிறது.


 விவாகரத்தானால் அப்பெண் படித்திருந்து வேலை பார்ப்பவள் என்றாலும் தற்காலிகமாக வேலையை விட்டுவிட்டு தன்னை அபலை என்று காட்டிக்கொண்டு ஒரு நல்ல தொகையை செட்டில்மெண்டாகப் பெற்றுக் கொள்கிறாள்.  செட்டில்மெண்டுக்கு ஆண் ஒப்புக்கொள்ளாவிடில்? 


இருக்கவே இருக்கிறது குழந்தை. குழந்தை இல்லாவிடில் அல்லது அந்த மிரட்டல் எடுபடாவிடில் - உச்சநீதிமன்றத்தாலே சட்ட பயங்கரவாதம் என அழைக்கப்பட்ட - சட்டப்பிரிவு 498 A இருக்கிறது. இதை பயன்படுத்தி தன் கணவனும் மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட குடும்பத்தார் தன்னை வரதட்சிணைக்காக கொடுமைப்படுத்தியதாக ஒரு வழக்கு போட்டுவிடுவார்கள். போலீசார் எந்த விசாரணையும் இன்றி கணவனையும் அவனுடைய வயதான பெற்றோரையும் சிறையில் தள்ளி விடுவார்கள். பிணை இல்லாத வழக்கு இது. இந்தியா முழுக்க எத்தனையோ பொய் வழக்குகள் இப்படி போடப்படுகின்றன.


 அதே நேரம் மனைவியர் கொடுமைப்படுத்தப்படுவதும் நடக்கிறதே? இங்கு நாம் வர்க்கப்பிரிவை கவனிக்க வேண்டும். அடித்தட்டை சேர்ந்த படிக்காத பெண்களே குடும்ப வன்முறையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு 498 A பற்றி தெரியாது; காவல்துறையை கைக்குள் போட்டு காரியம் சாதிக்கும் அதிகாரமும் இருக்காது. இந்த சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி தந்திரமாக ஆண்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் வயதான பெற்றோரையும் கொடுமைப்படுத்தி பழிவாங்குவது படித்த பணம் படைத்த பெண்களே. இந்த எதார்த்தத்தை ஊடகங்கள் பேசுவதில்லை. அரசியல் சரித்தன்மையை பேண வேண்டும் என்பது ஒரு காரணம்.

 மற்றொரு காரணம் பாதிக்கப்படாத குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் பெண்களை தாஜா பண்ணி குடும்ப அமைப்பை காப்பாற்ற வேண்டும் எனும் தந்திர மனப்பான்மையை கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே சிலர் அடிபட்டு துன்பப்பட்டால் நமக்கென்ன, நாளை இந்த பெண்கள் மொத்தமாக குடும்ப அமைப்பே வேண்டாம் எனப் போய் விடக்கூடாதே என்பதே அவர்களின் கவலை. அடுத்து ஆண்கள் பயந்து போய் கல்யாணம் பண்ணாமல் இருந்து விடக் கூடாதே. அது சாதியமைப்பில் இருந்து மதம், இறையாண்மை வரை தாக்கம் செலுத்தி எதேச்சதிகார சமூக அமைப்பை சீர்குலைய வைத்து விடுமே எனும் பயம் வேறு. ஆக அவர்களே அதிகார வர்க்கமாக இருப்பதால் முதலைகண்ணீர் வடித்து போலி பெண்ணியவாதிகளாக நாடகம் போடுகிறார்கள். இதனாலே உண்மைகள் தொடர்ந்து பொய்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றன. ஒருநாள் இவர்கள் உருவாக்கிய பூதம் இவர்களையே எடுத்து பந்தாடும். அன்று வரை இந்த முதலைகள் இப்படித்தான் கண்ணீர் நாடகம் போடுவார்கள். 


நவீனப் பெண்கள் எவ்வளவு தந்திரசாலிகள் என்பதற்கு மற்றொரு உதாரணம் தருகிறேன் - அவர்கள் எந்த இடத்திலும் தம் உரிமைக்காக பேசும் போது அதிகாரத்துக்கு எதிராகப் பேச மாட்டார்கள். என் நண்பர் தமிழகத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பணி செய்கிறார். அங்கு - மற்ற கல்லூரிகளைப் போலவே - பெண் ஆசிரியர்கள் சேலை மட்டுமே உடுத்தி வர வேண்டும். நிர்வாகத்தினருடனான ஒரு குறைகேட்பு கூட்டத்தில் ஒரு ஆண் ஆசிரியர் எழுந்து இந்த சேலைக் கலாச்சாரத்தை பெண்கள் மீது திணிப்பது நியாயமல்ல, அவர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும், சுரிதார் அணிந்து படமெடுத்தால் எந்த பிரச்சினையும் இல்லையே என்று உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். நிர்வாகம் உடனே பெண்களின் கருத்தைக் கேட்கிறது. பெண்கள் ஒட்டுமொத்தமாக தமக்காக சேலை அணிந்து வரவே விருப்பம் என்று தெரிவிக்க நண்பருக்கு கடும் அதிர்ச்சி. தனிப்பட்ட முறையில் சேலைக்கு எதிராக குரல் கொடுக்கும் இவர்கள் இந்த இடத்தில் மாற்றி சொல்கிறார்களே என்று அவர் வருந்தியிருக்கிறார். நான் அவரிடம் சொன்னேன், “அந்த ஆசிரியைகள் அப்போது என்ன யோசித்திருப்பார்கள்? இந்த சேலை விவகாரத்தைக் கொண்டு நிர்வாகம் தம்மை ‘பிரச்சினைக்குரியவர்கள்’ என்று கருதக்கூடாதே, ஆண்கள் இந்த இடத்தில் தம்மைவிட ஸ்கோர் பண்ணிவிடக் கூடாதே என்று தான் அவர்களின் சிந்தனை போயிருக்கும். மேலும் எந்த இடத்திலும் அதிகாரம் சிந்திக்கும் கோணத்திலே பெண்களும் சிந்திப்பார்கள். குடும்பத்திலும் இதுவே அவர்களின் இயல்பு. படித்த பெண்கள் எப்போதும் தம் வருமானத்திற்கு, அந்தஸ்துக்கு அபாயம் வரும் ஒரு காரியத்தை பண்ண மாட்டார்கள். அந்த முட்டாள்தனத்தை ஆண்களே எளிதில் செய்வார்கள்.”


இதே போன்ற தந்திரத்தையே படித்த மத்திய, மேற்தட்டுப் பெண்கள் சட்டம், சமூக மாற்றம், திருமணம், வரதட்சிணை, விவாகரத்து என ஒவ்வொரு விசயத்திலும் காட்டுகிறார்கள். தம் தந்திரம் வெளிப்பட்டு விடக் கூடாதே என்று தான் தம்மை பாதிக்கப்பட்டோராக ஒவ்வொரு இடத்திலும் காட்டிக் கொள்ளுகிறார்கள். ஆனால் ஒரு போதும் பாதிக்கப்படும் கீழ்த்தட்டை சேர்ந்த பெண்களுக்காக குரல் கொடுக்கவோ செயல்படவோ மாட்டார்கள். சாதியம், மதவாதம் என எதையும் எதிர்த்து போராட வெளிவர மாட்டார்கள். சொல்லப்போனால் ஆணவக்கொலைகளை முன்னின்று நடத்தியும் காட்டுவார்கள். ஒரே லட்சியம் அதிகாரம் மட்டுமே. 


 இந்த சமூகம் பெண்ணிடம் சற்று கூடுதல் கருணையுடன் இருக்கிறது. அது ஏன்?


பெண்ணுடல் வம்சவிருத்திக்கு முக்கியம். ஆனால் ஆணுடல் உழைப்புக்கு மட்டுமே தேவை. இங்கே உழைக்க ஆண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தற்கொலை பண்ணினால் ஏராளமானோர் கண்ணீர் வடிப்பதை, அது சந்தேகத்துக்குரிய தற்கொலை என்றால் சாலை மறியல், போராட்டம் என பிரச்சினை பண்ணுவதை பார்க்கிறோம். ஆனால் ஒரு ஆண் தற்கொலை பண்ணினால் அவனுடைய பெற்றோரில் இருந்து நெருங்கின உறவுகள் வரை பெரிதாக கவலைப்படுவதில்லை. எப்படி தேனீக்கள் இடையே பெண் தேனீ ராணியாக, முக்கியமானதாக, ஆண் தேனீ தேனை சேகரிப்பதைத் தவிர வேறெதற்கும் உதவாத ஜென்மமாக கருதப்படுகிறதோ, வெறும் அடிமையாக இருக்கிறதோ மனித இனத்தில் ஆண்களும் அப்படியே - நிலவுடைமை சமூகத்தில் ஆணுக்கு இருந்த சொத்துரிமை காரணமாக அவன் வலுப்பெற்றிருந்தான். ஆனால் நவீன சமூகத்தில் அது மெல்ல மெல்ல மாறி இன்று அவன் தான் ஒரு அடிமைத் தேனீ மட்டுமே எனும் உண்மையை அறிந்து கொள்ளத் தொடங்குகிறான். அப்போது அவன் சக்கையாக உறிஞ்சப்பட்டு வெளியே வீசப்பட்டு விடுகிறான். அவன் குரலை யாரும் செவி கொடுத்து கேட்க மாட்டார்கள். இந்த ஆணாதிக்க சமூகம் என சொல்கிறார்களே அது எங்கே எங்கே என அவன் தேடிக்கொண்டிருப்பான். ஆணாதிக்கம் போக ஆண் ஆதரவு சமூகம் கூட இங்கே இல்லை என்பதே எதார்த்தம்.


இதைச் சொல்லும் அதே வேளை யார் விதிவிலக்குகள் என்பதையும் நான் குறிப்பிட வேண்டும்:

1) கடந்த தலைமுறை ஆண்கள்

2) பணக்கார ஆண்கள்

3) அதிகாரம் படைத்த ஆண்கள்

 

இந்த ஆண்கள் மேல்வரும் அநீதிகளை சந்தித்ததோ சந்திப்பதோ இல்லை. ஒன்று அவர்கள் இளமையில் இருந்த போது நம் சமூகப் பொருளாதார அமைப்பு பெண்-சார்பு, பாரபட்சம் கொண்டதாக மாறவில்லை. அன்று இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் இல்லையென்பதால் உறவுகள் நீர்க்குமிழி போல உடைவதில்லை. அன்று ஒரு ஆண் சும்மா இருந்தாலே போது, இந்த சமூகம் அவனைப் பாதுகாக்கும். சாகும் வரை அவனுக்கு சோறுபோட்டு காப்பாற்றும். இன்று அவன் ஒன்று நிறைய பணம் சம்பாதித்து அதிகார மிக்கவனாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் பந்தயத்தில் முன்னிலையில் இருக்க வேண்டும். அல்லாவிடில் அவன் கணவன், அப்பா எனும் இடங்களில் இருந்து துரத்தப்பட்டு தனியாவான். தனியாகக் கிடந்து சாவான். தன் கணவன் உணர்வுரீதியாக தன்னை தொடர்ந்து திருப்திப்படுத்த வேண்டும், தன் தேவைகளை அறிந்து நிறைவேற்ற வேண்டும் என இன்றைய மனைவி எதிர்பார்க்கிறாள். நியாயம் தானே? ஆனால் 40-50 வருட கால வாழ்வில் இதை தினம் தினம் எப்படி செய்ய முடியும்? அவன் என்ன டிவியா, வாஷிங்மெஷினா? அவன் சில நேரங்களில் மனைவி மீது அக்கறை காட்ட முடியாமல் போகும் தான். ஆணுக்கு இயல்பாகவே பல விசயங்களில் ஒரே சமயம் அக்கறை காட்டும் திறன் பெண்களுக்கு இணையாக இல்லை. சில நேரங்களில் அவன் வேலையிலோ போகத்திலோ ஆழ்ந்து போகிறான். அவன் இரு எதிர்முனைகளில் ஊசலாடிக் கொண்டே இருப்பான். பிரிவோம் என மனைவி முடிவெடுக்கும் போதே இது ஒரு பெருங்குற்றம் என அவனுக்கு புரியும். கூடுதல் அன்பும், நேரமும் தானே, இனி தருகிறேன் என்றால் அதற்கெல்லாம் இனி அவகாசம் இல்லை, இந்த உறவு வறண்டு விட்டது என்று அவள் சொல்லுவாள். அவன் அப்போது இதற்கு எந்த விதத்திலும் தயாராக இருப்பதில்லை. ஒரேயடியாக அவன் தன் குடும்பத்தை, வீட்டை, குழந்தைகளை, பணத்தை இழந்து தெருவுக்கு வந்து விடுவான். பெரும்பாலான ஆண்கள் குடிக்கு அடிமையாவார்கள். உடல்நலம் சிதைந்து, மனச்சோர்வில் விழுந்து நாசமாகப் போவார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் பெண்கள் மணமுறிவில் இருந்து வெளிவரும் கூடுதல் திறம் படைத்தவரக்ளாக இயற்கையிலேயே இருக்கிறார்கள்.  அதனாலே அவர்களே மணமுறிவில் முன்னிலையில் நின்று ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண்கள் தயங்கித் தயங்கியே வருகிறார்கள். 


இன்னொரு பிரச்சினை இன்றைய பெண்கள் தம் இளமை குறித்த மிதமிஞ்சிய அக்கறையில் இருக்கிறார்கள். இளமையை ஐம்பது வயது வரை நீட்டிக்க முடியுமெனில் தம்மால் மூன்று, நான்கு இணைகளையாவது ஒரு வாழ்வுக்குள் அடைந்து விட முடிய வேண்டும் என விரும்புகிறார்கள். இதனாலே அவரக்ளின் உபமனம் ஒரு மண உறவை சரிசெய்து அதில் நீடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. உதறி விட்டுப் போ என உத்தரவிடுகிறது. ஆண்களுக்கோ இந்த இளமை குறித்த எந்த எதிர்பார்ப்பு திட்டங்களும் இல்லை. அவன் இயற்கையாக உடலளவில் நீடித்த இளமை கொண்டவன். மேலும் எப்படியிருந்தாலும் வீட்டில் ஒருத்தி இருப்பாள், பார்த்துக் கொள்ளலாம் என அவன் ஒரு கணக்குப் போட்டு வைத்திருப்பான். இந்த கணக்கு தான் இன்று தவிடுபொடியாகிறது. 


ஆனால் பணக்கார ஆண்களுக்கு இது போன்ற நெருக்கடிகள், சிக்கல்கள் இல்லை - அவர்கள் மிக மோசமான கணவர்களாக இருந்தாலும் பணம் அவர்களுக்கு கைகொடுக்கிறது. அவர்கள் எதையும் இழப்பதில்லை. அதே போல அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கும் ஆண்களுக்கும் இப்பிரச்சினைகள் இல்லை. தெருவில் தூங்கும் நிலை ஏற்பட்டாலும் மனைவியோ குழந்தையோ விட்டுப் போக மாட்டார்கள். போக இடமில்லை. கல்வியும் ஒரு காரணம் - கல்வி நம்மை சுயநலமும் தந்திரமும் மிக்கவரக்ளாக்குகிறது. கீழ்த்தட்டு ஆண்கள் அவ்விதத்தில் அதிர்ஷடசாலிகள். இந்த இரண்டு தட்டுகளுக்கும் நடுவில் உள்ள ஆண்களே இன்றைய காலத்தில், அமைப்புகளில் அதிகம் சுரண்டப்பட்டு நாசமாக்கப்படுகிறார்கள்.


இந்த ஆண்களுக்கே நான் ஆண்கள் தின வாழ்த்துக்களையும் அதற்கே உரிய கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...