குவெம்பு விருது பெறும் அண்ணன் இமையத்துக்கு வாழ்த்துக்களும் அன்பும்!
தனது எழுத்துக்கலை மீது இத்தனை நுட்பமான அறிவு கொண்ட மற்றொருவரை நான் கண்டதில்லை. அவருடைய எந்த நாவலை வேண்டுமெனிலும் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் துவக்கம் அவ்வளவு கச்சிதமாக இருக்கும். அதே போலத்தான் கதைக்களனை, அதில் வர வேண்டிய இரண்டாம் நிலை பாத்திரங்களை தேர்வு பண்ணுவது, இவர்களைத் தன் கதையின் அமைப்பின் இன்றியமையாத பகுதியாக்குவது, பிரதான பாத்திரங்களுக்கு நாவலுக்குள் சரியான இடமளிப்பது எனத் திட்டவட்டமாக வகுத்திருப்பார். ஒரு நாவலை நினைத்ததுமே அதன் பாத்திரங்கள் எழுந்து நம் கண்முன் நிற்பது இதனால் தான். இமையத்தின் புனைவுலகம் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டு பலமுறை எடிட்டிங் டேபிளில் முடுக்கி செறிவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைப் போன்றது. இதற்கு மேல் ஓர் அங்குலம் கூட வெட்டியெடுக்க இடமில்லை எனும்படிக்கு சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆணழகன் என அவரது நாவல்களின் வடிவத்தை சொல்வேன்.
இன்னொரு பக்கம் வசனங்களை ஒரு பாத்திரத்தின் பல்வேறு மனோலயங்களை, கதைசொல்லிக்கும் ஒரு பாத்திரத்துக்கும் பிற பாத்திரங்களுக்குமான எல்லைக்கோட்டை அழிக்கும்படியான அபாரமான பாய்ச்சல் கொண்டவையாக எழுதுவார். இந்த தஸ்தாவஸ்கிய எழுத்துப் பாய்ச்சல் வெகுவாக ஆராயத்தக்கது. இமையத்தின் நாவல்களின் உயிர், மானுட வாசம், ஈரம் இந்த வசனங்களில் இருந்தே எழுந்து வருகின்றன.
இறுதியாக அவர் தேர்வு செய்கிற வாழ்க்கை, அதன் அரசியல், அது தனித்துவமானது - இதுவே அதிகம் பேசப்படுவது. ஆனால் இமையம் இன்னும் அசுரத்தனமான ஆகிருதி கொண்ட படைப்பாளி. விரிவாக விவாதிக்கத்தக்கவர். தன்னை ஒரு சமூகத்தினுள் அடக்கிக் கொள்ள விரும்பாதவர்.
இதைப் போன்ற மேலும் பல போற்றத்தக்க விருதுகளை அவர் பெறட்டும்!